S.A. மன்சூர் அலி
“மக்கள் சுரங்கங்கள்” – எனும் இந்த நபி மொழியை நாம் திரும்பவும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.
இந்த அத்தியாயத்தில் இன்னும் ஒரு பாடத்தைப் படித்துக் கொள்வோம்.
மனிதர்கள் அனைவருமே தங்கத்தைப் போல வெள்ளியைப் போல் எனும் போது
நானும் விலை உயர்ந்தவன் தானே!
நானும் விலை மதிப்பற்றவன் தானே!
நான் ஏழையாக இருக்கிறேன். அதனால் என்ன? நான் ஒரு சுரங்கம் அல்லவா?
நான் கருப்பாக இருக்கின்றேன். அதனால் என்ன? நானும் தங்கத்தைப் போன்றவன் தானே!
நான் “தாழ்த்தப் பட்ட” (கவனியுங்கள்…. தாழ்ந்த அல்ல!) வகுப்பில் பிறந்தவன். அதனால் என்ன? நானும் ஆதத்தின் மகனே… எனவே இறைவனால் கண்ணியப் படுத்தப் பட்டவன் தானே!
ஆங்கிலத்தில் ஒரு சொற் பிரயோகம் உண்டு: அதனை Self Esteem என்று சொல்கிறார்கள். இதற்கு “சுய மதிப்பு” என்று பொருள் கொள்ளலாம். அதாவது – நமக்கு நாமே போட்டுக் கொள்கின்ற மதிப்பு!! அதாவது நமது மதிப்பை நாம் தான் நிர்ணயம் செய்து கொள்கிறோம்.
இந்த Self Esteem நமது வாழ்க்கையின் வெற்றிக்கு மிக அவசியம்.
நம்மைப் பற்றிய நமது மதிப்பீடு குறைவாக இருக்கிறது என்றால் இதனை Low Self Esteem என்கிறார்கள். இப்படி குறைவாக தங்களை மதிப்பிட்டுக்கொள்பவர்கள் வாழ்வில் எதனையும் சாதித்திட இயலாது.
எனவே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் நமது சுய மதிப்பீட்டை “கட்டி எழுப்பிட வேண்டும்”. (to build a strong self esteem).
எப்படி கட்டி எழுப்புவது நமது மதிப்பீட்டை?
இதற்கு இரண்டு வழிகள் தான் உண்டு.
ஒன்று – உங்களுக்கும் உங்களைப் படைத்த இறைவனுக்கும் ஒரு உறவுப் பாலத்தை அமைத்துக் கொள்வது.
இரண்டு – என்னால் இவ்வுலகுக்கு “எனது திறமைகளைக் கொண்டு நல்லதொரு பங்களிப்பைச் செய்திட முடியும் என்று கருதும் போது!
முதல் வழியை இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்:
என்னைப் படைத்த இறைவனை நான் ஏற்றுக் கொள்ளும் போது – எனக்கு இரண்டு “பதவிகள்” கிடைத்து விடுகின்றன.
பதவி ஒன்று: நான் இறைவனின் அடிமை! நான் இறைவனின் அடிமை ஆகின்றேன் என்றால் எனது மதிப்பீடு எப்படி உயரும்?
“என் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் நான் அடிமை அல்ல!” – என்ற அழுத்தமான நம்பிக்கை நமது மதிப்பை பன்மடங்கு உயர்த்தி விடும்!
பதவி இரண்டு: நான் இந்தப் பூமியில் இறைவனின் பிரதிநிதி. Viceroy of God on earth. இறைவனுக்கே நான் பிரதிநிதியா – என்று வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம்! நாம் அனைவருமே இறைவனின் பிரதிநிதிகள் தாம் இந்தப் பூமியிலே!
நீங்கள் உங்களுக்குள்ளேயே – “நான் இறைவனின் அடிமை; நான் இறைவனின் பிரதிநிதி” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருங்கள் – மனதுக்குள் உங்களைப் பற்றிய உயர்வான ஒரு எண்ணம் தோன்றுவதை உணர்வீர்கள்.
எனவே தான் – இறை நம்பிக்கையாளன் ஒருவன் யாருக்கும் முன்னால் சிரம் பணிந்திடுவதில்லை!
பணிவு அவனிடம் குடி கொண்டிருக்கும். ஆனால் தலை நிமிர்ந்து வாழ்கின்ற வாழ்க்கைக்கு சொந்தக் காரனாக அவன் இருப்பான். தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் அவனிடம் இருக்கும். ஆனால் மற்ற எவரையும் அவன் இழிவு படுத்திடுவதில்லை.
இரண்டாவது வழியை இப்போது பார்ப்போம்:
“எனது திறமைகளைக் கொண்டு நல்லதொரு பங்களிப்பை என்னால் இவ்வுலகுக்குச் செய்திட முடியும்” – என்று எண்ணும் போது ஒருவனின் சுய மதிப்பு உயர்கிறது என்று சொன்னோம் அல்லவா!
அதாவது – இது எப்போது சாத்தியம் என்றால் – ஒருவன் தனது உள்ளாற்றல்களைக் கண்டு பிடித்திடும் போது தான். இதனை ஆங்கிலத்தில் Self discovery என்கிறார்கள். இது தான் மனித வள மேம்பாட்டின் நோக்கமுமாகும்.
Faith in God builds our Self Esteem!
Self discovery also builds our Self esteem!!
அதாவது – இறை நம்பிக்கை ஒருவனின் சுய மதிப்பை உயர்த்துகிறது1
ஒருவன் தனது ஆற்றல்களைக் கண்டு பிடிக்கும் போதும் அவனது சுய மதிப்பு உயர்கிறது.
உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது உங்கள் கரத்தில் தான் இருக்கிறது.
உங்கள் மதிப்பை யாரும் குறைத்துப் போட்டு விட முடியாது – நீங்களே உங்கள் மதிப்பை குறைத்துக் கொண்டாலே தவிர!
நன்றி : http://niduronline.com/?p=8393
No comments:
Post a Comment