Showing posts with label திருக்குர்ஆன். Show all posts
Showing posts with label திருக்குர்ஆன். Show all posts

Monday, December 10, 2012

தொழுகை ஓதுதலை ஒலிபரப்ப வேண்டாம்!

பள்ளிவாசலில் தொழுவதை வெளி மைக்கின் மூலம் ஒலிபரப்ப வேண்டாம் என்று தமிழகத்தின் மூத்த ஆலிம்களில் ஒருவரான மவ்லவீ, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்களைத் தலைவராகக் கொண்ட நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானம். ஒவ்வொரு மஹல்லாவும் பொறுப்புணர்வுடன் அதை ஏற்று நடப்பது மிகவும் அவசியம் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.

நோன்பு கால தராவிஹ் தொழுகைக்கு மைக்கை தெருவுக்குத்தெரு கட்டி வயோதிகர்களையும், நோயாளிகளையும், பெண்களையும், குழந்தைகளையும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளையும் பற்றி சிறிதுகூட கவனத்தில் கொள்ளாமல்; தொல்லைக்குள்ளாக்கும் செயலை ஏதோ நன்மையான காரியமாக் கருதி அதை நடைமுறைப்படுத்தி வருவது அமைதி மார்க்கமான இஸ்லாம் காட்டித் தந்த வழியல்ல.
கூட்டுத்தொழுகை என்பது பள்ளிவாசலுக்கு வருகின்றவர்களுக்கு மட்டுமே. அதை வெளி மைக் மூலமாகவும் தெருவுக்குத்தெரு குழல் ஒலிபெருக்கி மூலமாகவும் ஒலிபரப்பும்போது வீட்டிலுள்ள பெண்கள் தனித்து தொழும்போது அது எவ்வளவு இடையூறை விளைவிக்கும் என்பதை எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

சில ஊர்களில் நோன்பு காலத்தில் தராவிஹ் தொழுகை மட்டுமின்றி, நோன்பு திறந்து சிறிது நேரத்திற்குள் குர்ஆன் சி.டி.யை மைக்கில் போட்டு நோன்பாளிகளின் நிம்மதியைக் கெடுக்கும் செயலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ‘திருக்குர்ஆன் ஓதக்கேட்டால் அதை செவி தாழ்த்திக் கேளுங்கள்’ என்பது இறைக்கட்டளை. நோன்பாளிகள் நோன்பு திறந்தவுடன் சற்று ஓய்வாக இருக்கும் அந்த நேரத்திலும் குர்ஆனை ஒலிக்கச்செய்வது முறையா?

Wednesday, December 21, 2011

திருமறை நபிமொழி தமிழாக்கப் பணி - ஒரு வரலாற்றுப் பார்வை!

முன்னுரை

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு மொழிபெயர்ப்புத் துறை சிறப்பான பங்காற்றியிருப்பதை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். அதிலும் குறிப்பாக, அரபி மொழியிலிருந்து தமிழுக்குக் கிடைத்துள்ள அரிய கருவூலங்கள் நினைத்துப் போற்றத் தக்கவை ஆகும்.
அவை இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்குவதுடன், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை முறைப்படுத்துவதிலும், இஸ்லாமிய வரையறைக் குட்பட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வழிநடத்துவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றன.
பொதுவான தமிழ் இலக்கியத்திற்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கும் இடையிலான வேறுபாடே, இஸ்லாமிய வேலியைத் தாண்டாமலும், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் மற்ற மொழிகளுக்குச் சற்றும் சளைக்காமலும் தொண்டாற்றுவது தான். இதுவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் கொடையாகும்.
ஒரு சமூகத்தின் நம்பிக்கையை, கலாசாரத்தை, அதன் வழிபாட்டு முறையை, வாழ்க்கைச் சக்கரத்தை கலை நயத்தோடு வெளிப்படுத்துவதே இலக்கியம் ஆகும். 
இஸ்லாமிய இலக்கியம் என்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை, கலாசாரம், வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை ஆகிய வற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
இதற்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், சமூக, பொருளாதார, குடும்ப, தனிமனித ஒழுக்கங்கள் தான் வழிகாட்ட முடியும். இவற்றைத் தாய்மொழியில் அறிந்து அசைபோட இஸ்லாமிய மூலாதார நூல்களே துணை நிற்கும்.
இந்த வகையில், அரபி மொழியில் உள்ள திருக்குர்ஆன், நபிமொழி, சட்டம், வரலாறு உள்ளிட்ட அடிப்படை நூல்கள் தமிழில் இருந்தால்தான், அரபி மொழி அறியாத தமிழ் அறிஞர்கள் அவற்றை அறிந்து, இலக்கியப் படைப்புகளில் கையாள முடியும். தவிரவும், பொதுமக்களும் படித்துணர்ந்து பின்பற்றி வாழ முடியும்.
திருக்குர்ஆன், நபிமொழி, இஸ்லாமியச் சட்டம் ஆகிய மூலாதார நூல்கள் அரபியிலிருந்து உர்து, ஆங்கிலம், பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் திருக்குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
அதையடுத்து திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழி, சட்ட நூல், வரலாறு ஆகிய மூலாதார நூல்கள் படிப்படியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது.
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்
பெரும்பாலான உலக மொழிகளில் உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆன் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலில் சிரியாக் (சுர்யானீ) மொழியில்தான் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. ஏழாம் நூற் றாண்டின் துவக்கத்தில்) முஸ்லிமல்லாத ஒருவரால் சிரியாக் மொழியில் குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டது. அடுத்து பெர்பரீஸ் மொழியிலும், அதை யடுத்து பாரசீக மொழியிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது.
இந்திய மொழிகளில் உருது, ஹிந்தி, குஜராத்தி, சிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலை யாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1. மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி
தமிழில் முதன் முறையாகத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு 1943ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை நாடறிந்த மார்க்க மேதை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள்.
1876ஆம் ஆண்டு பிறந்த மௌலானா அவர்கள், 1906ல் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்றார். பாக்கியாத் நிறுவனர் அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்களது காலத்தில் அங்கு சேர்ந்த மாணவர்களில் முதல் அணியில் மௌலானா அவர்களும் ஒருவர் என்பது சிறப்புக் குரியது.
1929ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான அல்பகராஅத்தியாயத்திற்கு மட்டும் விரிவுரையுடன் மொழிபெயர்ப்பு வெளியிட்டார்கள். பின்னர் முழுக் குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட எண்ணி, வேலூர் பாக்கியாத்தில் நான்கு மாதங்கள் தங்கி, அங்குள்ள பெரிய மார்க்க அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று தர்ஜுமத்துல் குர்ஆன் பி அல்த்தஃபில் பயான்என்ற பெயரில் 1943ஆம் ஆண்டு முழுமையான மொழிபெயர்ப்பு வெளி யிட்டார்கள்.
திருமக்காவில் உள்ள ராபித்தத்துல் ஆலமில் இஸ்லாமீஎனும் உலக முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்று, சஊதி அரசின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்ட சிறப்பு இந்த மொழிபெயர்ப் புக்கு உண்டு. இந்த முதலாவது மொழிபெயர்ப்பு இதுவரை சுமார் 25 பதிப்புகளில் வெளிவந்திருப்பது குறிப்பிடத் தக்கது. அன்று இனிய தமிழில், எளிய நடையில் வெளிவந்த மொழிபெயர்ப்பு என்ற சிறப்பு இதற்கு உண்டு.
 மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்திருமறை நபிமொழி தமிழாக்கப் பணி - ஒரு வரலாற்றுப் பா...
Source : http://khanbaqavi.blogspot.com/

Monday, February 28, 2011

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

 
திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்க வில்லை, இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது? என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.
நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.
முதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.
நபிகள் நாயகத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். (பார்க்க: 14:4)
இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள்.
மற்ற இறைத்தூதர்கள் போல் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அன்றி அகில உலகுக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் எனும் வேதத்துக்குப் பின் உலகில் வேறு வேதம் ஏதும் அருளப்படாது என்பதால் குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.
உலகம் முழுவதற்கும் வழிகாட்ட அருளப்படும் வேதம் அரபு மொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.
அரபு மொழி தான் தேவ மொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.
இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டு நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.
யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.
நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒறுமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனிதகுலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.
ஏதாவது ஒரு மொழியில் தான் உலகாளவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்குத் தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.
குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்? என்பதையும் எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி 570ம் ஆண்டு பிறந்தார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails