என் வாழ்வை மாற்றியமைத்த நிகழ்ச்சி
"நான் எப்போது, ஏன் இஸ்லாத்திற்கு
வந்தேன் என்று அடிக்கடி பலர் என்னிடம் கேட்கிறார்கள். இஸ்லாம் என்ற உண்மை
மார்க்கம் எப்போது என்னில் விடியலானது என்பது பற்றிக் குறிப்பாக எனக்குத்
தெரியாது என்று மட்டும் என்னால் கூற முடியும். ஆனால், நான் எப்போதுமே
முஸ்லிமாகவே இருந்து வந்திருக்கின்றேன் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று
தனது வாழ்வைப் பற்றி அறிமுகம் செய்கிறார் ஆங்கிலேயச் சீமாட்டி லேடி எவலின்
கொபோல்டு என்ற ஜைனபு.
ஏனென்றால்,
தன் குழந்தைப் பருவம் முதல் இஸ்லாமியச் சூழலில் (அல்ஜீரியா நாட்டில்)
வளர்ந்து, முஸ்லிம் தோழிகளுடன் சேர்ந்து இறைவணக்கமாகிய தொழுகையைப் பழகி,
அரபு மொழியைப் பேசக் கற்று, உள்ளத்தளவில் முஸ்லிம் சிறுமியாக வளர்ந்து
வந்ததாகப் பெருமைபடக் கூறுகிறார் ஜைனபு.
இஸ்லாமியச் சூழலில் வளர்ந்ததால்,
முஸ்லிம்களின் நடையுடை, பாவனைகள் தன்னிடம் இயல்பாகவே அமைந்துவிட்டதாகக்
கூறும் ஜைனபு, பிற்காலத்தில் இத்தாலி நாட்டிற்குக் குடிபெயர்ந்து சென்ற
பின்னரும் பெரியவளாகி, முஸ்லிம் பெண்கள் அணியும் நீண்ட கருப்பு உடை
(புர்கா) அணியும் பழக்கமுடையவரானார்.

