Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts
Saturday, September 28, 2013
ஆட்டுக்குட்டி ...........
நாம் மற்றவங்களுக்கு உதவி செய்யும் போது செய்த உதவியயை அந்த நேரத்தோடு நாம் மறந்து விடுவோம்
ஆனால் நம்மிடம் இருந்து உதவி பெற்றவர்கள் நாம் செய்த உதவியை எப்போதும் அவர்களின் மனதில் வச்சுக்கிட்டு தான் இருக்காங்க
நோன்பு பெருநாள் அன்று கத்தார் நாட்டில் இருந்து ஒரு சகோதரர் எனக்கு போன் செய்து என் பெயரை கூறி பெருநாள் வாழ்த்து கூறினார் அதோடு உடல் நலமும் விசாரிச்சார்
ஆனால் இவர் யார் என்று கொஞ்ச நேரமா தெரியாமதான் அவர் கிட்ட பேசிட்டு இருந்தேன். பிறகு சிறிய கூச்சத்தோட.......... மன்னிக்கணும் நீங்க யாருன்னு எனக்கு சரியா பிடி படல்ல, உங்க பெயரும் என்று இழுத்தேன் ......
அவர் நிதானமாக தன் பெயரையும், நாங்கள் இருவரும் சந்தித்த இடத்தையும் விளக்கினார். என் மனசுக்கு சந்தோசமா இருந்தது
Labels:
அன்பு,
சவுதி அரேபியா,
பணம்,
பாசம்
Monday, December 27, 2010
ஊழல் விஞ்ஞானி கருணாநிதி, ஊழல் மகாராணி ஜெயலலிதா (வணங்காமுடி பதில்கள்)


வணங்காமுடியாரே, யோகா பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது மதம் சம்மந்தப்பட்டதா? - சேக் முகம்மது, மாதவலாயம்
யோகா தியானம் போன்றவை இந்திய மரபு சார்ந்தவை;மிகப்பழமையானவை. தியானம் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியைத் தரும் பயிற்சி; யோகா மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் பயிற்சி. சித்தர்களும் யோகிகளும் இதைத்தான் செய்தனர். சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு நிலைகளையும் அவர்கள் வகுத்துக் கொண்டனர். விடை மற்றொன்று விரித்தலாகி விடும் என்பதால் அவை பற்றி இங்கே விளக்கப் போவதில்லை. யோகம் அல்லது யோகாவைப் பயின்ற சித்தர்களும் யோகிகளும் சைவ மரபைப் பின்பற்றியவர்கள் ஆதலால் பிற சமயத்தினர் அதில் அக்கறை செலுத்தவோ பயிற்சி பெறவோ இல்லை. அமெரிக்கா போன்ற மேல்நாடுகளுக்குச் சென்ற மகேஷ் யோகி, ரஜினீஷ் போன்றோர் அங்கே யோகாவைப் பிரபலப்படுத்தினர். எதையும் மேனாட்டான் சொன்ன பிறகே சொரணை பெறும் நாம், யோகா பயில ஆர்வப்பட்டபின் இங்கும் யோகா வகுப்புகள் தொடங்கின. ஆனால் சந்தர்ப்ப வசத்தால் யோகா கற்றுத்தரும் ஆசான்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருப்பதாலும் யோகாவில் மனதை ஒருமுகப்படுத்தச் சொல்லித்தரும் சில சொற்களும் சமஸ்கிருதத்தில் இருப்பதாலும் யோகாவை மதம் சார்ந்ததாக்கி விட்டன. கவர்ச்சிப்புயல் சில்பா ஷெட்டி யோகா கற்றுத்தருகிறாராம்; நீங்கள் அவரிடம் கற்றுக்கொள்ளுங்களேன்:-))
என் கொழுப்பை குறைக்க கடைப் பிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து சற்று சொல்லுங்களேன்? - செல்வி
"என் கொழுப்பைக் குறைக்க" என்று மொட்டையாக வினா உள்ளதால் சற்றுக் குழம்பிவிட்டேன். கொலஸ்ட்ரால் எனப்படும் இரத்தக்கொழுப்பு பற்றி வினவியுள்ளீர்கள் என நினைக்கிறேன். இது போன்ற வினாக்களுக்கு என்னைப்போன்ற ஊடகத்தாரிடம் அறிவுரை கோருவதை விட உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நியூட்ரீஸியனிடம் கேட்பதே பயன் தரும். நாங்கள் தகவல் மட்டுமே தர முடியும். ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சி, ஈரல், மூளை, குடல், கிட்னி போன்றவற்றிலும் நண்டு, இரால் போன்ற மீன் வகையிலும்கொழுப்பு அதிகம். இவ்வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரித்தவை, முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பு நீக்கப்படாத பால் பொருட்கள் போன்றவற்றையும் தவிர்த்தல் நன்று.
நார்ச்சத்து அதிகம் உள்ளவற்றை உண்ணுங்கள்.காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்ந்த காலத்தில் இவை போன்ற பிரச்சனைகள் இல்லை. கைக்குத்தல் அரிசி உணவு, கிணற்றில் நீர் இறைத்தோ ஆற்றிலும் குளத்திலும் நீச்சல் அடித்தோ குளியல், அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் உரலிலுமாகத் தயாரான உணவுப்பொருட்கள், இரசாயண உரமும் பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லாமல் விளைவித்த காய்கறிகள்,வீட்டில் வளார்த்த ஆடு கோழி போன்றவை, உடல் உழைப்பும் உரிய ஓய்வும் என டென்ஷனோ ஸ்ட்ரெஸ்ஸோ இல்லாமல் வாழ்ந்த காலத்தில் இரத்தக்கொதிப்பு, நீரிழிவு , கொலஸ்ட்ரால் போன்றவை மிகக் குறைவானோர்க்கே இருந்தன.
எல்லோருக்கும் சொல்வது,நிறையத் தண்ணீர் குடியுங்கள்; நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்; உங்கள் உயரத்துக்கும் வயதுக்கும் ஏற்பக் கணக்கிட்டு உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். புகை பிடிக்காதீர்கள்,பீட்ஸா பர்கர் ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் உண்ணாதீர்கள்.

என்.ஜி.ஓ. ஒன்று ஆரம்பித்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்கிறானே என் நண்பன் ஒருவன். உண்மையா வ. மு. அவர்களே? -ஜவஹர், நெய்வேலி
நான் கலூரியில் படித்தகாலத்தில், எங்கள் கல்லூரியின் பின்வாசல் இருக்கும் சாலையில் என் ஜி ஓ சங்கக் கட்டிடம் என்ற பெரிய பெயர்ப் பலகையுடன் ஒரு கட்டிடம் இருந்தது. என் ஜி ஓ என்றால் என்ன என வினவியபோது நான் கெஸடட் ஆஃபீஸர் எனச் சொன்னார்கள். இப்போது அந்த வழக்கம் இல்லை. இப்போது என் ஜி ஓ என்றால் அரசுசாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எனச் சிறு பிள்ளைகளும் அறியும் வண்ணம் ஆங்காங்கே பரவலாக முளைத்து விட்டன. இந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசும் வங்கிகளும் கடனுதவி செய்கினறன.சில என் ஜி ஓக்களுக்கு மேலை நாடுகளில் இருந்தும் பெரும் பணம் வருகிறது. இதனால் பணப்புழக்கம் அதிகமாவதும் அவற்றில் சில முறைகேடுகள் நடப்பதும் சகஜமாகி விட்டன. இதைத் தெரிந்ததால் உங்கள் நண்பருக்கும் ஆசை வந்திருக்கலாம். உண்மையிலேயே மக்கள் தொண்டாற்றும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. பிரதமராக இருந்தபோது வாஜ்பாய் காலில் வீழ்ந்து வணங்கினாரே அந்தச் சின்னப்பிள்ளை என்ற தமிழ்நாட்டு மூதாட்டியின் மகளிர் சுய உதவிக்குழுவைச் சான்றாகக் கொள்ளலாம்.
பூமியிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்து கொண்டே போகிறதே அது ஏன், எப்படி அய்யா?- அப்பாஸ், கடலூர்
பூமியில் இருந்து உயரே செல்வதற்கு ஆகாய விமானம், ராக்கெட் போன்றவை தேவை. அவற்றில் செல்லும்போது நீங்கள் வெளிக் குளிரை உணர முடியாது. தரை / பூமி மட்டத்திலிருந்து உயரமான மலைக்குச் செல்லும்போது நீங்கள் குளிரை உணர்வீர்கள். ஏனெனில் கடல் மட்டத்தில் காற்றின் அடர்த்தியும் ஈரப்பதமும் கூடுதலாக இருக்கும். கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தியும் ஈரப் பதமும் குறையும். அதனாலும் மலைமேல் அடர்த்தியாக இருக்கும் காடுகளாலும் நீங்கள் குளிரை உணரலாம். 
கருணாநிதி - மன்மோகன் சிங் இருவரின் பலம் மற்றும் பலவீனம் என்ன? - சுந்தர், நாகர்கோவில்
கருணாநிதியின் கட்டுப்பாட்டில் ஒரு குடும்பமாகக் கட்சி இருப்பது அவரது பலம். இன்று வரை அவர் தலைவராக இருப்பது அதனால்தான். கருணாநிதி தம் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரது பலவீனம். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போமா என்ற தவிப்பு அதனால்தான்.
மன்மோகன்சிங் அரசியல்வாதியாக இல்லாமல் இருந்து பிரதமர் ஆனது பலம். கம்யூனிஸ்ட்களின் மிரட்டலைப் புறந்தள்ளியது அதனால்தான்.
சோனியாவையே சார்ந்திருப்பது பலவீனம். ஸ்பெக்ட்ரம் முறைகேடு போன்றவற்றை முதலிலேயே உரத்த குரலில் கண்டிக்க முடியாமல் போனது அதனால்தான்.
ஒருவர் இந்தக் கட்சி, அந்த கட்சி என்று மாறும்பொழுது அதனை எப்படி அந்த கட்சி எற்றுகொள்கின்றது. பாசமா? பழி வாங்கும் எண்ணமா ? இதுபோன்று மற்ற நாடுகளிலும் நடைபெறுவது உண்டா? - முஹம்மது அலி ஜின்னா
அந்தக்கட்சி இந்தக்கட்சி எனத் தம் விருப்பம்போல் மாறி வருபவர்களை எல்லாம் உடனடியாகச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். மாறி வருபவர் இருந்த கட்சியில் அவர் பெற்றிருந்த இடம்,அவரது சொந்த ஊரில் அல்லது சொந்தத் தொகுதியில் அவருக்கிருக்கும் செல்வாக்கு, அவரைத் தங்கள் கட்சியில் சேர்ப்பதால் எதிர்க்கட்சியில் ஏற்படும் சரிவு, தங்கள் கட்சியில் ஏற்படும் வளர்ச்சி, உட்கட்சிப்பூசல் வருமா வராதா, தேர்தல் நேரத்தில் அவரால் நன்மையுண்டா எனப்பல அம்சங்களையும் அலசித்தான் பிறகட்சியிலிருந்து வருபவர்களைச் சேர்ப்பர். அல்லது காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டியதுதான்.
பாசம் ஏதும் கிடையாது; ஆனால் பழிவாங்கும் எண்ணம் உண்டு. அதற்காகவே பிற கட்சியின் செல்வாக்கான தலைவர்களைத் தம் கட்சிக்கு இழுக்கும் வேலை நடைபெறுகிறது.சான்றுக்கு அ இ அ தி மு கவில் இருந்து அனிதாராதாகிருஷ்ணன், முத்துச்சாமி போன்றோரையும் ம தி மு கவில் இருந்து கண்ணப்பன் போன்றோரையும் தி மு க இழுத்ததைக் கூறலாம். இப்படி, தி மு கவில் இருந்து பலரையும் இழுக்க அ இ அ தி மு கவும் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
எம் ஜி ஆர் தி மு கவில் இருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்தபோது வேலப்பன் என்ற ச ம உ காலையில் அ தி மு க மாலையில் தி மு க என அங்குமிங்கும் ஊசலாடிக்கொண்டிருந்த வேடிக்கையும் நடைபெற்றது. அச்சமயத்தில் தி மு க ஆதரவு ஆதித்தனார் குழுமப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வேடிக்கையாக இருக்கும்.
தி மு க வில் இருந்து விலகினால் "கட்சித்தாவல்"
தி மு கவிற்கு வந்தால் "தாய்க்கழகம் திரும்பினார்"
வெளிநாடுகளில் உண்டா என வினவியுள்ளீர்கள். அங்கெல்லாம் நம் நாட்டைப்போல் நூற்றுக்கணக்கில் பலப்பல கட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் அற்புதமாக இருந்த தமிழ் இப்போ ஏன் நைனா இப்படிக்கீது?? மொழி மாற்றத்திற்கான காரணம் என்ன? - சீமான்நேசன், அபுதாபி
ஒரு மொழியின் வாழ்வும் சாவும் அதைப் பேசுவோரின் நாவில்தான் இருக்கிறது. இன்று நாம் அன்றாடம் உரையாடும் தமிழில், அரபு, பார்ஸி, உருது, கன்னடம், தெலுங்கு மற்றும் சம்ஸ்க்ருத மொழிச்சொற்களைக் கலந்தே உரையாடுகிறோம். அதை விட மோசமாகத் தமிழர்களில் பெரும்பான்மையோர் "தமிங்கலம்" பேசுவோரே. மெல்லத்தமிழ் இனி செத்துவிடக் கூடாது என்ற கவலையிலேயே பிறமொழிக் கலப்பின்றித் தமிழைப் பேசவும் எழுதவும் வற்புறுத்திக்கொண்டே இருக்கிறோம். எனினும் பொதுமக்களிடம் கலந்துரையாடும் என்னைப்போலப் பலரும் அவர்களுக்கு விளங்கிட வேண்டும் என்ற மெய்யான அக்கறையால் பிறமொழிக் கலப்பில் வேண்டாவெறுப்பாக எழுத நேரிடுகிறது. உருது, இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, போன்ற மொழிகள் பேசுவோர் சென்னையில் சங்கமித்துத் தமிழ் பேசத் தொடங்கியதால் அவரவரின் வட்டார மொழிகளும் கொச்சை மொழிகளும் கலந்து "ஸென்னைஸ்ஸெந்தமிள்" உருவானது.
சென்னையில் தூய நதியாக ஓடிய கூவம் இன்று துர்நாற்றம் வீசும் காரணம் என்ன என்பதைச் சிந்தித்தால் உங்களுக்கே விடை விளங்கும்.
திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர் சூட்டினால் வரிவிலக்கு அளிக்கப்படுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? - தீன்
வீண்வேலை. இதனாலெல்லாம் தமிழ் வளார்ந்து விடாது. படத்தின் பெயர் மட்டும் தமிழில் இருக்கும்; உள்ளே வசனமும் பாடல்களும் பன்மொழிக் கலப்பில் இருக்கும். இதை நாம் அறிந்தே இருக்கிறோம். பின் ஏன் இந்தப் பம்மாத்து? சமூக அக்கறையுடன் கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களுக்கு வரிவிலக்கும் உதவித்தொகையும் அளிப்பதே வரவேற்கத் தக்கது.
இது தொடர்பாக முன்னர் அளித்த விடையையும் காண்க!
ஊழல் விஞ்ஞானி கருணாநிதி, ஊழல் மகாராணி ஜெயலலிதா இவர்கள் ஆள்வதை தவிர தமிழகத்துக்கு வேறு ஏதேனும் வழி இல்லை? - விக்ரம், நெல்லிக்குப்பம்
“இவர்கள் ஆள்வதைத் தவிரத் தமிழகத்துக்கு வேறு வழி இல்லை” என்று உங்கள் கவலையைத் தெரிவிக்கிறீர்களா அல்லது, “வேறு ஏதேனும் வழி இல்லையா?” என வினாத் தொடுத்துள்ளீர்களா? வினாவாகவே எடுத்துக் கொள்கிறேன்.
இருவரும் தத்தம் ஆட்சியில் செய்த மக்கள் நலப் பணிகளும் சாதனைகளும் இருவரும் அல்லது அவர்களின் கட்சியினரும் செய்த ஊழல்களும் வெட்ட வெளிச்சமானவை. அவை மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள்தாம் இருவரின் செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்த்து மதிப்பிட்டுத் தேர்தலில் நல்ல தீர்ர்ப்புக் கொடுக்க வேண்டியவர்கள். மக்களில் நன்கு படித்த மற்றும் உயர்மட்ட வர்க்கத்தினர் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதில்லை. இடைப்பட்ட நடுத்தர வ்ர்க்கமும் இதர தொழில் செய்வோரும் பிரச்சாரத்தின் வலிமையில் மயங்கியும் அடித்தட்டு மக்கள் இலவசங்கள் மற்றும் ஓட்டுக்குக் கிடைக்கும் பணம் ஆகியவற்றின் அடிப்படையிலும் முடிவு எடுக்கின்றனர். அரசு ஊழியர்கள் தத்தமது அரசியல் சார்பின் அடிப்படையில் அல்லது அவர்களின் அப்போதைய பிரச்சனைகளைத் தீர்த்த அல்லது தீர்ப்பதாக வாக்குறுதியளிக்கும் கட்சியினருக்கு வாக்களிக்கின்றனர்.
பா ஜ க தமிழ் நாட்டில் பெரிய கட்சி இல்லை. மற்ற தேசீயக் கட்சிகளான காங்கிரஸும் இரு கம்யூனிஸ்ட்களும் திராவிடக் கட்சிகளின் தயவில் காலத்தை ஓட்டிவிட்டன. தனியாக அணி சேர்ந்து களம் கண்டாலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவு அவர்களுக்குப் பலம் இல்லை.
இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில், வேறு வழி இல்லா நிலையில் குறைந்த தீமையைத் தேர்ந்தெடுப்பதே அறிவுடையோர் செய்யும் செயல்.
இப்போது வினாவை மீண்டும் ப்டிக்கவும்.
வணங்காமுடி அய்யா அவர்கள் (2011ல்) முதல்வரானால் போடும் முதல் உத்திரவு என்னவாக இருக்கும்? - கருணாகரன்
அரசியல்கட்சியில் சேராமல்/ அரசியல் கட்சியைச் சாராமல் இந்தியாவில் யாரும் முதல்வராக முடியும் என்ற நிலை வந்தால்..... வணங்காமுடியும் முதல்வராகும் வாய்ப்புக் கிடைக்குமானால்.... - அது 2011இல் நடக்கவே நடக்காது என்பது ஒரு புறமிருக்க - கற்பனைக்கு என்ன காசா பணமா எனத் துணிந்து கற்பனை செய்தால்..முதல் ஆணை, 'தம் கடமையைச் செய்யாமல் நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு தண்டச் சம்பளம் வாங்கியும் கடமையைச் செய்வதற்குக் கையூட்டுப் பெற்றும் கொழுக்கும் அரசு ஊழியர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்து வீட்டுக்கனுப்பும் ஆணை'யே!(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2010122612721/vanagamudi-answers-26-12-2010
Labels:
"கட்சித்தாவல்",
கொழுப்பைக் குறைக்க,
பணம்,
யோகா
Thursday, October 28, 2010
கடன் வாங்கலாம் வாங்க - 5
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )
வளைகுடா நாடுகளுக்கு வந்திருக்கும் சகோதரர்களிடம் தாயகத்தில் உள்ள உறவினர்கள் எத்தனை வகைகளில் எதற்கெல்லாம் கடன் கேட்கிறார்கள்.
â வீடு கட்டப்போகிறேன் அல்லது கட்டியவீடு பூர்த்தியாகவில்லை பணம் அனுப்பி வை.
â நான் கடை வைக்கப்போகிறேன் பணம் குறைகிறது உன்னால் முடிந்தததை உடன் அனுப்பி வை.
â வீடு கட்ட மனை இல்லை மனைக்கு முன்தொகை கொடுத்து விட்டேன். பாக்கி பணத்தை கொடுத்து பத்திரம் முடிக்க வேண்டும் அதனால் உடன் தாமதம் இல்லாமல் பணம் அனுப்பி வை.
â பிள்ளையை காலேஜில் சேர்க்க பணம் வேண்டும் உன்னை நம்பித்தான் இருக்கிறேன் உடன் பணம் அனுப்பி வை.
â எல்லா நகையும் பேங்கில் அடகு வைத்து விட்டேன். ஏல நோட்டீஸ் வந்து விட்டது. நீ பணம் அனுப்பி வைக்காவிட்டால் என் நகைகளை இழக்க நேரிடும். அதனால் உடன் பணம் அனுப்பி வை.
இப்படி உறவினர்கள் மூலம் வளைகுடா சகோதரர்களுக்கு ஏகப்பட்ட கடன்கள் கேட்டு தொலைபேசி வருகிறது. இதில் நியாயமான கடன் எது என்று தங்களுக்கு புரியும் இதற்கு உதவலாம். திருப்பி அடைக்கும் வழியே தெரியாமல் கடன் வாங்கி தன் தேவைகளை நிறைவேற்றி கொள்பவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்.
இங்கு வந்துள்ள சகோதரர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக ஊரில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டு கடன் கேட்கிறார்கள். நாம் கேட்கும் தொகையை எப்படி ஏற்பாடு செய்வார்கள் என்ற நினைப்பும், இப்படி கேட்டு வாங்கும் கடனை நாம் எப்படி திருப்பி அடைப்போம் என்ற சிந்தனையும் இல்லாமல் கேட்கிறார்கள். இதில் வாங்கிய கடனை அடைக்காமல் இருந்து விடுவோமா? என்ற கோபமான பதில் வேறு. எந்த சிந்தனையும் இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றவர்களிடம் நிறைய இருக்கும் என்ற நினைப்பில் கடன்களை கேட்டு விடுகிறார்கள்.
சகோதரர்களே அவசிய, அத்தியாவசிய கடன் என்ன தெரியுமா? வயிற்று பசியும், மருத்துவ செலவும், தங்க இடம் இருந்தும் வானம் பார்த்த பூமியாக இருந்தால் ஓடோ அல்லது கூரையோ போட்டுக்கொள்ள வாங்கும் கடன்களை சொல்லலாம். (இதோடு கல்வி கடன்களையும் சேர்த்துக்கொள்ளலாம்). இதுவும் நம்மிடம் விற்று பணமாக்க எந்த பொருளும் இல்லாத நிலையில்தான் வாங்க வேண்டும்.
ஆடம்பர கடன் எது தெரியுமா?
வீடு இருக்கும்பொழுது அதை மேலும் தேவையில்லாமல் ஆடம்பரமாக கட்டுவதற்கு கடன் வாங்குவது. மார்க்கத்தில் இல்லாத காரியங்களை வழிவழியாக முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்ற காரணத்தால் நாம் செய்யாவிட்டால் ஊர்வாசிகள் என்ன சொல்லுவார்களோ??? நம் கௌரவம்??? குறைந்து விடுமே என்று எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம். சுன்னத் செய்வதற்கு, குழந்தைக்கு காது குத்துவதற்கு, பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விட்டால் பூப்பெய்து நீராட்டு விழா என்று நடத்த, பிள்ளை பிறந்தால் பெயர் வைக்க ஒரு விழா நடத்துவதற்கு என்று இதுபோல் பல ஆடம்பர காரியத்திற்காக கடன் வாங்குகிறோம். இவைகள் அனைத்தும் அவசியமில்லாத ஆடம்பர கடன்கள். சகோதர சகோதரிகளே சிந்தித்து தெளிவு பெறுங்கள்.
சகோதரிகள் வாங்கும் கடன்கள் :
சகோதரிகளே! தாங்கள் வாங்கும் கடன்களைப் பற்றித்தான் இனி அலசப்போகிறோம். கவனமாக படியுங்கள். குடும்பத்தில் ஏற்படும் அனைத்து காரியங்களுக்கும் சிக்கனம் என்றாலும், வீண் விரயம் என்றாலும் குடும்பத்தலைவியே முழு பொறுப்பாளியாவார். ஆண்களை கடன் வாங்கும் சூழ்நிலைக்கு விரட்டுவதற்கு காரணம் யார் என்று பார்த்தால் நிறைய இடங்களில் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். சகோதரிகளின் வீண் விரயங்களைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
புதிய நகை :
நகைகளில் ஒரு டிசைனை பார்த்து விட்டால் உடனே அதுபோல் செய்து போட வேண்டும் என்று தன்னிடம் இருக்கும் நல்ல நகைகளையே, நகை கடையில் கொடுத்து புதிய டிசைன் செய்கிறார்கள். இதற்கு ஆகும் சேதாரம், நாம் கொடுக்கும் நகையில் அவர்கள் கழிக்கும் சேதாரம், பிறகு கூலி. (கூலி கூட குறைவாகத்தான் இருக்கும் காரணம் சேதாரத்தில் நகை கடைக்கு ஒரு தொகை கிடைத்து விடும்). இப்படி இதில் நிறைய வீண் விரயம் உள்ளதே என்று நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால் அன்று குடிசையில் பத்தர் கடை என்று வைத்திருந்தவர்கள் இன்று பங்களா கட்டி பெரிய நகை கடையே வைத்திருக்கிறார்கள். சகோதரிகளே நீங்கள் இருந்த இடத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் நிமிடத்தில் புதிய நகைகளை செய்து விடுகிறீர்கள். தங்கள் குடும்பத்தின் ஆண்கள் எத்தனை சிரமப்பட்டு (பாலைவனத்தின் வெயிலை தலையில் சுமந்து) இந்த பணத்தை எப்படி சம்பாதித்து இருப்பார்கள் என்பதை ஒரு நாளாவது சிந்தனை செய்து பார்த்து இருப்பீர்களா? அவசியத்திற்கு நகைகள் செய்தாலும் கவனமாக இருங்கள். ஆடம்பரத்தை அறவே தவிர்த்து விடுங்கள். வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை மனதில் வைத்து செயல்படுங்கள்:
... உண்ணுங்கள் பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் : 7:31)
நகை கடன் :
நகைகளை வங்கியிலும், அடகு கடையிலும் வைக்கும் எனதருமை தாய்மார்களே! சகோதரிகளே! கொஞ்சம் நில்லுங்கள்! எதற்காக மாதா மாதம் நகைகளை எடுத்துக்கொண்டு வங்கிக்கும், அடகு கடைக்கும் ஓடுகிறீர்கள் பசிக் கொடுமையா? அல்லது மருத்துவ செலவுக்கா? (இதற்காக சில பேர் அடகு வைக்கலாம்) பெரும்பாலும் வெளிநாட்டில் இருக்கும் குடும்ப ஆண்களிடம் இருந்து பணம் வர தாமதமானாலும் மற்றும் குடும்பத்தில் நடக்கும் அனைத்து விதமான ஆடம்பர காரியங்களுக்காகவும், மனை வாங்கி போடவும், இன்னும் வெளிநாடு செல்லாமல் இருக்கும் வீட்டில் உள்ள ஆண்களுக்கு விஸா வந்து விட்டது உடனே பணம் கட்டியாக வேண்டும் என்று இது போன்ற பல காரியங்களுக்காகத்தானே செல்கிறீர்கள்.
வங்கியின் நிலைபாடு :
வங்கிக்கு உங்களுடைய நகைகளை எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள். உங்களுடைய பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு நீங்கள் எத்தனை சிரமங்களை வங்கியின் ஊழியர்களால் அனுபவிக்க நேரிடுகிறது. அந்த மேஜைக்கு செல், இந்த மேஜைக்கு வா, பத்தர் வர வேண்டும் நகை அசலா என்று பார்க்க, நீங்கள் கேட்ட தொகை அதிகம் தரமுடியாது. இப்படி வங்கியின் அலட்டல் அதிகமாகத்தான் உள்ளது.
உங்களின் சொந்த பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு இலவசமாக உங்களுக்கு பணம் தருவதாக நினைத்துக் கொண்டு வங்கியும், வட்டி கடையும் போடும் நிபந்தனைகளுக்கும், ஆட்டங்களுக்கும் நாம் அடிபணிந்து பணம் வாங்க வேண்டுமா? சிந்திப்பீர்களா சகோதரிகளே! (இங்கு சகோதரர்களும் சிந்திக்க வேண்டும். பெண்கள் படும் சிரமங்களை நேரில் நீங்கள் கண்டால் வேதனையடைவீர்கள்.) (என் கணக்கில் பணம் எடுக்கச் செல்லும்பொழுதெல்லாம் இதை நேரில் பார்த்து வேதனையடைவேன். என் உறவினர்களை மட்டும் கண்டித்து நகையை அடகு வைக்க வங்கிற்கு வருவதை (சாதக பாதகங்களை கூறி) தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். தீமையை கண்டால் தடுப்பது நமது கடமை. தீமையிலிருந்து விலக அவர்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்).
இவ்வளவு சிரமங்களையும் அனுபவித்து வட்டிக்கு பணம் வாங்குகிறீர்கள். வட்டி வாங்குவது மட்டும் பாவமில்லை, கொடுப்பதும் பாவம்தான் என்பதை அறியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நாங்களா வட்டி? வாங்குகிறோம் எங்கள் அவசரத்திற்கு கடன் தர யாரும் இல்லை. அதனால் எங்கள் நகையை வைத்து பணம் வாங்குகிறோம். வங்கியில் நகையை வைத்துக்கொண்டு சும்மா கடன் தருவானா வட்டி கட்டத்தானே வேண்டும். நாங்கள் வட்டி வாங்கினால்தானே பாவம். வட்டியை கொடுக்கத்தானே செய்கிறோம். என்று நிறையபேர் நியாயம் பேசி வருகிறார்கள். இதில் ஐந்து வேளை தொழுபவர்களும், ஹஜ்ஜூக்கு போய் வந்தவர்களும் இது ஒன்றும் பெரிய பாவம் கிடையாது என்று சொல்லி வருகிறார்கள். (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த பதில்தான் கிடைக்கும்). இதற்கு காரணம் மார்க்கம் என்ன சொல்கிறது என்ற அறியாமைதான்.
வட்டியை உண்பவரையும், அதை உண்ணக் கொடுப்பவரையும், அதற்காக எழுதுபவரையும், அதற்கு சாட்சி சொல்பவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்து விட்டு, 'அவர்கள் (குற்றத்தில்) சமமானவர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி),புகாரி பாடம்: 24)
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வட்டி வாங்கினால்தான் பாவம் என்று இல்லை. தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்தி வங்கி அல்லது தனியார் வட்டிகடைகளின் வியாபாரம் பெருகுவதற்கு தாங்களே உதவியாக இருந்தாலும் பாவம்தான். அப்படி என்றால் என்னதான் வழி என்று கேட்கிறீர்களா? நல்ல வழி ஒன்று உள்ளது. தங்களுக்கு தவிர்க்க முடியாத மிக மிக அத்தியாவசிய செலவுகள் என்று வரும்பொழுது (ஆடம்பர செலவு இல்லை) தங்களின் நகைகளை விற்று விடுங்கள். என்ன?????? நகையை விற்றால் வாங்க முடியுமா????? அடகு வைத்தாலாவது நம் நகை அடகில் இருக்கிறதே என்று நிம்மதியாக இருப்போம். சிறிது சிறிதாக பணத்தை செலுத்தி நகையை திருப்பி விடுவோம். விற்று விட்டால் வாங்க முடியுமா? என்று சொல்ல வருகிறீர்கள். (பல நேரங்களில் அடகு வைத்த நகையை வாங்கமுடியாமலே பறி கொடுத்துவிடுகிறோமே இதைப்பற்றியும் சிந்தித்து பாருங்கள்).
வட்டி கொடுப்பதும், வாங்குவதும் பாவம் என்று தெரிந்த பிறகு தங்களின் உலக லாபங்களுக்காக நகைகளை அடகு வைத்துக்கொண்டே இருப்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்: மறுமையில் வல்ல அல்லாஹ்வின் தண்டனை கடினமாக இருக்கும். இம்மையிலும் சோதனை ஏற்படும். மேலும் தாங்கள் வட்டிக்கு வைத்து வாங்கும் பணத்தைக் கொண்டு செலவழிக்கும் எந்த காரியத்திலும் பரக்கத் (அபிவிருத்தி) இருக்காது.
உதாரணத்திற்கு நமக்கு தேவை ஒரு லட்சம். இதற்கு வங்கியில் இரு மடங்கு மதிப்பு உள்ள நகையை அடகு வைக்க வேண்டும். இப்பொழுது என்ன செய்யலாம் சிறிய நகையாக இருந்தால் சில நகைகள் பெரிய நகையாக இருந்தால் ஒரு நகையை விற்றால் நமக்கு தேவைப்படும் பணம் ஒரு லட்சமும் கிடைத்து விடும். மேலதிகமான பணத்திற்கு ஒரு சிறிய நகையும் வாங்கி விடலாம். நமது பணத்தேவையும் தீர்ந்து விடும். நகைக்கு வட்டி கட்டும் பாவத்திலிருந்தும் விடுதலை. நகை ஏலம் போவதிலிருந்தும் நகை பாதுகாக்கப்படும். மேலும் எந்த கஷ்டத்திலும் வட்டியின் பக்கம் நெருங்க மாட்டேன் என்று முடிவெடுத்து அவசர தேவை வரும்பொழுது நகைகளை விற்று நம் காரியங்களை நிறைவேற்றினால் இதில் கிடைக்கும் நிம்மதியும், பரக்கத்தும் தங்களுக்கு தெளிவாக புரியும். சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம்.
இரவல் நகை கடன் :
சில பெண்கள் தங்களின் தேவைகளுக்கு அடகு வைக்கமாட்டார்கள். ஆனால் உறவினர்கள், தெரிந்தவர்கள் இரவலாக நகை கேட்டால் (கணவரிடம் கூட அனுமதி வாங்காமல்) உடனே எடுத்து கொடுத்து விடுவார்கள். நாம் வங்கியில் அடகு வைக்கவில்லையே என்ற நிம்மதி வேறு. (கொடுத்த நகையை திருப்பி வாங்க பெரிய போராட்டமே நடக்கும்).
அடகு வைப்பதற்காக இரவல் நகை கொடுக்கும் சகோதரிகளே தெரிந்து கொள்ளுங்கள்: தாங்கள் வைக்காவிட்டாலும் வட்டி என்னும் பாவத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். வட்டி என்னும் தீமையை தடுப்பீர்களா? அல்லது துணை போவீர்களா?
உறவினர்களிடம் இரவல் நகை வாங்கி வங்கியில் வைப்பவர்களே! எந்த தைரியத்தில் மற்றவர்களின் நகைகளை வாங்கி வங்கியில் வைக்கிறீர்கள்? கடன் வாங்கவே பல கட்டளைகள் மார்க்கத்தில் உள்ளபோது, பல ஆயிரம் பெறுமானமுள்ள நகையை சில ஆயிரத்திற்கு அடகு வைத்து பணம் வாங்கி, திரும்ப மீட்டு கொடுக்கும்பொழுது எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது என்பதை அனுபவித்த பிறகும் நிறையபேர் திருந்துவதில்லை. இதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். இரவல் நகை வாங்கி அடகு வைப்பதை விட்டும் தவிர்ந்து வாழ்ந்தால் மிகப்பெரிய மனநிம்மதி கிடைக்கும். நிச்சயம் அத்தியாவசியமான காரியங்களுக்கு நகைகள் அடகு வைப்பதில்லை என்பது பரவலாக பார்த்து வரும் உண்மை. நகை கடனோ, இரவல் நகை கடனோ, பல தடவை இந்த கடன் அவசியம்தானா? வட்டியிலும், கடனிலும் விழுந்து விடுவோமே என்று நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். வல்ல அல்லாஹ்விடம் கடனை விட்டு பாதுகாப்பு தேடிக்கொண்டே இருங்கள். கடனிலிருந்து மீள்வதற்கும் முயற்சி செய்யுங்கள்.
இன்ஷாஅல்லாஹ் வளரும்..
-- அலாவுதீன்.S.
Labels:
கடன்,
கட்டுரை,
பணம்,
பிள்ளை பிறந்தால்,
வளைகுடா,
வீடு கட்ட மனை
Subscribe to:
Posts (Atom)



