Thursday, June 18, 2015

அல்லாஹ்வின் அருள்கனிந்த அண்ணல்நபி சமுதாயம் [பகுதி -2]

 அல்லாஹ்வின் அருள்கனிந்த
அண்ணல்நபி சமுதாயம்
பொல்லாங்கு பொய்சூது
புரியாத சமுதாயம்!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!

மானத்தை விலைபேசி
ஈனத்தில் கிடக்காது
தேவைக்குக் கரமேந்தி
தெருவோரம் நிற்காது!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!
உண்மையே இறைசக்தி
என்றுரைத்த அபூபக்கர்
என்றைக்கும் அச்சத்தை
ஏற்றறியா உமர்பாருக்

அருள்மறையைத் தொகுத்தளித்த
அன்புநிறை அருள் உதுமான்
இருகரத்தில் வாளேந்தி
எதிர்ப்பழித்த புல் அலியார்

வழிவந்த சமுதாயம்
வளம்கண்ட சமுதாயம்
பழிசொல்லித் தரிவோரைப்
புறம்கண்ட சமுதாயம்
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!

நம்ரூத்தை பிர்அவ்னை
எதிர்கொண்ட சமுதாயம்
கொம்பனாம் அபூஜஹலை
கூறுபோட்ட சமுதாயம்
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!

பெண்ணுக்குச் சொத்துரிமை
பிள்ளைகட்கு முழுஉரிமை
கண்ணுக்கு நிகரான
கல்விக்கு முன்னுரிமை

ஈட்டுகிற பொருளுக்கும்
ஏழைவரி விதிபடைக்கும்
ஆட்சியை உலகுக்கு
அறிவிக்கும் சமுதாயம்
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!

உன்னத சமுதாயம்
ஒருக்காலும் தாழாது
என்னதான் எதிர்த்தாலும்
எப்போதும் வீழாது

அல்லாஹ்வின் அருள்கனிந்த
அண்ணல்நபி சமுதாயம்
பொல்லாங்கு பொய்சூது
புரியாத சமுதாயம்!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!

(வேண்டிய கவிதைக் கண்ணிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.)
ஹனீபா நவ்ஷாத்திற்குச் சென்ற மாதம் அனுப்பிய மீதம் உள்ள
மூன்றில் இரண்டாம் கவிதை:----2--
 
Hilal Musthafa

No comments:

Post a Comment