Vikatan.comஇது டாக்டர் ஃபேமிலி
ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும். மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் அப்துல்லா இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார். அவரது மறைவுக்குப் பிறகு, இது மூன்றாவது தலைமுறை.
மறைந்த டாக்டர் அப்துல்லாவுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். மூத்தவர் டாக்டர் செய்யதா, மகப்பேறு மருத்துவா், பாபு அப்துல்லா பொது மருத்துவர், அவரது மனைவி சுல்தானா மகப்பேறு மருத்துவர், சின்னதுரை அப்துல்லா ரேடியாலஜி மருத்துவர், அவர் மனைவி பாத்திமா மகப்பேறு மருத்துவர். இவர்களின் வாரிசுகளும் மருத்துவர்களே. இவர்களின் குடும்பத்தில் தற்போது 20 மருத்துவர்கள் பிராக்டீஸ் செய்துவருகிறார்கள்.
மருத்துவத்தை சேவையாகத் தன் தந்தை தொடங்கிய கதையைச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா. “சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் என் அப்பா. கஷ்டமான சூழலில், அவரின் தாயார் செய்யதம்மாள்தான் படிக்கவைத்தார். பத்தாம் வகுப்புக்கு மேல் வீட்டின் சூழ்நிலை படிக்கவிடாமல் தடுக்க, வேலைக்குப் போனார். அவரது ஆசிரியர் ராமகிருஷ்ண அய்யர்தான் வற்புறுத்தி, அப்பாவைப் படிப்பைத் தொடரவைத்தார். நன்றாகப் படித்து, ‘சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி’யில், பெஸ்ட் அவுட்ஸ்டாண்டிங் மாணவனாக வந்தார். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில், ஹானரி டாக்டராக முதலில் பணியாற்றினார். பிறகு, தாயாரின் பெயரில் செய்யதம்மாள் மருத்துவமனையைச் சிறிய அளவில் ஆரம்பித்தார்.
எங்களுடைய மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால், குறைந்த செலவில் எல்லோருக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று செயல்பட்டார். அவரைப் பார்த்துதான் எங்களுக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. என் தம்பி, தங்கை இருவரும் டாக்டர் இல்லை. ஆனால், எல்லோரும் ஒரே வீட்டில் இருந்ததால், அவர்களின் பிள்ளைகள் இன்று டாக்டர்களாகிவிட்டார்கள். சிலர், எங்கள் மருத்துவமனையிலும், சிலர், வெளியூர் மருத்துவமனைகளிலும் பிராக்டீஸ் செய்கிறார்கள்.
