கட்டுரை ஆசிரியர் : அபூ ரிஸ்வான்
இறைவனின் திருப்பெயரால் …
‘நாடு என்பது நாடா வளத்தைப் பெற்றிருக்க
வேண்டும்’ என்பது ஆன்றோர் மொழி! இம்முதுமொழி நம் இந்தியத்திருநாட்டில்
உலாவந்தாலும் மற்றுமுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். ஒரு நாடு
பெற்றிருக்க வேண்டிய வளங்களை பட்டியல் இட்டாலும் அது நீளும். அதில்
முக்கியமானவைகளை மட்டும் கூறினால் – மனிதவளம், இயற்கைவளம், தொழில்வளம்,
அறிவுவளம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் மனிதவளம் என்பது தலையான
ஒன்று.
இன்று நம் அண்டை நாடான சீனா மற்றும் நாம்
வாழும் இந்தியா இவையிரண்டும் மனித வளத்தில் உலகிலேயே முதல், இரண்டாம்
இடத்தில் உள்ளன. இதுவே இவ்விரு நாடுகளும் வேகமாக வளர்ச்சியடைவதற்கு காரணமாக
உள்ளது.
ஆனால் உலகிலேயே நாகரீகத்தின் உச்சியில்(?)
இருந்து கொண்டிருக்கிறோம் என்று பெருமைபட்டுக் கொள்ளும் மேற்கத்திய உலகில்
இம்மனிதவளம் மிகவும் குன்றிய நிலையிலேயே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக
இன்றைய 31 நாடுகள் அடங்கிய ஐரோப்பா கண்டத்தை எடுத்துக் கொண்டால் அதன்
சராசரி மொத்த கருவுறுந்தன்மை விகிதம் (Total Fertility Rate) ஒரு
பெண்ணுக்கு 1.38 குழந்தைகள் தான்!
இனி மொத்த கருவுறுந்தன்மை விகிதம் (Total
Fertility Rate) என்றால் என்னவென்பதை சற்று விரிவாகப் பார்ப்போம். ஒரு
ஊரில் குழந்தை பெறும் வயதுடைய பெண்கள் (15 வயதிலிருந்து 44 வயது வரை) 100
பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் 100 பேரும்
பெற்றெடுத்த மொத்தக் குழந்தைகள் 200 என்றால் இவ்வூரின் மொத்தக்
கருவுறுந்தன்மை விகிதம் இரண்டு (2) குழந்தைகள் ஆகும். அதாவது சராசரியாக ஒரு
பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் ஆகும். சில பெண்களுக்கு குழந்தையே இல்லாமல்
இருக்கலாம்! மேலும் சிலர் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைக் கூட
பெற்றிருக்கலாம். இந்தக் கணக்குப்படி 100 பெண்களும் பெற்றெடுத்த மொத்தக்
குழந்தைகள் இந்த ஆண்டில் எவ்வளவு உள்ளது என்பது தான்!
