Monday, September 30, 2013

“ஹஜ்” என்னும் ஓர் அற்புதம்!


சாந்திச்  சரணா  லயமாம் – ஹஜ்ஜில்
............சாரும் புவியின்  முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே—அருள்
…….......இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே

தந்தைஇப் றாஹிம்பாங் கோசை- இந்தத்
..........…தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம்
சிந்தையிட் சேருமிறை போதம்- ஆங்குச்
............…சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம்

அரபு நாட்    டுக்குள்ளோர்    நாடு - அங்கே
.......….அகிலமுஸ்     லிம்களின்  கூட்டுமா   நாடு
 மரபு  வழிகளில்  தேடல்  -புவி
........….மனித  நதிகளின்  சங்கமக் கூடல்

Saturday, September 28, 2013

ஆட்டுக்குட்டி ...........


நாம் மற்றவங்களுக்கு உதவி செய்யும் போது செய்த உதவியயை அந்த நேரத்தோடு நாம் மறந்து விடுவோம்

ஆனால் நம்மிடம் இருந்து உதவி பெற்றவர்கள் நாம் செய்த உதவியை எப்போதும் அவர்களின் மனதில் வச்சுக்கிட்டு தான் இருக்காங்க

நோன்பு பெருநாள் அன்று கத்தார் நாட்டில் இருந்து ஒரு சகோதரர் எனக்கு போன் செய்து என் பெயரை கூறி பெருநாள் வாழ்த்து கூறினார் அதோடு உடல் நலமும் விசாரிச்சார்

ஆனால் இவர் யார் என்று கொஞ்ச நேரமா தெரியாமதான் அவர் கிட்ட பேசிட்டு இருந்தேன். பிறகு சிறிய கூச்சத்தோட.......... மன்னிக்கணும் நீங்க யாருன்னு எனக்கு சரியா பிடி படல்ல, உங்க பெயரும் என்று இழுத்தேன் ......

அவர் நிதானமாக தன் பெயரையும், நாங்கள் இருவரும் சந்தித்த இடத்தையும் விளக்கினார். என் மனசுக்கு சந்தோசமா இருந்தது

விடுத்த அழைப்பு வெற்றியை தேடித் தந்தது


தொலைபேசி அழைப்பின் மணியின் ஒலி ஓசை
தொல்லை தரும் அழைப்போ!
தொல்லை தராத அழைப்போ!
கொள்ளையில் இருந்தாலும் அழைப்பின் ஒலி கேட்க
தொலைபேசியை ஓடிவந்து எடுக்கச் செய்கின்றது

ஒலிபெருக்கி வழியே வரும் ஒலி

'தூக்கத்தை விட தொழுகையே சிறந்தது'
தூக்கத்தை விட மனமில்லை

'தொழுகைக்கு விரைந்து வாருங்கள் (ஹய்ய அலஸ்ஸலாத்)'
தொழுகைக்கு விரைந்து வர மனமில்லை
விரைந்து வந்து தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுக்க மனமுண்டு

தொழுவதால் வெற்றி தொழ வாருங்கள் -
'வெற்றிக்கு வாருங்கள் (ஹய்ய அலல் ஃபலாஹ்)'

தொலைபேசி அழைப்பில் வெற்றி வரும் என்ற மனம்
தொலைபேசி எடுத்து பேசுவதில் வேகம்

தொலைபேசி தொல்லை தரும் நிலையாகி விட்டது
தொழுகைக்காக விடுத்த அழைப்பு வெற்றியை தேடித் தந்தது

Wednesday, September 25, 2013

வேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா?

வஞ்சிரமீனின் ( Salmon Fish ) நினைவாற்றல் மற்றும் துணிகரச் செயல் -


இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்வது பறவைகளுக்கு மாத்திரம் உள்ள தனித்தன்மை என்று நீங்கள் கருதியிருந்தால், அது தவறாகும். உண்மையில் தரையில் மாத்திரம் அல்லாது கடலில் வாழும் உயிரினங்களும் இடம் விட்டு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த அத்தியாயத்தில் இடம்விட்டு இடம் பெயரும் மீனினமான வஞ்சிர மீனின் துணிகரச் செயல் பற்றி ஆய்வு செய்வோம்.

வஞ்சிரமீனும் மற்ற மீனினங்களைப் போன்று ஆறுகளில் பெண்மீன்கள் இடும் முட்டையிலிருந்தே தோன்றுகின்றன. தோன்றிய நாளிலிருந்து சில வாரங்கள் மட்டுமே ஆறுகளில் வாழும் இந்த மீனினம், சில வாரங்களுக்குப்பின் ஆறு சென்று கலக்கும் கடலை நோக்கி தனது பயணத்தைத் துவக்குகிறது. கடலை நோக்கிச் செல்லும் இந்த பயணத்தின் போது வஞ்சிர மீன்கள் ஏராளமான ஆபத்தை எதிர்கொள்கின்றன.  மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளையும், நீர்த்தேக்கங்களையும், மாசுபட்ட தண்ணீரையும், வஞ்சிர மீன்களை உணவாக உட்கொள்ளக்கூடிய பெரிய பெரிய மீன்களால் ஏற்படும் அபாயங்களையும் கடந்து வஞ்சிர மீன்கள் கடலை சென்று அடைகின்றன. பல ஆபத்துகளை கடந்து கடலை அடைந்த வஞ்சிர மீன்கள், கடலிலேயே பல ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. வஞ்சிர மீன்கள் தங்களது சந்ததியை பெருக்கக்கூடிய பருவத்தை அடைந்தவுடன், கடலிலிருந்து அவைகள் முதலில் புறப்பட்டு வந்த ஆற்றை நோக்கி மீண்டும் நீந்தத் துவங்குகின்றன.

இதில் வியக்கத்தக்க செய்தி என்னவெனில் வஞ்சிர மீன்கள் தாங்கள் பிறந்து சில வாரங்களே வாழ்ந்த இடத்தை தவறாமல் சென்றடைவதுதான். இந்த செயலில் அவைகள் சிறிதும் தவறிழைப்பதில்லை. அவைகள் பயணித்த தூரம் ஒன்றும் குறைந்தது அல்ல. வஞ்சிர மீன்கள் தாங்கள் புறப்பட்டு வந்த இடத்தை சென்றடைய வேண்டுமெனில், சிலவேளைகளில் 1500 கிலோ மீட்டர் (930 மைல்கள்) தூரத்தைக் கடக்க வேண்டும். 1500 கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்து செல்ல சில மாதங்கள் கூட ஆகலாம். இந்த பயணத்தில் வஞ்சிரமீன்கள் பல தடைகளை கடந்து செல்ல வேண்டியதாக இருப்பினும் அவைகள் சிறிதும் தவறிழைக்காமல் தாங்கள் புறப்பட்டு வந்த இடத்தைச் சென்றடைகின்றன.  

Friday, September 20, 2013

இமாம்களின் சேவை தேவை.


ஒரு இஸ்லாமிய சூழலில் ஒரு அடிப்படை நபர் இமாமாக இருக்கிறார்.
இமாம் முஸ்லீம் சமூகத்தின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும்.
இமாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவர்களது வாழும் முறை மக்களால் கண்காணிக்கப் படுகின்றது .

பெரும்பாலான இமாம்கள் இப்பொழுது தொழ வைப்பதோடு, ஹதீஸ் சொல்வதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

இமாம்கள் மக்களோடு நெருக்கம் கொண்டு சமூக அக்கறையோடு மற்றவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். மக்கள் மனதை தொட மக்களுக்கு நெஞ்சை வருடி விடுமாறு ஆறுதலும் ஊக்கமும் கொடுக்க வேண்டும். குறையை சுட்டிக் காட்டுவதை விட நிறையை சொல்வதில் மக்கள் அவரது தொடர்பை விரும்புவர். நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு கொள்ளாமல் கெட்டவரையும் நல்லவராக்க அவர்களின் தொடர்பு அறுபடக் கூடாது

" வெள்ளிக் கிழமையின் மாட்சி மாட்சி "வெள்ளியை
பெயரிலே வைத்திருந்தாலும்
தங்கமான நாள்
வெள்ளிக் கிழமை !

முந்தைய இரவிலேயே
ஆரம்பமாகி விடுகிறது
ஜும்மா நாளின்
கொண்டாட்டம் !

வழக்கம் போல்
சூரியன்
விழிப்பதற்கு முன்னாலேயே
விழிக்க வைக்கும்
பிலாலின் அழைப்பு
ஒரு பெருநாளின்
தக்பீர் முழக்கம் போல்
மிதந்து வருகிறது !

Wednesday, September 18, 2013

எதிரி

நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே தோன்றுகிறது. அவரது நிலைமை படுமோசமானதென தகவல் தந்தவர் கூறியிருந்தார். நீலம் ஆற்றங்கரையில் தனது இல்லத்தில் வசிக்கும் அவனுக்கு தனதென்று சொல்லக் கூடிய எவரும் அங்கில்லை.

    நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். 'அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்' என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்னர் நான் அமைதியாக இருப்பது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒரே இரத்தத்தில் உண்டான பந்தம் இது.

    நான் 'அத்மகாம்' பாலத்தை நெருங்கினேன். எனது சகோதரனின் வீடு நேரெதிர்ப் புறத்தில் அமைந்திருந்தது. அதனை நெருங்க எனக்கு ஐந்து நிமிடங்கள் மாத்திரமே எடுக்கும். திருடனைப் போல வலதுக்கும் இடதுக்கும் எனது பார்வையைச் செலுத்திய நான், என்னையே தைரியப்படுத்திக் கொண்டு தேசத்தின் எல்லையைக் கடந்து செல்ல முயன்றேன். எனினும், சில அடிச்சுவடுகளைப் பதித்து முன்னேறிச் செல்கையில் பலத்த சப்தத்தோடு கூக்குரலிடும் ஓசையைக் கேட்டேன்.

    'நில்!'

    நான் செய்வதறியாது அவ்விடத்திலேயே சிலையாக நின்றேன். முன்னே பார்த்த எனக்கு, துப்பாக்கியை நீட்டியபடி என்னை நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் தென்பட்டனர்.

    "இந்தியனொருவன்" என எனது முக லட்சணத்தைப் பார்த்த ஒரு இராணுவ வீரன் கத்தினான்.

    "கைது செய் அவனை" என அடுத்தவன் கத்தினான்.

    "இல்லை...இல்லை... ஐயா நான் இந்தியனில்லை. அதே போல பாகிஸ்தானியனும் இல்லை. நானொரு காஷ்மீர்வாசி. அதோ அங்கே கேரனிலிருக்கும் சிறிய வீடொன்று தென்படுகிறது அல்லவா? அதுதான் எனது வீடு. ஆற்றின் மறுகரையிலிருக்கும் அந்தச் சிறிய வீடும் தென்படுகிறது அல்லவா? அங்கேதான் எனது சகோதரன் வசிக்கிறார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அவருக்கென்று கூற அங்கு யாரும் இல்லை. அவரது உதவிக்கு யாராவது வரும்படி தகவலொன்று கிடைத்தது. ஐயா, தயவுசெய்து எனக்கு ஒரு அரை மணித்தியாலம் கொடுங்கள். அவருக்கு எப்படியிருக்கிறதெனப் பார்த்து, முடிந்தால் மருந்துகளும் வாங்கிக் கொடுத்து..சிலவேளை அது தண்ணீர் மாத்திரமாகவும் இருக்கலாம்...அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன்."

  

  எனது கழுத்தில் துப்பாக்கிப் பிடியால் தாக்கப்பட்டேன். எனது இரு பாதங்களுக்குக் கீழே பூமி அதிர்வதைப் போல உணர்ந்தேன். அவர்கள் என்னை அவர்களது பங்கருக்கு இழுத்துச் சென்றனர்.

Monday, September 16, 2013

சமூக வலைப்பின்னல் தளம் பேஸ்புக்

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள், பல்வேறு குழுக்கள், மார்க்க மேதைகள் ,அரசியல் சார்ந்தவர்கள் கருத்துக்கள், அனுபவங்கள், நடவடிக்கைகள் மற்றும் தங்கள் மகிழ்ச்சியை , துன்பத்தை பகிர்ந்து கொள்ளும் விவாதிக்க பயன்படும் தளங்களில் ஒன்றாகும்.

மக்கள் தங்கள் வணிகம் ஊக்குவிக்கவும் தங்கள் கொள்கைகளை பரப்பவும் , பிரச்சாரத்திற்கு எதிராகவும் மற்றும் பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் , மற்றும் பல நோக்கங்களுக்காகவும் பேஸ்புக் தளம் பயன்படுத்தப் படுகிறது.

Saturday, September 14, 2013

ஐம்புலன்களின் ஒற்றை மகுடம்

கருணைதான்
மனித குலத்தின் ஒற்றைத் தேவை

கருணைதான்
மனிதர்களின் ஒற்றை அடையாளம்

கருணைதான்
உயிர் காக்கும் ஒற்றைக் கவசம்

கருணைதான்
ஐம்புலன்களின் ஒற்றை மகுடம்

LinkWithin

Related Posts with Thumbnails