பழ. கருப்பையா
அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய
மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள்
விழா அது.
உலகத்தில் பல நபிகள் தோன்றினார்கள்; மோசசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள் என்று ஏற்கிறது திருக்குரான். ஆனால், முகம்மதுநபிதான் இறுதி நபி! முகம்மது நபி "சல்லல்லாகூ அலைஹி வசல்லம்' என்று போற்றப்படுபவர்; சல் என்றால் நபி!
நபிகள் நாயகம் அரபு மண்ணை மட்டுமன்றி, அனைத்துலகத்தையும் மனத்தினில் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் நெறியை உருவாக்கினார். அதைத் "தீன்' என்று இசுலாம் சொல்கிறது. அந்தத் "தீனில்' ஈடுபாடு கொண்டோர் ஒரு கூட்டமாக உருவாவது இயற்கை. அந்தக் கூட்டம் தன் மனம் போன போக்கில் உருவாகிவிடாமல், அதை ஒரு சமூகமாக உருவாக்கியதில்தான், ஓர் அமைப்பைக் கட்டியமைப்பதில் நபிகள் நாயகத்துக்கு உள்ள அளப்பரிய திறனும் மேதைமையும் பளிச்சிடுகின்றன. அதை "உம்மா' என்பார் நபிகள் நாயகம்.
