Monday, August 31, 2015

நான் அணிவது இறைவனின் நேசத்தை நாடி .

என்னை நோக்கி என்ன நினைக்கின்றாய்
எனது உரிமைகள், எனது சுதந்திரங்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கின்றேன் என்றா!
நான் எனது தலை முடியை மற்றும் உடலை தாவணி மற்றும் இருக்கமான ஆடையால் மறைத்துள்ளேன் அதனால் பாவப்பட்டவள் ஆனவளாகி விட்டேன் என்ற நினைப்போ!
நீ என்னை நினைத்து பாவப்படாதே!
நான் நடக்கும் இந்த பாதை இறைவனின் திட்டமாக,கட்டளையாக உள்ளது!

இவ்விதம் ஆடைகள் அணிவதால் நான் மரியாதையாகப் பார்க்கப் படுகின்றேன்
என்னை யாரும் ஒரு பொருளாகப் பார்ப்பதில்லை
என்னைப் பார்த்து கண்ணீர் வடிக்க வேண்டாம்
உன்னைப் பார்த்துதான் நான் கண்ணீர் வடிக்க வேண்டும்

பெண்ணாகிய நான் கைகள்(கைகளின் மணிக்கட்டு வரை ), முகம், பாதங்கள் நீங்கலாக மற்ற உடற் உறுப்புகள் மற்றோர் முன் மறைக்கப்பட்டதால் நான் பாதுகாப்பாக இருக்கின்றேன்

நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக இருக்கிறது இஸ்லாம் மார்க்கம் !... - ஜோதிமணி

முஹமது நபி பெண்களுக்கான சுதந்திரத்தை, கல்வியை, சொத்துரிமையை பல நூற்றாண்டுகளுக்கே முன்பே வலியுறுத்தியவர். எளிய வாழ்வையும், சமத்துவத்தையுமே இஸ்லாம் முன்னிருத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை ஏற்க மறுக்கிறது. பிற்போக்கான மதம் என்கிற கட்டமைக்கப்பட்ட பொதுபுத்திக்கு மாறாக நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக (Strikingly Progressive) இருக்கிறது .

மேற்குலக நாடுகளின் எண்ணெய் அரசியல் வேறு இஸ்லாமை ஒரு மோசமான ஆயுதமாக பறைசாற்றி மத அடிப்படை வாதிகளை ஊட்டி வளர்க்கிறது. இந்தச் சூழலில் உண்மையான இஸ்லாமை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முன் உள்ளது. இன்றைய சூழலில் அந்தக் கடினமான பணியில் அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய மாபெரும் தார்மீகப் பொறுப்பு மற்றவர்களிடம் உள்ளது.

Friday, August 28, 2015

ஆலிம்களுக்கு அரசுப்பணி! அரசியல் பங்கேற்பு!! (3) - Yembal Thajammul Mohammad

இந்தத் தொடரை ஆலிம் பெருமக்களும் படித்து வருவதை அறிய மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்கள் முனைவர் பட்டம் வரை பல பட்டங்கள் பெற்று- பெற முயன்று- வருவது மேலும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அந்த முயற்சியாளர்களுக்கு அல்லாஹ் வெற்றியளிப்பானாக.

களத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப மக்களுக்கு மார்க்கத்தைச் சமர்ப்பிக்க பலவகை அறிவாயுதங்கள் தேவை. எனவே அவர்கள் முயற்சியை வரவேற்போம். வாழ்த்துவோம்.
ஆலிம்கள் பள்ளிவாசல்களையும் மத்ரஸாக்களையும் மட்டும் தங்கள் வாழ்வாதாரங்களாக நம்பி இராமல் பலதுறைகளிலும் பரவி மார்க்க மணம் வீசப் பணிபுரிந்தால் அது எல்லாத் தரப்பு மக்களுக்கும் நலம் பயக்கும் என்பது என் நம்பிக்கை. இதற்கு இஸ்லாமியச் செய்தியுடன் உலகம் எங்கும் பரவிச் சென்ற அந்தக் கால உலமாப் பெருமக்களான ஸஹாபாப் பெருமக்கள்- அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமைத் தோழர்கள்- அழகான உதாரணங்கள்.

உறவினர் .- ஜே .பானு ஹாருன் .

அடுத்தவர் குடும்பத்தில் தேவையில்லாமல் உள் நுழைந்து அட்வைஸ் கொடுத்து களப்பணி ஆற்றாமல் இருப்பவரே மிக நல்ல உறவினர் .

எத்தனை நெருக்க உறவானாலும் ,பிரிக்க முடியா நட்பானாலும் படுக்கையறைக்கு வெளியே விட்டுவிடவும் .காலணிகளை கழற்றி வைப்பதைப்போல ...

நல்ல உறவினர்களை நட்புடன் அணுகவும் .அடையாளம் காணப்பட்ட அவலட்சண உறவுகளை அச்சத்துடன் அணுகவும் .

விட்டு விடுவதும் ,விடாமல் பிடித்து வைத்துக் கொள்வதும் உறவுகளை சமாளித்துக் கொண்டு போவோரின் திறமையில் இருக்கிறது .

உறவுகள் இல்லாமல் வாழ்க்கையும் இல்லை .வாழ்க்கை இழந்தவருக்கு உறவுகளும் இல்லை .

சேர்த்து வைத்த செல்வத்துக்கு சொந்தம் கொண்டாட வருபவர்களெல்லாம் அபலைகளின் சோற்றுக்கு வழி சொல்ல வருவதில்லை .

வீசியெறியப்பட்ட பருக்கைகளுக்கு கூடிக்கொள்ளும் காக்கைகள் கூட்டம் ...
தீர்ந்தபின் திரும்பியும் பார்ப்பதில்லை ..திண்ணைகளும் காலியாகும் .
- ஜே .பானு ஹாருன் .J Banu Haroon

Thursday, August 27, 2015

மகனே ....!

வாழப் பழகு
பழகப் பழக பழகும் பலவும்
பார்த்துப் பழகு

பார்த்துப் படி
படிக்கப் படிக்க பாகம் படும்
படித்தம் படிப்பினைகள் பெற்றுத் தரும்

பேசு நேர்கொண்டு
மெய்யும் பொருளும் அறிந்து
ஊரறிய உரக்க பேசு

Wednesday, August 26, 2015

குறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் : ஆர் எஸ் எஸ் பொய் பிரச்சாரம் அம்பலமாகியது…!


புது தில்லி: கடந்த சில தசம ஆண்டுகளில் இந்து மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இந்திய முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனை புதிய சென்சஸ் புள்ளிவிபரம் உறுதிப்படுத்தியிருக்கிறது. முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு குறைந்திருப்பதை சுட்டிக்காட்டும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு,   ஆர் எஸ் எஸ் பொய் பிரச்சாரத்தை அம்பலமாக்கி உள்ளது .

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மதவாரியான மக்கள்தொகை புள்ளிவிபரத்தை மக்கள்தொகை ஆணையர் மற்றும் பதிவாளர் நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார்.

தனிக்குடித்தனம்+பெண்கள்:& கஞ்சி+பெண்கள்.- Jaffarullah Jafar

தனிக்குடித்தனம்+பெண்கள்:

ஒரு வருடம் கழித்து தனிக்குடித்னம் போன மகன் வீட்டிற்கு மறுநாள் சென்ற தாய் அங்கே இருக்கும் சம்மந்திய பாத்து.

ஓ இங்கேயே தான் இருக்கீங்களா.

இல்ல சம்மந்தி இப்பதான் வந்தேன்.

பிரியாணி வாசனையெல்லாம் வருது.

வாங்க மாமி நான் தான் சமக்கிறேன் இருந்து சாப்புட்டு போங்க மாமி.

ஒனக்கு பிரியாணியெல்லாம் சமக்க தெறியுமா.
அது என்ன டிவி பொட்டி மாதிரி இருக்கு.

நான் தான் வாங்கிட்டு வந்தேன் சம்மந்தி.

ஓ...நீங்கதானா டிவிய இப்ப தான் கண்டுபிடிச்சானோ.

ஆமா உம்புருஷன் எங்க?

எந் தம்பி வத்துருந்தான் அவன ஸ்கூல்லவிட கூட்டிட்டு போயிருக்காரு.

அது சரி இப்புடி கூத்தடிக்க தானே தனியா வந்தீங்க நல்லா அடிங்கடியம்மா நான் வாறேன்.
-------------------------------------------

ஆலிம்களுக்கு அரசுப்பணி! அரசியல் பங்கேற்பு!! (2)கால்நூற்றாண்டுக்குள் ஒரு சமுதாய மாற்றம்!
*********************************************************************
அரபிக் கல்லூரிகளில் பாக்கியாத், பழம்பெருமைக்கு ஓர் எடுத்துக் காட்டென்றால் நவீன காலச் சிறப்புக்குரிய கல்லூரியான பி.எஸ். அப்துர்ரஹ்மான் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்திருக்கும் கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியை முன்மாதிரியாகவே கூறலாம். கடந்த பட்டமளிப்பு விழாவில் இரண்டு விஷயங்கள் பெரிதும் குறிப்பிடத் தக்கவையாக இருந்தன.

1.இலங்கையிலிருந்து பேருரை ஆற்றவந்திருந்த எஸ்.எம்.முஹம்மது மழாஹிர் அவர்கள் திருக்குர்ஆன் பலதுறைக் கல்வியை விலியுறுத்துவதை விளக்கிப் பேசியது. 2.ஆலிம் பட்டம் பெற்ற மாணவர்கள் அத்துடன் பல்கலைக் கழகப் பட்டம் ஒன்றையும் ஹாஃபில், கணினி போன்ற பாடங்களில் தேறி இரண்டு மூன்று பட்டங்களைக் கூடுதலாகப் பெற்றது.. இவை என்னை மிகவும் கவர்ந்தன.

Tuesday, August 25, 2015

அமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனைப் பெண்மணி பாத்திமா இஸ்மாயில்

 பதிவை வாசிக்கும் முன்னர் சிறு முன்னோட்டம்...

60'களில் பிறந்த நடுத்தர குடும்ப இஸ்லாமியப் பெண் ,  இராமநாதபுரத்தின் கடற்கரை கிராமம்   தான் பிறந்து வளர்ந்த ஊர் , இவர்   தான் மூத்த மகள், இவருக்கு பின் 6 பிள்ளைகள் . இந்த   அறிமுகத்துடன் அந்த  காலக்கட்டத்தில் பயணிக்கும்  போது நம்  கற்பனைக்கு வந்த கதாபாத்திரம் இப்படியிருந்திருக்க கூடும்..

    தலைமை ஆசிரியரான தந்தையின் கடுங்கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டு பள்ளிக்கூட வாசனையை நுகராதவர்?
    கணவன் கொண்டு  வரும்  போதாத மாத சம்பளத்தில் வீட்டை நிர்வகிக்கும்  அம்மாவால் சொல்லப்படும்  வீட்டு வேலைகளால்  கசக்கி பிழியப்பட்டு எந்நேரமும் களைப்புடனும், எண்ணெய் வழியும் முகத்துடனும் நான்கு சுவருக்குள் முடங்கி கிடப்பவர் ?
    பள்ளிக்குச் செல்லும் தன் சகோதரர்களுக்கு எடுபிடி வேலை செய்துக்கொண்டு எதிர்காலம் குறித்த கனவு காண கூட சுதந்திரமல்லாதவர்?
    "சனியன் தொலஞ்சா போதும்" என பருவமடைந்தவுடனே திருமணம் செய்துவைக்கப்பட்டு கணவன் வீட்டில்,  மாமியாரின் அதிகாரத்தில் அடங்கியிருப்பவர் ?
    பக்குவம் பெறாத  வயதிலேயே கணவனின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு  இருப்பவர் ??

போதும் போதும்... நம் கற்பனைகள் நீளலாம். ஆனால்  அவை அனைத்தையும் தகர்த்தெறிந்தவர் தான், நாம் பார்க்கவிருக்கும் சாதனைப் பெண்மணி.

Monday, August 24, 2015

ஆலிம்களுக்கும் அரசுப்பணி! அரசியலிலும் பங்கேற்பு!! (1)


1970-களின் இறுதியில் முதன் முறையாக மலேசியா சென்ற பொழுது அரசு அலுவலகங்களில் ஆலிம்கள் (இஸ்லாம் மார்க்க அறிஞர்கள்) கவனிக்கத்தக்க அளவில் பணிபுரிவது கண்டு வியந்தேன், நம்மூரில் அது நடவாதது அல்லவா?-அதனால்.

சகோதரர்கள் எளிதாக இவ்வாறு புரிய வைத்தனர்: வேலூர் பாக்கியாத்தில் படித்துவிட்டு தமிழ்நாடு அரசு தலைமையகத்தில் பணியாற்றுவது போல இதைக் கருதிக் கொள்ளுங்கள். இங்கு அதற்கேற்ற பாடத்திட்டம், அரசு ஆணை முதலியன உண்டு. அரசுப் பணிகளில் மட்டுமல்ல வாழ்வின் எல்லாத்துறைகளிலும் அவர்களுடைய பங்களிப்பும் அதற்குரிய அந்தஸ்துகளும் இங்கு உண்டு.

கேட்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

Saturday, August 22, 2015

உலக அமைதியின்மைக்கு காரணம் மதவாதமா?இனவாதமா ?


    M.P.ரபீக் அஹ்மத்    

            தொன்று தொட்டு இன்றுவரை மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாய் சிந்தப்பட்டுள்ளது. மதம் பிடித்த மனிதன்தான் மனிதனை கொல்கின்றான். இன்று உலகில் காணப்படும் அமைதியின்மைக்கு மதங்கள்தான் காரணம் மதங்கள் அழிந்தால்தான் மதங்களை ஒழித்தால்தான் மனித இனம் அமைதி பெறும் என்றெல்லாம் நாத்திகர்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இன்று உலகில் நடைபெறும் சம்பவங்ளை பார்க்கும்பொழுது இதில் உண்மையிருக்குமோ என்று மக்களுக்கும் சந்தேகம் ஏற்படுகின்றது. மதத்தின் பெயரால் இன்று மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுவதற்கு இந்த சந்தேகங்களும் ஒரு காரணமாகும்.

            மதங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் மதவாதிகள் தங்களுக்குள் சண்டை போடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். 'மத்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே பேர் ரக்னா' என்று அல்லாமா இக்பால் கவிதை பாடினார். எந்த மதமும் தங்களுக்குள் பேதங்களைப் பாராட்ட சண்டையிட்டுக்கொள்ள கற்றுத்தரவில்லை. என்பது இதன் அர்த்தமாகும். பிறகு மதங்களின் பெயரால் இந்தச் சண்டை ஏன்? இந்தக் கேள்விக்கு நாம் விருப்பு வெறுப்பின்றி ஆராய்வோம்.

இணை உண்டா?'

'சூரியனுக்கு
இணை உண்டா?' என்றால்
'இல்லை' என்கிறார்கள்

'நிலவுக்கு
இணை உண்டா?' என்றால்
'இல்லை' என்கிறார்கள்

'கடலுக்கு
இணை உண்டா?' என்றால்
'இல்லை' என்கிறார்கள்

'காற்றுக்கு
இணை உண்டா?' என்றால்
'இல்லை' என்கிறார்கள்

ஆனால்
இவையெல்லாம் படைத்த
உனக்கு மட்டும்
இணை வைக்கிறார்களே
ஏன் இறைவா...?
அப்துல் கையூம்

Wednesday, August 19, 2015

"பேரீச்சம் பழக்காட்டின் பிரதிநிதிகள்"(அண்ணலார் பற்றிய பகுதி.-Hilal Musthafa)

"பேரீச்சம் பழக்காட்டின் பிரதிநிதிகள்"--8-ஆம்
தலைப்புக் கவிதை:---

(அண்ணலார் பற்றிய பகுதி. சற்று நெடியது. எனினும் பிரித்து இரு பகுதியாக்கிப் பதிய மனம் ஒப்பவில்லை. அப்படியே பதிவிடுகிறேன்.-Hilal Musthafa)

---8---
யுகச் சுத்திகரிப்பு...!
சூரிய முட்டையின்
சுகப் பிரசவம்தான்
பாலை
வெளிப் பரப்பு...!

அங்கே
உலகு வரம்புக்கே
ஒரு
நிழற்குடை
இலவசமாக
நிறுவப்பட்டது...!

தீய தொழும்பர்களின்
கேளிக்கைத் திடல்களாகப்
பூமியின்
புறப்பகுதி
புண்ணாக்கப் படுகையில்
ஒரு
மருத்துவமனை
இறை மானியமாக
வழங்கப்பட்டது...!

Friday, August 14, 2015

அலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள்

அலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இன்றியமையாத வரலாற்றுப் பக்கங்களில் அலீ சகோதரர்கள் என்று அழைக்கப் படும் மெளலானா முஹம்மது அலீ மற்றும் ஷவ்கத் அலீ ஆகியோருக்கு நீக்கப்பட இயலாத பல பக்கங்கள் சொந்தமாகும்.

மகாத்மா காந்தி, இந்த சகோதர்களைப் பற்றி ஒரு முறை குறிப்பிடும்போது, “என் தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளதைக் காணும் போது, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்த சகோதர்களின் பங்கு எந்த அளவுக்கு இருந்து இருக்குமென்று நாம் உணரலாம்.

இந்த சகோதரர்களின் வரலாற்றைக் காணும் முன்பு இவர்களை ஈன்றெடுத்த தாயார் ஹாஜியா ஆலாஜி பானு அவர்கள் பற்றிய ஒரு மறக்க முடியாத வரலாற்றுக் குறிப்பை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அலீ சகோதர்களின் வீட்டுக்கு வருகை தந்த காந்திஜிக்கு அவர்களின் தாயார் ஆலாஜி பானு என்கிற பீவிமா தான் தனது கையால் ராட்டையில் நெய்த ஒரு ஆடையைப் பரிசாக வழங்கி “காந்திஜி! இதைக் கதராக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.

கதர் என்றால் உருது மொழியில் “கவுரவம்” என்று பொருள். அன்று முதல் கதர் என்பது தனது கரங்களால் தானே நெய்து உடுத்தும் ஆடை – அன்னியக் கலப்பில்லாத ஆடை நாட்டின் மக்களுக்கு கவுரவத்தையும் சுய மரியாதையையும் வழங்கும் தன்மை உடையது என்கிற கோட்பாடு காந்தியால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

இஸ்லாம் எங்கள் இதயம் கனிந்த வாழ்வுரிமை --எம் இந்தியம் எமது தோற்றம் நிகழ்ந்த பிறப்புரிமை!

இஸ்லாம் எங்கள்
இதயம் கனிந்த வாழ்வுரிமை --எம்
இந்தியம் எமது
தோற்றம் நிகழ்ந்த பிறப்புரிமை! ( இஸ்லாம்...)

சுவனமே நாங்கள்
சுற்றித் திரிந்து தங்குமிடம்--சுகச்
சோபனம் நிறைந்து
இறையருள் கனிந்து பொங்குமிடம்! ( இஸ்லாம்...)

கடமைகள் ஐந்தும்
கருணை யாளன் கட்டளைகள்--நபி
நடைமுறை அவற்றில்
சுடரும் ராஜ முத்திரைகள்! (இஸ்லாம்...)

Wednesday, August 12, 2015

அப்துல் கலாம் அவர்களின் நினைவாக கவிதாஞ்சலியின் மலர்ந்த சில கண்ணீர் பூக்கள் !Raheemullah Mohamed Vavar

துண்டு காகிதம் இருந்தால்
காகித கப்பல் செய்யலாம்
படிக்கிற செய்தித் தாளில்
வெடிக்கிற ஏவுகணை
செய்ய முடியுமா
செய்து முடித்தாரே கலாம் !

கோவில் படிகளில்
மல்லாந்து கிடந்தால்
பறக்கிற விமானம்
கண்ணுக்கு தெரியலாம்
கண்டம் தாவி
அண்டம் அழிக்கும்
ஏவுகணை தெரியுமா ?

‘அநாதைகளின் தாய்’ மறைவு – சவூதி அரேபியர்கள் இரங்கல்!

ரியாத்: அநாதைகளின் தாய் என்று போற்றப்பட்ட கொடைவள்ளல் சனா பின்லாதின் மறைவுக்கு சவூதிஅரேபிய மக்கள் சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த துயரத்தையும் இரங்கலையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

கட்டுமானத்துறையில் சவூதியில் பிரசித்திப் பெற்ற பின்லாதின் குடும்ப மகளாகப் பிறந்த சனா எளிமையான வாழ்வுக்கும் வள்ளல்தன்மைக்கும் பெயர் பெற்றவராகத் திகழ்ந்துவந்தார். கடந்த வெள்ளியன்று லண்டன் ஹாம்ப்ஷையரில் தனியார் விமானமொன்று தரையிறங்க முயன்று விபத்துக்குள்ளானதில் சனாவும், அவருடைய கணவர் ஸுஹைர் ஹாஷிம், தாயார் ரஜா ஹாஷிம், விமானத்தின் வளவர் ஆகியோரும் இறப்பைத் தழுவினர்.

Tuesday, August 11, 2015

கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகை
   MEPCOT

                       (Muslim Educational  Promotion & Counselling Organisation Of  Tamil Nadu )

            முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக் குழுமம் – தமிழ்நாடு

http://mudukulathur.com/?p=36415

                        அறிவிப்பு


  பொருளாதார வசதியில் தாழ்ந்த நிலையிலிருக்கும் மாணவ மாணவியருக்கு கல்விக்காக உதவித் தொகை வழங்குகிறோம். உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

          உதவித் தொகை வழங்கப்படும் துறைகள்

மருத்துவம், பொறியியல், இதழியல், செவிலியர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, தொழிற்கல்வி, M.C.A. டிப்ளமோ.

                  விண்ணப்ப படிவம் கிடைக்க

Monday, August 10, 2015

எண்ணமும் எடையும்!

இதென்ன
இப்படிக் கனக்கிறது!

எண்ணங்களுக்கு எடையுள்ளதா
எனும் கேள்விக்கு விடையுள்ளதா?

கண்டெத்திய பாவங்களின்
கணக்கொரு கனம் - நாவால்
சொல்லிச் சேர்த்த பாவச்
சுமையொரு கனம்

Sunday, August 9, 2015

குழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்? (சிறுவர் உளவியல்)

-by இம்தியாஸ் யூசுப் ஸலபி-
பாடசாலை அச்சநோய் (School Phobia)
பிள்ளைக்கு நான்கு வயதாகும்போது பாலர் பாடசாலைக்கும் ஐந்து வயதாகும் போது பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதை பார்க்கிறோம்.

பல பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது மிகுந்த சந்தோசத்துடன் செல்கின்றனர். காரணம் பாடசாலையில் விளையாட்டுடன் கூடிய படிப்பும், நண்பர்களின் அறிமுகமும் ஆரவாரத்துடனான செயற்பாடுகளுமேயாகும். குறிப்பாக ஆசிரியர் பிள்ளையுடன் அதிக கவனத்துடனும் பாச பிணைப்புடன் பழகும்போது பிள்ளை அந்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறது. பாடசாலைக்குச் செல்வதற்கும் அதிக விருப்பத்தை தெரிவிக்கிறது.

அதேவேளை இன்னும் சில பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கும் பெற்றோரிடமிருந்து பிரிந்து போவதையும் கண்டு அஞ்சுகிறது. பயப்படுகிறது. அழுது புலம்புகிறது. இவ்வாறான பிள்ளைகளை சமாளித்து நிதானப்படுத்துவதில் பெற்றோர்÷ஆசிரியர் பெரும் பாடுபடுவர்.

Saturday, August 8, 2015

"அன்னை" என்பவள் நீதானா!

நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து,
நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும்,
நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும்,
நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,


நிற்கதியாய் தவிக்கவிட்டு நின் சொந்தம் விலகிடவும்,
நீ யொருத்தி தனிநின்று நெருடலுடன் வாழ்ந்திடவும்,
நெடுந்தூரம் சென்றிடவே நீசர்சிலர் விரட்டியதால்,
நின்கணவர் நிழல்தொடர்ந்தாய் நித்தமும் இறைதொழுதாய்!

யாருமே துணையில்லை என்றபோதும் ஏங்கிடாமல்,
இருக்கின்றான் இறைவனென்ற எண்ணமே உந்தனுக்க்கு,
ஏற்றம் தந்ததினால் ஏணியாய் நீ வாழ்ந்தாய்!
இஸ்லாத்தின் கடமைகளை என்றென்றும் கடைபிடித்தாய்!

Wednesday, August 5, 2015

குடி கெடுக்கும் குடியரசுகள்


அல்குர்ஆனின் வழியில் அறிவியல்……

இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அல்லாஹ் கூறுகின்றான்,

    “சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள பயனை விடப்பெரிது.” அல்குர் ஆன்-2:219

மது குடிப்பதால் சில பயனுண்டு என்று அல்குரான் கூறுவதை, இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.அதாவது இதய நோய் மற்றும் மாரடைப்பு (Coronary Heart Diesease) வராமல் தடுப்பதில் சிறிது பங்குண்டு.ஆயினும் இப்படி சிறிது மது குடிப்பவனின் நிலமை,ஒருவன் செங்குத்தாக வழுக்குப்பாறையில் ஏறுவதற்க்குச்சமம்.எந்த நிலையிலும் அவன் சறுக்கிவிலலாம் உயிருக்கு ஆபத்து.ஆகவேதான் இதில் பல மடங்கு தீமை உள்ளது என்று அல்லாஹ் தடை செய்கின்றான்.

Sunday, August 2, 2015

பற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின?

ஒரே பூமி ! ஒரே மனித குலம்! ஒரே இறைவன் ! அவன் போதித்த கொள்கையும் ஒன்றே! பிறகு நாம் ஏன் பிரிந்தோம்? ஏன் இன்று அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது? ஏன் இன்று பற்பல மதங்களும் ஜாதிகளும் உருவாகி ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு அமைதி இழந்து தவிக்கிறோம்? இதன் காரணத்தை நாம் அனைவரும் அவசரமாக ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதில் அலட்சியம் காட்டினால் இவ்வுலகில் அமைதி இன்மையும் இறைவனின் கட்டளைகளை மீறுவதால் அவனது கோபத்தின் விளைவாக உண்டாகும் தண்டனைகளையும் நாம் சந்திக்க நேரிடும்., மறுமை வாழ்வில் அவனது பெரும் தண்டனையான நரகத்தையும் எதிர்கொள்ள நேரிடும்..
சற்றே அதர்மத்தின் ஆரம்பத்தை ஆராய்வோம்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாட்டுக்கு ஒரு இறைத் தூதர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் . அவர் அந்நாட்டு மக்களுக்கு தான் இறைவனிடமிருந்து பெற்ற செய்திகளை எடுத்துரைக்கிறார்.

LinkWithin

Related Posts with Thumbnails