நம்மிடத்தில், நமக்குள், நம்மைச் சுற்றி உள்ள வளங்கள் யாவும் வல்ல ரஹ்மான் நமக்களித்துள்ள மகத்தான, நிகரற்ற, விலைமதிக்க முடியாத அருட்கொடைகள். அவை எமக்குச் சொந்தமானவை அல்லது பொதுவாக எல்லோரினதும் பாவனைக்குரியவை அல்லது இலவசமாக கிடைப்பவை என்ற ஏதோ ஓர் அடிப்படையில் அவற்றை நாம் நினைத்தவாறு பயன்படுத்துகிறோம்.
அனுபவிக்கிறோம். அளவாக தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டுமென்ற உணர்வு, சிந்தனை பொதுவாக நம் மத்தியில் இல்லாமல் போய்க்கொண்டேயிருக்கிறது. இது ஒரு புறமிருக்க நாமென்ன நல்ல காரியத்துக்குத்தானே பயன்படுத்துகின்றோம். இதற்கும் அளவு வரம்பு பார்க்க வேண்டுமா எனக் கேட்போரும் இல்லாமலில்லை.
வளங்களைப் பயன்படுத்துவது தேவைகளைப் பொறுத்து அமைய வேண்டும். மனிதத் தேவைகளை அத்தியாவசியமானவை, ஆடம்பரமானவை என இரண்டாகக் கூறுபடுத்தலாம். அத்தியாவசியமும் ஆடம்பரமும் ஆள், இடம், சந்தர்ப்பம் ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசப்படுபவை. ஒருவருக்கு ஆடம்பரமான ஒன்று இன்னுமொருவருக்கு அத்தியாவசியமானதாக இருக்கலாம்.
அதுபோல ஒருவருக்கு ஒரு கட்டத்தில் அத்தியவாசியமானதாக இருந்த ஒன்று வேறொரு கட்டத்தில் அவருக்கு ஆடம்பரமானதாக இருக்கலாம். தனது தேவை அத்தியாவசியமானதா அல்லது ஆடம்பரமானதா என்பதற்கு அவரவர் அவரவரின் உள்ளத்தில் தீர்ப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுவாகச் சொல்வதாயின் ஓர் அருட்கொடையை தேவையில்லாத ஒன்றுக்கு பயன்படுத்துவது, தேவையான ஒன்றுக்கு தேவைக்கதிகமாக பயன்படுத்துவது இரண்டுமே கூடாது. இஸ்லாம் இதனைக் கண்டிப்பாக தடைசெய்துள்ளது.