Friday, August 28, 2015
ஆலிம்களுக்கு அரசுப்பணி! அரசியல் பங்கேற்பு!! (3) - Yembal Thajammul Mohammad
இந்தத் தொடரை ஆலிம் பெருமக்களும் படித்து வருவதை அறிய மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்கள் முனைவர் பட்டம் வரை பல பட்டங்கள் பெற்று- பெற முயன்று- வருவது மேலும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அந்த முயற்சியாளர்களுக்கு அல்லாஹ் வெற்றியளிப்பானாக.
களத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப மக்களுக்கு மார்க்கத்தைச் சமர்ப்பிக்க பலவகை அறிவாயுதங்கள் தேவை. எனவே அவர்கள் முயற்சியை வரவேற்போம். வாழ்த்துவோம்.
ஆலிம்கள் பள்ளிவாசல்களையும் மத்ரஸாக்களையும் மட்டும் தங்கள் வாழ்வாதாரங்களாக நம்பி இராமல் பலதுறைகளிலும் பரவி மார்க்க மணம் வீசப் பணிபுரிந்தால் அது எல்லாத் தரப்பு மக்களுக்கும் நலம் பயக்கும் என்பது என் நம்பிக்கை. இதற்கு இஸ்லாமியச் செய்தியுடன் உலகம் எங்கும் பரவிச் சென்ற அந்தக் கால உலமாப் பெருமக்களான ஸஹாபாப் பெருமக்கள்- அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமைத் தோழர்கள்- அழகான உதாரணங்கள்.
இதே கண்ணோட்டத்துடன் ஐ.ஏ.எஸ். கேடரில் அரசுப் பணியாற்றும் ஓர் இளம் ஆலிம் புயல்வேகத்துடனும் தனித்த போக்கிலான புத்திசாலித்தனத்துடனும் செயலில் ஈடுபட்டுள்ளதை அறிந்து எனக்கு இன்ப அதிர்ச்சியே ஏற்பட்டுவிட்டது. ஒரு நாள் என்னைச் சந்திக்க வந்த அவர் கூறிய விவரங்களைக் கேட்டதும் இந்தக் கனவுகளெல்லாம் நிறைவேற வேண்டும் என துஆ செய்தேன். மதீனா, மலேசியா மற்றும் இலங்கைப் பல்கலைக் கழகங்களுடன் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்று தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் ஆலிம்களுக்கான ஓர் ஆய்வுநிறுவனம் ஒன்றைப் பல்கலைக் கழக பாணியில் அவர் தொடங்கியே விட்டார்! நம் கான் பாகவி ஹஜரத் அவர்கள்தாம் இதன் கௌரவத் தலவர்/முதல்வர்.
ஏழாண்டு காலம் ஓதித் தேறியவர்கள் அதில் ஆராய்ச்சி மாணவர்களாகச் சேர்ந்துள்ளனர். அவர்கள் படித்து வெளிவரும்போது பட்டைதீட்டப்பட்டப் பன்முக வைரங்களாக, அறிவார்ந்த படைக்கலன்களாக வெற்றிகரமாக வெளிவருவர் என்பது திண்ணம்.அவர்கள் பன்னாட்டுப் பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள் என்பது எதிர்பார்ப்பு.
----------------------------------( 3-வது,4-வது படங்களில் நானும் `தாலிபுல் இல்ம்’ஆக.....)
Yembal Thajammul Mohammad
Yembal Thajammul Mohammad
ஆலிம்களுக்கும் அரசுப்பணி! அரசியலிலும் பங்கேற்பு!! (1)
ஆலிம்களுக்கு அரசுப்பணி! அரசியல் பங்கேற்பு!! (2)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment