கால்நூற்றாண்டுக்குள் ஒரு சமுதாய மாற்றம்!
*********************************************************************
அரபிக் கல்லூரிகளில் பாக்கியாத், பழம்பெருமைக்கு ஓர் எடுத்துக் காட்டென்றால் நவீன காலச் சிறப்புக்குரிய கல்லூரியான பி.எஸ். அப்துர்ரஹ்மான் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்திருக்கும் கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியை முன்மாதிரியாகவே கூறலாம். கடந்த பட்டமளிப்பு விழாவில் இரண்டு விஷயங்கள் பெரிதும் குறிப்பிடத் தக்கவையாக இருந்தன.
1.இலங்கையிலிருந்து பேருரை ஆற்றவந்திருந்த எஸ்.எம்.முஹம்மது மழாஹிர் அவர்கள் திருக்குர்ஆன் பலதுறைக் கல்வியை விலியுறுத்துவதை விளக்கிப் பேசியது. 2.ஆலிம் பட்டம் பெற்ற மாணவர்கள் அத்துடன் பல்கலைக் கழகப் பட்டம் ஒன்றையும் ஹாஃபில், கணினி போன்ற பாடங்களில் தேறி இரண்டு மூன்று பட்டங்களைக் கூடுதலாகப் பெற்றது.. இவை என்னை மிகவும் கவர்ந்தன.
சில நாட்கள் கழித்து புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி முதல்வரைத் தொடர்புகொண்டபோது ஒரு பல்கலைக் கழகப் பட்டமும் 21-வயதும் உடைய எவரும் ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வை எழுதி ஆட்சிப் பணிகளுக்குச் செல்லலாம் என்பதையும் வட இந்தியாவில் தேவ்பந்தில் ஓதிய ஆலிம் ஒருவர் அவ்வாறு தேர்வாகி ஐ.ஏ.எஸ். அலுவலராகப் பணியாற்றுகிறார் என்ற செய்தியையும் கவனப் படுத்தினேன். அவரும் மிக்க மகிழ்ச்சியோடு இதைப் பரிசீலித்து இந்த ஆண்டே நடைமுறைப் படுத்த முயலலாம் என்று சொன்னபோது நமக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
அரசுத் துறைகளிலும் ஏனைய எல்லாப் பணிகளிலும் மார்க்க அறிஞர்கள் பணியாற்றிப் பரிணமிக்கும் போது அது சமுதாயத்துக்கு, நாட்டுக்கு, மார்க்கத்துக்குப் பலவகையிலும் நலம் பயக்கும் என்பது எல்லாரும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதுதானே! எனவே நம் மக்கள் இவ்வாறான கல்வியிலும் முயற்சிகளிலும் இப்போதிருந்தே கவனம் செலுத்தினால் ஒரு பெரும் சமுதாய மாற்றத்தைக் குறைந்தபட்சம் கால்நூற்றாண்டுக்குள் இன்ஷா அல்லாஹ் கண்டு மகிழ முடியும்.
இம்மைக்கும் மறுமைக்கும் ஒரு சேர நன்மையளிக்கும் இந்தப் பாதை பெரிதும் கவனத்திற்குரியது.
1 comment:
பயனுள்ள தகவல்.
மதிப்பு மிக்க யோசனை!
Post a Comment