குழந்தையும், தெய்வமும்
அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி
“உமது இறைவன் யானைப் படையை என்ன செய்தானென்று அறிவீரா?” (அல்குர்ஆன் 105:1)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் தோன்றுவதற்கு சில நாட்களுக்கு முன் மக்காவில் நடந்த, சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியை இந்த தெய்வத் திருவசனம் சுருக்கமாக உரைக்கிறது.
இறையில்லமாம் திருக்கஅபாவை தரிசிப்பதற்கு அகில உலகிலிருந்தும், திரளான மக்கள் வருவதையும், அதனால் அந்நாட்டிற்கு ஏற்படும் பொருளாதார முன்னேற்றத்தையும் கண்டு, பொறாமை கொண்ட யமன் நாட்டு மன்னனாகிய அப்றஹா தனது நாட்டிலும் அது போன்ற ஆலயத்தை நிறுவி, பொருளாதார மேம்பாட்டுக்கு வழி கோல திட்டம் தீட்டினான். அவனது திட்டத்தால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை அவன் நாட்டவர் கூட மதிக்காதது கண்டு மனம் பொருமிக் கொண்டிருக்கும் வேளையில் யாரோ ஒருவர் துணிந்து அவனது ஆலயத்தில் மலஜலம் கழித்து அசிங்கப்படுத்தி விட்டார். இதனால் அவமானத்திற்குள்ளான அப்றஹா வெகுண்டெழுந்தான். திருக்கஅபாவை நிர்மூலமாக்க முடிவு கட்டினான். அதற்காக யானைப் படையொன்றைத் திரட்டி தானே தலைமையேற்று தாயிப் நகரத்தில் பாளையம் இறக்கினான்.
திருக்கஅபாவை தாக்க வந்த தன்னை மக்காவாசிகள் தடுத்தி நிறுத்தி, பெரும்படை திரட்டுவார்களென மனப்பால் குடித்தான். ஆனால் மக்காவில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லையென்பதை அறிந்து ஏமாற்றமடைந்தான். யுத்தம் செய்ய ஆயத்தமாகாவிட்டாலும், உடன்படிக்கை செய்யவாவது தலைவர்கள் தன்னை வந்து சந்திக்காதது அவனுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. அத்தருணத்தில் மக்காவின் பிரதான தலைவராகிய அப்துல் முத்தலிப் அவர்கள், அவனிடன் வருகை தந்தார்கள். அவர்களை அவன் வரவேற்று, வந்த காரணத்தை வினவுகிறான். “புறநகர்ப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த எனது இருநூறு ஒட்டகைகளை உங்கள் வேவுப் படையினர் பிடித்துள்ளார்களென அறிந்து அவைகளை மீட்டுப் போக வந்தேன்” என்று அப்துல் முத்தலிப் பதிலுரைக்கிறார்கள்,
அதைச் செவியுற்ற அப்றஹா ஏளனமாகச் சிரித்துவிட்டு, “தங்களது தோற்றம் பொதுநலத் தியாகியை நினைவூட்டுகிறது. ஆனால் தாங்களோ சுயநலமியாக இருக்கிறீர்களே ! தங்களது ஒட்டகையைக் கேட்க வந்திருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களது புனித இல்லத்தையல்லவா?” தாக்க வந்துள்ளேன். அதுபற்றி தாங்கள் கவலைப்படவில்லையா?” எனக் கேட்டான். “அரசே ஒட்டகத்துக்கு சொந்தக்காரன் நான் ! எனவே அவற்றைக் காப்பது எனக்கு அவசியம். ஆனால் திருக்க அபாவிற்குச் சொந்தக்காரன் வேறொருவன். அவன் அதைக் காப்பான். நான் ஏன் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?” என்று அப்துல் முத்தலிப் பகர்ந்தார்கள். அவர்களின் பதிலைக் கேட்டு அதிர்ச்ச்சியடைந்த அப்றஹா ஒட்டகைகளை திருப்பியளிக்குமாறு தனது படைக்கு உத்தரவிட்டான்.
மக்கா திரும்பிய அப்துல் முத்தலிப் அவர்கள் நேராக திருக்கஅபாவிற்கு சென்று அதன் திரையைப் பிடித்துக் கொண்டு, “இறைவா! அடியான் தனது பொருளைக் காப்பான். நீ உனது பொருளைக் காத்துக் கொள். அந்த எதிரிகளின் படைகள் உனது புனித இல்லத்தை வென்றுவிட இடமளித்துவிடாதே ! ஆனால், நீ பாதுகாக்காமல் விட்டுவிட்டால், நீ விரும்பியதைச் செய்துக் கொள்!” என்ற பொருள் படும்படி கவியைப் பாடி விட்டு மக்காவாசிகளை மலைக் குன்றுகளில் ஏறிப் பதுங்கிக் கொள்ள உத்தரவிட்டார்கள்.
அப்றஹா திருக்கஅபாவை தாக்க முனைந்தபோது “அபாபீல்” என்ற சிறிய பறவைகள் பொடிப் பொடி கூழாங்கற்களைக் கொண்டு அவனையும், அவனது யானைப் படையையும் உருத்தெரியாது சிதைத்து விட்டன.
இதுபோன்ற சரித்திரங்களை இறைவன் பொழுதுபோக்கிற்காகவோ, கதை கேட்பதற்காகவோ அருளவில்லை. ‘முன்னோர்களின் சரித்திரங்கள் பின் காலத்தவருக்கு சீரிய வழிகாட்டி’ என்ற அரபியப் பழமொழிக் கொப்ப படிப்பினை பெறுவதற்காகவே இறைவன் திருக்குர் ஆனில் சரித்திரங்களையும் இடம் பெறச் செய்துள்ளான். அந்த அடிப்படையில் இந்த யானை அத்தியாயமும் படிப்பினைகள் பலவற்றை அளிக்கிறது.
கஅபாவின் காவலனாகிய அல்லாஹ், கஅபாவை எதிரியின் சூழ்ச்சியிலிருந்து காத்தபோது, உங்களின் காவலனாகிய அல்லாஹ் உங்களை துன்பச் சூழல்களிலிருந்து காக்க மாட்டானா? நீங்களென்ன தாயில்லாப் பிள்ளைகளா? தலைவனில்லா பிரஜைகளா? அப்துல் முத்தலிப் திருக்கஅபாவைக் காக்க இறைவனிடம் முறையிட்டது போன்று நீங்களும் ஏன் முறையிடுவதில்லை? அவன் காக்க மாட்டான் என்ற எண்ணமா? அல்லது நமக்கு ஏது எஜமானன் என்ற மமதையா? இந்த சிந்தனையை நாம் தொலைத்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த அத்தியாயத்தை திரும்பத் திரும்ப மஃக்ரிப் தொழுகையில் ஓதும் படியாகப் பணிக்கப்பட்டுள்ளது. நம்மில் சிலருக்கு இறைவனிடம் இறைஞ்ச வேண்டுமென்ற எண்ணமே தோன்றுவதில்லை. வேறு பலர் துன்பம் சூழும்போது மட்டும் இறைவனை அணுகுவதும், செல்வமும் செல்வாக்கும் ஏற்படும்போது மறப்பதும் வழக்கத்தில் பழக்கமாகி விட்டன. கடனுக்காக சரக்கை பெறுவதற்கு மட்டும் ஒரு கடைக்குச் சென்று விட்டு, ரொக்கமாக பணம் கொடுத்து வாங்கும்போது வேறு கடைக்குச் சென்றால், கடன் தருபவர் தொடர்ந்து தருவாரா? அதுபோன்றே துன்பம் வரும்போது மட்டுமே இறைவனை அணுகுபவரை இறைவன் விரும்புவதில்லை அவர்கள் உண்மையான விசுவாசிகளுமல்லர்.
சிறு குழந்தையைப் பாருங்கள். அது தனது தாயை, தனக்கு காவலராக மனதில் வடித்துக் கொள்கிறது. எனவே காலில் முள் குத்தினாலும் அதை எடுக்க அது முனைவதில்லை. “அம்மா முள் குத்தி விட்டது” என்று கதறிக்கொண்டு ஓடி வருகிறது. அசுத்தம் பட்டுவிட்டால், “அம்மா அசுத்தம் பட்டுவிட்டது” என்று குரல் கொடுக்கிறது. மிட்டாய் ஒன்று கீழே கிடப்பதைக் கண்டால் அதை எடுக்க துணியாமல், “அம்மா மிட்டாய் கிடக்கிறது” என்று கூவிக் கொண்டே தாயிடம் வருகிறது. பசித்தாலும் “அம்மா”, தலை வலித்தாலும் “அம்மா”, உதிரம் வழிந்தாலும் “அம்மா”, உறக்கம் வந்தாலும் “அம்மா”, ஏன் அந்தத் தாயே அடித்தாலும் கூட “அம்மா” தான்
குழந்தை தாயை தனக்கு காவலனாக வடித்துக் கொண்டதைப் போன்றுதான், நாமும் இறைவனை நமது காவலனாக வடித்துள்ளோம். எனவே குழந்தைகளைப் பார்த்தாவது நாம் பாடம் படிக்க வேண்டும். அவைகள் செயலாற்றிக் காட்டுவது தான் உண்மையான எஜமான விசுவாசம்.
குழந்தைகளைப் போன்றே நாமும் நமது ஒவ்வொரு அசைவிலும் இறைவனிடம் தொடர்பு கொள்ளுதல் வேண்டும். அத்தகைய தொடர்பைத்தான் இறைவன் எதிர் நோக்குகிறான். நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள். “செருப்பு வார் அறுந்து விட்டது உட்பட அனைத்து தேவைகளையும் நீங்கள் உங்கள் இறைவனிடம் கேட்டுப் பெறுங்கள்.” (அல்ஹதீஸ்) அவ்வாறு நாம் நடந்து கொள்ளும்போது கவலையற்ற சலனமற்ற குழந்தை உள்ளம் படைத்தவராகி விடுவோம். “அறிந்து கொள்ளுங்கள். நிச்சயம் அல்லாஹ்வை தலைவனாகக் கொண்டோர்க்கு பயமுமில்லை. அவர்கள் கவலைப்பட போவதுமில்லை.” (அல்குர்ஆன் 10:62) என்ற இறைக் கூற்றுக்கு ஆவன செய்வோமா?
நன்றி :நர்கிஸ்
மார்ச் 2015
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>
No comments:
Post a Comment