Tuesday, April 28, 2015

ஏகன் இறையோனே ....!

ஏகனவன் தனித்தவன் தன்னிகர் இல்லாதோன்
அனைத்திற்கும் அதிபதி தனக்கென இல்லாதோன்
என்றும் நிலைத்தவன் இணைதுணை இல்லாதோன்
அளவற்ற அருளாளன் தேவையே இல்லாதோன்

எங்கும் நிறைந்தவன் இல்லையென்பதே இல்லாதோன்
சூட்சமங்கள் அறிந்தவன் சுற்றங்கள் இல்லாதோன்
எல்லாம் படைத்தவன் பாரபட்சம் இல்லாதோன்
பாவங்களை மன்னிப்பவன் ஏமாற்றங்கள் இல்லாதோன்

உணவளித்து காப்பவன் ஊணுறக்கம் இல்லாதோன்
அடிபணிதலை விரும்புபவன் அச்சம் இல்லாதோன்
உயிர்களுக்கு உடமையாளன் ஜனனமரணம் இல்லாதோன்
அகிலமெல்லாம் ஆளுபவன் ஆண்டான் இல்லாதோன்
ராஜா வாவுபிள்ளை
 பணித்தானே ஏகன் இறையோனே ....!

Monday, April 27, 2015

அருளே ! அல்லாஹ்வின் அருளே.. நபியே ! அண்ணல் நபியே !



அருளே !

அல்லாஹ்வின் அருளே..

நபியே !

அண்ணல் நபியே !

***

தாங்கள் ...

சுடராய் விரியும்

சூரியக் கதிரா

பனியாய் பொழியும்

பவுர்ணமித் துளியா !

***

விடியலுக்கெல்லாம்

விழிகளைக் கொடுக்கும்

ஒளியின் ஒளியா !

***

அகத்தில் ஈமான்

அமுதினை ஊட்டும்

சுவனத்தின் சுனையா !

***

அரசே !

அழகின் அரசே

விளக்கே

எங்கள் நெஞ்சத்தின் விளக்கே

வாழ்த்துக்கள் சொல்வோம் உங்களுக்கே !


Sunday, April 26, 2015

தனி மையவாடி குறித்து சில விளக்கங்கள்

தனி மையவாடி குறித்து விவாதங்களை கண்டதால் அதுக்குறித்து நான் அறிந்த சில விளக்கங்களை தருவது புரிதலை கொடுக்கும் என்று நினைக்கின்றேன்

தனி பள்ளியை போல தனி மையவாடி என்பது அவ்வளவு எளிதானதல்ல. இது சார்ந்த அரசு அதிகாரிகளிடம் பேசிப்பாருங்கள், புரியும். ஒரு சமூகத்திற்கென ஒரு இடத்தை ஒதுக்கினால், அதே சுற்றுவட்டாரத்தில் அதே சமூகதிற்கென இன்னொரு மையவாடிக்கு அனுமதி கிடைப்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்.

Saturday, April 25, 2015

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி புனித மெக்காவில்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மெக்காவுக்கு வருகை புரிந்தார். மெக்காவில் உள்ள நஸீம் ஏரியாவில் நடந்து வரும் நபிகள் நாயகத்தின் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக மெக்கா வந்திருந்தார் சாரா உமர். இது பற்றி அவர் பேட்டியளிக்கும் போது...

"இஸ்லாம் அன்பையும் கருணையையும் போதிக்கிறது. ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு சிலர் இஸ்லாம் என்றாலே வன்முறை மார்க்கம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். சவுதி அரேபிய அரசு இஸ்லாத்தின் உன்னதமான கொள்கைகளை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்காவையும் மதினாவையும் விரிவுபடுத்தும் மிகப் பெரும் பணியை செய்து வரும் சவுதி அரசை பாராட்டுகிறேன். இந்த கண்காட்சியில் கலந்து கொண்டதற்காக மிகவும் மகிழ்கிறேன். இதே போன்ற கண்காட்சிகளை மற்ற நாடுகளுக்கும் சவுதி அரசு விரிவுபடுத்தி இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை களைய முயலவேண்டும். இந்த கண்காட்சியில் பங்கு பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன்" என்றார்.

Friday, April 24, 2015

கிழக்கு இந்திய கம்பெனியும் மன்னர் ஜஹாங்கீரும்


கி.பி. 1600-ம் ஆண்டுகளில் இந்தியாவில் அன்னிய முதலீட்டை அநுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்தின் ஜார்ஜ் மன்னர் முகலாய மன்னர் ஜஹாங்கீர் முன் சமர்பித்தார். மன்னரின் அநுமதி பெறுவதற் காக ஒரு தூதுக் குழு ஒன்றையும் இந்தியா வுக்கு அனுப்பி வைத்தார். ஜார்ஜ் மன்னரின் கோரிக்கையை ஜஹாங்கீர் ஏற்றுக் கொண் டார்.அவர் அநுமதியின் பேரில் தான் இங்கி லாந்தின் கிழக்கு இந்திய கம்பெனி தனது வர்த்தக நிறுவனத்தை இந்தியாவில் நிறுவி யது. கலகத்தா, மும்பை மற்றும் சென்னை போன்ற நகரங்களில் தொழிற்கூடங்கள் அமைக்கவும் அவர் அநுமதி வழங்கினார்.
பாபரின் ஆட்சி காலத்திலேயே, ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க அவரின் அநுமதிக்காக காத்து கிடந்தன. வணிகம் செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. போர்த்துகீசிய வணிக நிறுவ னங்கள் இந்தியாவில் தொழில் துவங்க முழு அநுமதியை வழங்கியவர் மகா அக்பர். அக்பரின் முழு ஆதரவில் வளர்ந்த இந்த தொழில் நிறுவனங்கள் இந்தியாவை வளப் படுத்தியதோ என்னவோ தங்கள் வருவாயை மேம்படுத்திக் கொண்டன.

Sunday, April 19, 2015

குழந்தையும், தெய்வமும்

குழந்தையும், தெய்வமும்
                                 அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி

“உமது இறைவன் யானைப் படையை என்ன செய்தானென்று அறிவீரா?” (அல்குர்ஆன் 105:1)

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் தோன்றுவதற்கு சில நாட்களுக்கு முன் மக்காவில் நடந்த, சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியை இந்த தெய்வத் திருவசனம் சுருக்கமாக உரைக்கிறது.

  இறையில்லமாம் திருக்கஅபாவை தரிசிப்பதற்கு அகில உலகிலிருந்தும், திரளான மக்கள் வருவதையும், அதனால் அந்நாட்டிற்கு ஏற்படும் பொருளாதார முன்னேற்றத்தையும் கண்டு, பொறாமை கொண்ட யமன் நாட்டு மன்னனாகிய அப்றஹா தனது நாட்டிலும் அது போன்ற ஆலயத்தை நிறுவி, பொருளாதார மேம்பாட்டுக்கு வழி கோல திட்டம் தீட்டினான். அவனது திட்டத்தால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை அவன் நாட்டவர் கூட மதிக்காதது கண்டு மனம் பொருமிக் கொண்டிருக்கும் வேளையில் யாரோ ஒருவர் துணிந்து அவனது ஆலயத்தில் மலஜலம் கழித்து அசிங்கப்படுத்தி  விட்டார். இதனால் அவமானத்திற்குள்ளான அப்றஹா வெகுண்டெழுந்தான். திருக்கஅபாவை நிர்மூலமாக்க முடிவு கட்டினான். அதற்காக யானைப் படையொன்றைத் திரட்டி தானே தலைமையேற்று தாயிப் நகரத்தில் பாளையம் இறக்கினான்.

Saturday, April 18, 2015

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

திருக்குர்ஆன் மருத்துவம்


நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

                      டாக்டர் எம்.ஏ. ஹாருன் >


  “ ( இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.” (அல்குர்ஆன் 76:17)

  இஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது !

  இஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிககாற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ மழைபொழியும் மலைப்பிரதேசங்களில் இஞ்சி சிறந்து வளர்கிறது.

Wednesday, April 15, 2015

.'நீங்களும் உள்ளே போலாம் .தப்பில்லை .வெள்ளை பர்தா போட்ருக்கேளோன்னோ ...அதை மட்டும் எடுத்துட்டேள்ன்னா தாராளமாப் போலாம் ....

அப்போதெல்லாம் ....1988..நானும் ,ராஜமும் மக்ரிபுக்குப் பிறகு வாக்கிங் போவோம் .எப்போதாவது கடைகளில் கொஞ்சம் வாங்கல் ...கொஞ்சம் நடை ...நிறைய கதை ...கொஞ்சம் ஐஸ் க்ரீம் ...

சிதம்பரம் மேலவீத்யில் நடந்து சன்னதிக்குள் புகுந்துவிடுவாள் ராஜம் .கூட்டத்தில் இடிபடாமல் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு ...விடுவிடுவென்று போவது அவளுக்குப்பிடிக்கும் .

கர்ப்பக்கிருகம் தாண்டிப்போகும்போது நான் அவளை நிறுத்துவேன் .

'நா வெயிட் பண்றேன் .சாமி கும்பிட்டு வா !..உள்ளே போய் !...'

'வேண்டாம் ...நீ தனியா நிக்கணும் .வா போலாம் !....'

Tuesday, April 14, 2015

மைதா எனும் அரக்கன்

மைதா எனும் அரக்கன்

          நர்கிஸ் அண்ணா எம்.சேக் அப்துல்லா

  அருமை தங்கைக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  சிலருக்கு பரோட்டா சாப்பிட்டால்தான் தூக்கமே வரும். அந்த அளவுக்கு பரோட்டாவுக்கு அடிமையானவர்கள் பலர் நம்மில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான். இதையே பல ஊர்களில் பலவிதமாகச் செய்கிறார்கள். மதுரை பக்கம் போனால் சும்மா மெத்மெத்தென்று அடித்த மாவில் செய்த சுவையான பரோட்டா கிடைக்கும். விருதுநகர் பக்கம் சென்றால் எண்ணெயில் சுட்ட பொறித்த பரோட்டா கிடைக்கும். அப்படியே செங்கோட்டை பார்டர் கடைக்குச் சென்றால் கோழிக்குழம்புடன் அள்ளி அள்ளி விழுங்கத் தோன்றும் சுவையான பரோட்டா கிடைக்கும். இப்படி ஒவ்வொரு பரோட்டா பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.

  பரோட்டாவுக்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது பரோட்டா வரலாறு அல்ல. அதை செய்யப் பயன்படும் மைதாவுக்கான வரலாறு. மைதா என்றொரு பொருள் ஆங்கிலேயர்களால்தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரையில் இந்தியாவில் கோதுமையில் பயன்பாடுதான். அதில்தான் ரொட்டி சுடுவது சப்பாத்தி சுடுவது எல்லாம். தனிக்காட்டு ராஜாவாக இந்தியாவில் கோதுமை கோலோச்சிக் கொண்டிருந்தபோது அதற்கு ஆப்பு வைத்தது இரண்டாம் உலகப்போர். போர் வீரர்களுக்கு பெருமளவில் கோதுமை தேவைப்பட்டது. இதனால் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கோதுமைக்கு மாற்றுப் பொருளை கண்டறியும் முயற்சி தீவிரமானது. அப்போது அறிமுகமானதுதான் மைதா. அதாவது மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவுடன் சில ரசாயனங்களையும் சேர்மானங்களையும் சேர்த்து தயாரிப்பதுதான் மைதா. இந்த மைதா மிக எளிதாக உருட்டவும் மாவு பிசையவும் வந்தது. கோதுமையைக் காட்டிலும் விலை குறைவாக இருந்தது. இதனால் மக்களிடம் எளிதில் மைதா புகழ் பெறத் தொடங்கியது. குறிப்பாக ஏழை மக்களின் உணவுப் பொருளாக மைதா பிரபலமானது. அதுவே படிப்படியாக வளர்ச்சி பெற்று நாகரீக உணவு பொருளாகியது.

Monday, April 13, 2015

திரு ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள்.

என் உயர் மதிற்பிற்குரிய திரு வாலறிவன் குமார் ஐயா
கைகோர்த்து வைத்த உயர்நெறி சிந்தனையாளர் அன்பிற்கினிய ஐயா..

.திரு ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள்.

சென்னை சீதக்காதி அறக்கட்டளை, இஸ்லாமிய இலக்கியக் கழகம், புதுக்கோட்டை கலைமான் அறக்கட்டளை, திருச்சி இனாம்குளத்தூர் Islamic Research Centre of Scripture & Culture முதலிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களின் விருதுகளைப் பெற்றவர். கவிஞர்,எழுத்தாளர்,நூலாசிரியர்,ஆய்வாளர்,பதிப்பாசிரியர்,சொற்பொழிவளர் எனத் தனித்தன்மையோடு இயங்கிவருபவர்.

உலக வாழ்வு உல்லாசமே!

உலக வாழ்வு உல்லாசமே!
Written by N. B. அப்துல் ஜப்பார்

உலக சரித்திரத்தில் நடக்கிற சிற்சில ஆச்சரியமான அதிசய நிகழ்ச்சிகளுக்கு எவருமே எக்காரணமும் சொல்ல முடிகிறதில்லை. அப்படிப்பட்ட பேரற்புத வைபவங்களைச் சிந்தித்துப் பார்க்கும்போதுதான் இறைவனென்பான் ஒருவன்

இருக்கிறான்; அவன் நாடியபடியேதான் எல்லாம் நடக்கும்; நம் கையிலே ஒன்றுமில்லை என்பது மிகத்தெளிவாய்ப் புலனாகின்றது. நீங்களே சொல்லுங்கள் : நெப்போலியன் ஏன் வாட்டர்லூ போரில் தோல்வியடைய வேண்டும்? முதல் உலக யுத்தத்தில் கெய்ஸர் ஏன் ஜெயிக்கவில்லை? சமீபத்தில் நடந்த மஹா யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லர் வெற்றிக்குமேல் வெற்றியடைந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கைப்பற்றியிருந்தும், ருஷ்யாவுடன் ஜெர்மனி ஆதியில் சினேகமாயிருந்தும், கிரேட் பிரிட்டன் என்னும் இங்கிலாந்தைக் கவளீகரம் பண்ணிவிட்டு மறுவேலை பார்ப்பதென்று அவன் வீரக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தும், டன்கர்க்கிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு புறமுதுகிட்டோடிய பிரிட்டிஷாரைத் துரத்திக்கொண்டே ஹிட்லர் ஏன் இங்கிலாந்தின்மீது அதுகாலைப் படையெடுக்கவில்லை? அப்படி அவர் படையெடுத்துச் சென்றிருந்தால், அந்த நேரத்தில் பிரிட்டிஷார் நிபந்தனையற்ற சரணாகதியையே யடைந்திருப்பரல்லவா? இருந்தும் அவணை, இங்கிலீஷ் கால்வாயைக் கடக்காமல் தடுத்து நிறுத்திய சக்தி எது? இவ்வுதாரணமும் இருக்கட்டும். அன்று உஹத் யுத்தத்தில் குறைஷிகளைத் தக்க தருணத்தில் பின்னிடையச் செய்தது எது? இது போகட்டும்; ஹிஜ்ரத்தின்பொழுது தவ்ர்க்குகை வாயில்வரை சென்று துருவிய மக்கத்துமறமாக்களை உள்ளே எட்டிப்பார்த்து அல்லாஹ்வின் திருநபியையும் (சல்) அபூபக்ரையும் (ரலி) பிடிக்கவொட்டாது தடுத்து நிறுத்திய சக்தி எது?

Sunday, April 12, 2015

அவர் திருமதி .பாத்திமா முசாபர் ஆகிப்போனார் .அன்பு மட்டும் அப்படியே நிலைத்திருக்கிறது .அவர் இன்னொரு நர்கிஸ் 'மா .


1978-ல் ஒரு பாப் கட்டிங் ....பட்டுப்பாவாடை -யுடன் குட்டி பாத்திமா வடகரை பக்கர் மாமா வீட்டில் எனக்கு அறிமுகமானார் .
மாமா இறந்து ஏழோ ,நாற்பதோ ..பத்திஹா .சமத் மாமா ,நர்கிஸ்'மா கும்பத்தினருடன் கலந்து கொள்ள வந்திருந்தனர் .சிஸ் .அல்வியா தவிர்த்து என்று நினைக்கிறேன் .
நானும் இன்னொரு பெண்ணும் பாத்திமாவுடன் மாடி ஏறினோம் ...காற்றாட ...

'உம் பேரென்னம்மா ?...'என்றேன் .

'அப்பா !..எப்டி சில்லுன்னு காத்து வர்து !..எம்பேரு பாத்திமா !...உங்க பேரு என்ன ?..'
என்றது அந்தச்சின்னப்பெண் .

'எம்பேரு பானு !'...என்றேன் .'

Friday, April 10, 2015

என்னமாய் ஒரு கனிவான உபசரிப்பு அந்த மனிதருக்கு ...

ஒன்றரை வருடங்களாயிற்று ...நாகூர் ஹனிபா மாமாவை பார்க்க என்று இருவரும் சென்றிருந்தோம் .காதில் விழாத காரணத்தினால் பேப்பரில் எழுதிக்காண்பிக்கச் சொன்னார்கள் .படித்துவிட்டு ஹாருன் அவர்களை தன் கரங்களால் வளைத்து அணைத்துக்கொண்டார் .

பக்கரண்ணன் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் .1978-ல் வடகரை எம் .எம் .பக்கர் .எம் எல் சி மறைந்த நாளை மறக்காமல் நினைவு கூர்ந்தார் .தான் இரவு லேட்டாக வீட்டுக்கு வந்ததாகவும் ..தன் மகள் மும்தாஜ் ஓடிவந்து ..'வாப்பா ...பெரிய வாப்பா நம்மையெல்லாம் விட்டு விட்டு சென்று விட்டார்கள் ...'என்று கதறி அழுததாகவும் ...உடனே தாமதிக்காமல் தான் வடகரை கிளம்பி வந்து விட்டதாகவும் ...எந்த சம்பவத்தையும் மறக்காமல் ..பேச்சில் தங்கு தடையில்லாமல் ...கம்பீரமான குரலில் பேசி எங்களை கலங்கடித்தார் .

இது டாக்டர் ஃபேமிலி

Vikatan.comஇது டாக்டர் ஃபேமிலி

ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும். மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் அப்துல்லா இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார். அவரது மறைவுக்குப் பிறகு, இது மூன்றாவது தலைமுறை.
மறைந்த டாக்டர் அப்துல்லாவுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். மூத்தவர் டாக்டர் செய்யதா, மகப்பேறு மருத்துவா், பாபு அப்துல்லா பொது மருத்துவர், அவரது மனைவி சுல்தானா மகப்பேறு மருத்துவர், சின்னதுரை அப்துல்லா ரேடியாலஜி மருத்துவர்,  அவர் மனைவி பாத்திமா மகப்பேறு மருத்துவர். இவர்களின் வாரிசுகளும் மருத்துவர்களே. இவர்களின் குடும்பத்தில் தற்போது 20 மருத்துவர்கள் பிராக்டீஸ் செய்துவருகிறார்கள்.

மருத்துவத்தை சேவையாகத் தன் தந்தை தொடங்கிய கதையைச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா. “சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் என் அப்பா. கஷ்டமான சூழலில், அவரின் தாயார் செய்யதம்மாள்தான் படிக்கவைத்தார். பத்தாம் வகுப்புக்கு மேல் வீட்டின் சூழ்நிலை படிக்கவிடாமல் தடுக்க, வேலைக்குப் போனார். அவரது ஆசிரியர் ராமகிருஷ்ண அய்யர்தான் வற்புறுத்தி, அப்பாவைப்  படிப்பைத் தொடரவைத்தார். நன்றாகப் படித்து, ‘சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி’யில், பெஸ்ட் அவுட்ஸ்டாண்டிங் மாணவனாக வந்தார். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில், ஹானரி டாக்டராக முதலில் பணியாற்றினார். பிறகு, தாயாரின் பெயரில் செய்யதம்மாள் மருத்துவமனையைச் சிறிய அளவில் ஆரம்பித்தார்.

எங்களுடைய மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால், குறைந்த செலவில் எல்லோருக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று செயல்பட்டார். அவரைப் பார்த்துதான் எங்களுக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. என் தம்பி, தங்கை இருவரும் டாக்டர் இல்லை. ஆனால், எல்லோரும் ஒரே வீட்டில் இருந்ததால், அவர்களின் பிள்ளைகள் இன்று டாக்டர்களாகிவிட்டார்கள். சிலர், எங்கள் மருத்துவமனையிலும், சிலர், வெளியூர் மருத்துவமனைகளிலும் பிராக்டீஸ் செய்கிறார்கள்.

Thursday, April 9, 2015

உனை சுத்தம் செய்யும் பாக்கியம் பெற்றேன் உனை தனித்து தூக்கி சுமந்த பாக்கியமும் பெற்றேன்.



குணங்குடி மஸ்தானுக்கு
குரல் கொடுத்த கோமான் நாகூர் ஹனீபா

பதறுகள் எல்லாம் நெஞ்சு நிமிர்த்தி
நடைபோடும் நவீன உலகில்

சமகால தோழரை கொண்டாடிய
நெஞ்சுறுதி மிக்க பெருமகன்.

ஆம்

அய்யா கலைஞரும்
நாகூர் ஹனீபாவும் நண்பர்கள்.

அதை ஒப்புக்கொண்டு

உடைந்து அழுத அய்யா கலைஞரின்
முகம் கண்டு சொல்கிறேன்.

அய்யா நீடூர் சயீது அவர்களின் தோழர்,
திருமண நாள் மாப்பிள்ளை தோழரும் கூட

குரலில் தனித்து நின்றாய் நீ
தனித்து இஸ்லாத்தை சொன்னாய் நீ

Friday, April 3, 2015

உங்கள் மதிப்பை யாரும் குறைத்துப் போட்டு விட முடியாது!

                                                 S.A. மன்சூர் அலி
“மக்கள் சுரங்கங்கள்” – எனும் இந்த நபி மொழியை நாம் திரும்பவும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

இந்த அத்தியாயத்தில் இன்னும் ஒரு பாடத்தைப் படித்துக் கொள்வோம்.

மனிதர்கள் அனைவருமே தங்கத்தைப் போல வெள்ளியைப் போல் எனும் போது

நானும் விலை உயர்ந்தவன் தானே!

நானும் விலை மதிப்பற்றவன் தானே!

நான் ஏழையாக இருக்கிறேன். அதனால் என்ன? நான் ஒரு சுரங்கம் அல்லவா?

நான் கருப்பாக இருக்கின்றேன். அதனால் என்ன? நானும் தங்கத்தைப் போன்றவன் தானே!

நான் “தாழ்த்தப் பட்ட” (கவனியுங்கள்…. தாழ்ந்த அல்ல!) வகுப்பில் பிறந்தவன். அதனால் என்ன? நானும் ஆதத்தின் மகனே… எனவே இறைவனால் கண்ணியப் படுத்தப் பட்டவன் தானே!

ஆங்கிலத்தில் ஒரு சொற் பிரயோகம் உண்டு: அதனை Self Esteem என்று சொல்கிறார்கள். இதற்கு “சுய மதிப்பு” என்று பொருள் கொள்ளலாம். அதாவது – நமக்கு நாமே போட்டுக் கொள்கின்ற மதிப்பு!! அதாவது நமது மதிப்பை நாம் தான் நிர்ணயம் செய்து கொள்கிறோம்.

இந்த Self Esteem நமது வாழ்க்கையின் வெற்றிக்கு மிக அவசியம்.

அற்புதமா, அற்பமா?

மறுமையை நம்பும்
மார்க்கம் எனது

உயிருடல் ஒடுங்கி
உணர்வுகள் ஒன்றி
ஒருவனை வழிபடும்
வாழ்க்கை எனது

குறுகிய இம்மையையும்
இறுதியில் தீர்ப்பையும்
உறுதியாய் ஏற்கும்
உள்ளம் எனது

Wednesday, April 1, 2015

பெர்முடா முக்கோணமும் இஸ்லாமிய சிந்தனையும்..

மதுரையில் வசித்துவரும் இந்த முதியவர் 1953 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வியாபாரத்திற்கு கப்பலில் அடிக்கடி சென்றுவருவாராம். ஒரு தடவை இவரும்,இவருடன் சென்ற பயணிகளும் உள்ள கப்பல் பெர்முடா முக்கோணத்தில் சிக்கிக்கொண்ட போது இருந்தவர்கள் அனைவரும் அலறினோம்,பயந்தோம் அதில் எங்களோடு பயணித்த ஒரு முஸ்லிம் பயம் இல்லாமல் எங்களை பார்த்து சொன்னார் பயப்பிடாதீர்கள் நம்மோடு அல்லாஹ்வும் இருக்கிறான். நிச்சயம் நம்மை காப்பாத்துவான் என்று வானை நோக்கி இறைவா எங்கள் பயணத்தை லேசாக்கு! என்று பிரார்த்தனை செய்தார் நாங்கள் பெர்முடா முக்கோணத்தில் இருந்து மீண்டோம். பின்னர் அந்த முஸ்லிம் சகோதரரை அனைவரும் பாராட்டினோம் அப்போது அவர் சொன்னார் என்னை பாராட்டுவதை விட அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் என்றார்.நாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி அவரிடம் கேட்டோம் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொன்னார் பொறுமையோடு.

LinkWithin

Related Posts with Thumbnails