Wednesday, August 19, 2015

"பேரீச்சம் பழக்காட்டின் பிரதிநிதிகள்"(அண்ணலார் பற்றிய பகுதி.-Hilal Musthafa)

"பேரீச்சம் பழக்காட்டின் பிரதிநிதிகள்"--8-ஆம்
தலைப்புக் கவிதை:---

(அண்ணலார் பற்றிய பகுதி. சற்று நெடியது. எனினும் பிரித்து இரு பகுதியாக்கிப் பதிய மனம் ஒப்பவில்லை. அப்படியே பதிவிடுகிறேன்.-Hilal Musthafa)

---8---
யுகச் சுத்திகரிப்பு...!
சூரிய முட்டையின்
சுகப் பிரசவம்தான்
பாலை
வெளிப் பரப்பு...!

அங்கே
உலகு வரம்புக்கே
ஒரு
நிழற்குடை
இலவசமாக
நிறுவப்பட்டது...!

தீய தொழும்பர்களின்
கேளிக்கைத் திடல்களாகப்
பூமியின்
புறப்பகுதி
புண்ணாக்கப் படுகையில்
ஒரு
மருத்துவமனை
இறை மானியமாக
வழங்கப்பட்டது...!

வாழ்வுத் தோணிகள்
இலக்கு வாய்க்காமல்
தான்தோன்றித் தனமாய்த்
தருக்கி திரிகையில்
கரையேற்றத்திற்கு
ஒரு
சூறாவளியே
துணையாய் வந்தது...!

முன்னேற்றத்தின்
மூல காரணங்கள்
காலக் கடலில்
கரைந்து போனதால்
ஒரு
முன்மாதிரியே
அருளாக
ஈயப்பட்டது. ..!

ஞாலக் கிழவன்
கருவிழிகளைக்
களவு கொடுத்ததால்
ஒரு
ஞானப் பிரகாசம்
நன்கொடையாக
நல்கப்பட்டது...!

ஆம்...

நாயகம் பிறப்பே
நானிலக் குளிகையின்
சுத்திகரிப்பு...!

யா...ரசூலல்லாஹ்...!

நீங்கள்தாம்
இறுதியாக்கப்பட்ட
இறையறிவிப்பு. ..!

உங்கள்
ஒளிச் சிதறல்தான்
இந்த
உற்பத்திப் பொருள்கள்...!

ஆனாலும்
உங்கள் வருகை...

ஒரு
உப்பரிகையின்
உட்புறத்தில்...

ஒப்பனைகளின்
உச்சநிலை மண்டபத்தில்...

பஞ்சணையின்
மத்திபத்தில். ..

இசைத் தூறல்கள்
சஞ்சரிக்கும்
ஓரிடத்தில்...

சம்பவித்து விடவில்லை...!

எங்களைப் போலவே
ஏழ்மைத்
தாழ்வாரத்தில்தான்
உங்களுக்கும்
இடம் கிடைத்தது...!

எளிய பாதங்களுக்குக்
கீழ்தானே
இந்தப் பூமிச்சுருள்
விரிக்கப்பட்டுள்ளது...!

இந்த
மண் சிரசுக்குப்
பாமரப் பாதங்களே
மணி மகுடங்கள். ..!

நீரெல்லைகளால்
தீர்மானிக்கப்பட்ட
நிலப்புறத்தில்
இந்த
எளிய கரங்களே
இறையருள் அடையாளங்கள்...!

"ஹிரா க் கல்வயல்
ஞானத் தீப் பிழம்பு
நடவு நடந்த
தேகமல்லவா. ..?

அங்கே...
வெறுமையாக
வழங்கப்பட்ட
உடற் பாத்திரத்தில்
நபித்துவத்
தேன் துளிகள்
வார்க்கப்பட்டன. ..!

இந்த
மானிட
மண்டை அறைகளில்
மண்டிக் கிடக்கும்
கல்விச் செடிகளைக்
கண்டறியாத
நீங்கள்
படைப்புக்காரனின்
பல்கலைக் கழகமாகப்
பரிணமித்தீர்கள. ..!

வெற்று
எழுத்து உச்சரிப்புகள்
ஞான பீடங்களாக
நினைக்கப் படுகையில்
நீங்கள்தாம்...

ஞான உச்சரிப்பை
எழுத்து முதுகினில்
ஏற்றி வந்தீர்கள்...!

படிப்பறிவு மட்டுமே
பாத்தியதையான
இந்தப்
பாமரப் பண்டங்களுக்கு
உங்களால்
ஞானச் சாற்றினை
நிரப்ப முடிந்தது...!

ஏனென்றால்
நீங்கள்
ஏகத்துவக் காரனின்
எழுத்து வடிவமல்லவா. ..?

மனித வர்க்கங்கள்
வார்த்தைகளாக
வார்க்க முடியாத
ஓசைகளே
உங்கள்
வேத உச்சரிப்புகள்...!

அங்கே
கலப்பட வார்த்தைகள
கலக்க நேர்ந்தால்
கழுத்தறுபட்டுத்
தற்கொலைகளாகத்
தவறிப் போகும்...!

உங்கள்
நாக்குக் கூர்மையே
நாயகன் செய்தியைச்
செதுக்கித் தந்தது...,

உங்கள்
இதழ்ப் பூங்காவில்
தவழ்நத மொழிகள்
இறுதிக் கால
எல்லை யளவும்
சுவடுகள் பதிக்கும்...!

உங்கள்
நடத்தைகளே அல்லவா
நாவுகளாயின. ..!

உங்கள் தேகமே
இந்தப்
பூமி வாசிகளுக்கு
நடைமுறைகள்...!

உங்கள்
ஆன்மாவே
உலகத் தலைவன்
உச்சரித்த
வார்த்தைகளின்
அச்சு வடிவம்...!

நீங்கள்
ஏகத்துவத்தின்
ஏக தயாரிப்பு...!

நாங்களோ. ..

இந்த
மண் மடந்தையின்
அருவருப்பாலே
அதன்
மேனி வெளியில்
எழுகின்ற
அடையாளப் புள்ளிகள். .!

ஆனாலும்
எங்கள்
சொல் அசிங்கங்களை
உங்கள்
தூதுச் செய்திகளை
நோக்கித்
தூக்கி எறிந்தோம். ..!

எங்கள்
வாழ்வுப் பாதையில்
வந்து குவியும்
குப்பைக் கூளப்
பொருள்களுக்கு
உங்களிடமே
நெருப்புத் துண்டங்கள்
நிறைந்திருந்தன. ..!

எனினும்
குப்பைகளுடனே
ஒரு
விவாக சம்பந்தம்
கொண்டிருந்ததால். ..

நாங்கள்
புனித மாளிகைப்
புறத்திலும் கூட
அசுத்தக் கழிசடைத்
தோரணங்கள்
அணிவித்திருந்தோம். ..!

எங்கள் நாயகமே. ..!

நீங்கள்
ஞானப் பலாச்சுளையை
நாருரித்துத் தந்தாலும்
எட்டிக் காய்களுக்கே
எங்கள்
இதழ்கள் கடையில்
விற்பனை வரியினை
விலக்கி யிருந்தோம். ..!

பிறப்புப் போதினில
பெண் மகவுகளைத்
தரைக்குழிகளே
தழுவிக் கொண்டன. ..!

எண்ணிக்கையில்...

ராக்காலத்து
வான உச்சியின்
வெளிச்சப் புள்ளிகள் கூட
பெண்சிசுப்
புதைகுழி இடத்தே
தோற்றுப் போகும்...!

அங்கே
பெண்மைச் சமூகம்
பிறப்பு நடத்துகிற
தசைக் கூடாரங்கள்...!

பூமித் தகட்டின்
புற வெளியில்
சூரியன் தீபம்
சுடர் விடுகையில்
அரபிகளுக்கு
ஒட்ட முதுகே
உல்லாச இருக்கை...!

அந்தி சரிந்தபின். ..!

வெண்ணெய் சிந்தும்
நிலா
வேளைகளில்
பெண்களே
அவர்களின்
சுகச் சத்திரங்கள்...!

அரபுகளே
உங்கள்
அதரங்களே
மது வேசையின்
மலக் கூடங்கள்...!

அதனால்தான்
வீச்ச மொழிகளையே
விளைவிக்க முடிந்தது...!

உங்கள்
இதயப் புல்வெளிகள்
"இப்லீஸு" மாடுகளின்
மேய்ச்சல் மாநிலம்...!

அதனால்தான்
உங்கள்
தத்துவத் தீவனத்தால்
எங்களின்
குரல் வளைகளை
நெறிக்க முடிந்தது...!

உங்கள்
தெருக்களே
தீட்டாகிப் போனதால்
சுவனத்துத் தெருக்களின்
ஜோதிக் கம்பம்
நாடு கடந்தது...!

கபத்துல்லாஹ்வின்
முற்றமே. ..!
மக்க மாநகரமே...!

உன் மேனியில்
சிலகாலம்
நெருப்பின் தந்தையை (அபு ஜஹ்ல்)

நடமாட விட்டதால்
வற்றுதல் அறியாத
வளப்பச் சுனையினை
மதினம் நோக்கி
வழி
அனுப்பி விட்டாய்...!

ஏ...!மக்கமே. ..!

நீ மட்டும்
இறையில்லம்
இல்லாது இருந்திருந்தால்
எங்கள்
தாய்மார்களின்
பாதம் பதியும்
அடுக்களைகளாய்
ஆகியிருப்பாய்...!

நாயகமே...!

இன்றைய யுகத்தின்
சிகப்பு உபதேசம்
உங்கள் இடத்தில்தான்
உபன்யாசம்
கேட்டு வந்தது...!

ஏகத்துவத்தின்
எழுத்து வடிவுகள்
இறக்குமதியான
இதழ்க் களமே. ..

கவசம் அணிந்த
வீர மொழிகளின்
காலனிகளாயின...!

எந்தக் கரத்தில்
இறை
உச்சாடனம்
எண்ணப்பட்டதோ. ..

அந்தக் கரத்தின்
உத்தரவே
அனல் ஆயுதத்தால்
அற்பத் தலைகளில்
அறுவடை கண்டது...!

உழவுக் கரங்களின்
உறவுகள் இழந்த
நில விதவைக்கு
நீங்கள்தாம்
பறிமுதல் விழாவில்
மறுமணம்
பண்ணி வைத்தீர்கள். ..!

சிவப்பு நீரோட்டம்
சிணுங்கி ஓடிய
பச்சை
வெளிப்பரப்பே. ..!

"ஹவ்வா" வர்க்கங்கள்
உங்களின்
காலக் கட்டத்தில்தான்
கண்ணியக் காற்றால்
வெப்ப வெதும்பலுக்கு
விலக்காயினர். ..!

விதவை
வெள்ளை நிலாக்களுக்கு
விடியல் வேளையினை
வரவழைத்துத் தந்தவரே. ..!

செல்வச் சீமாட்டி
சில
வீடுகளில் மட்டுமே
சிருங்காரச் சூத்திரம்
வாசித்திருக்கையில்
"ஜக்காத்" முக்காட்டில்
சகல இல்லிற்கும்
பணப் பத்தினியை
அனுப்பி வைத்தீர்கள்...!

முதல் என்னும்
இளங்கன்னி
முறைதவறிக்
கைமாறிப் போனதினால்
வட்டிப் பிள்ளைகளை
வாரம்தோறும்
பெறுகின்றாள். ..!

அந்த
"ஹராத்"துக் குழந்தைகளை
நிராகரித்தவரே...!

"தாயிபு" நகரம்
உங்கள்
தளிர் மேனிக்குத்
தாக்குதல் ஆயுதம்...!

ஆலும் தத்துவஙகளின்
சரீரத்தில் ஆயுதங்கள்
தாக்குதல் நடத்துகையில்
ரத்தப் பரிமாற்றமே
ஒரு "சுன்னத்"தானது. ..!

நாயகமே...!

இந்தச் சுன்னத்துதான்
இன்றைய உலகத்தில்
எண்ணப்பட வேண்டியதோ. ..?

ஓ!
எங்கள் ரட்சகனின்
உன்னத
நேசக்காரரே. ..!

மானுடச் சரித்திரம்
உங்கள்
ஜனனத்தோடு
ஆரம்பம் செய்து
மறைவோடு
முற்றுப் பெற்றது...!

உங்களுக்கு...

முழுமையாக்கப்பட்ட
வேதத்தை மட்டுமா
இறைவன்
வழங்கினான்...?

முற்றுப் பெற்ற
வாழ்க்கையும் அல்லவா...!

நாங்கள்
வெறும்
பிரச்சினைப் பிரதேசங்களின்
நடமாடும்
புதைகுழ்கள். ..!

சதா காலமும்
தவறிய தாளங்களையே
தட்டித் தெரிந்தவர்கள்...!

எங்கள்
ராஜ பாட்டையில்
துன்ப விருட்சங்களே
நிழற் தூண்களாக
நிறைந்திருக்கும்...!

உறவுகளைக் கூட
ஒரு வகையான
வாணிபத்தைப் போல
வகுத்துக் கொண்டாலும்...

கருணைகளை
அளவு படுத்தாமல்
அள்ளித் தருகிறவனே. ..!

நீ
எங்கள்ப் போல
ஒரு வர்க்கத்தை
இதுவரைக்கும்
புனிதப் படுத்தவில்லை...!

உன் அருள்களின்
உச்சவரம்பு
நாயகம்...!

அவர்களை
அப்படியே
அனுமதித்து கொண்ட
உன்
அடிமை நேசரகள்
நாங்கள்...!

மரியாதைத் தாம்பூலத்தில்
எங்களை வைத்துக்
கவ்ரவப் படுத்திய
தூதுக்காரரே. ..!

மக்கத்து அரபுக்காரர்கள்
முனை மழுங்காத
முள் வீதிகளில்
உங்களை
நடக்கவிட்டாலும்...

செத்த
ஒட்டகையில்
சேகரித்து வந்த
நாற்றக் குடல்களையே
உங்கள்
மேனி வெளிகளில்
நாட்டி வைத்தாலும்...

வாய்ச் சாக்கடையின்
வார்த்தைத்
துர்வாடைகளை
உங்களை நோக்கி
துரத்தி விட்டாலும்...

ரத்தப் புஷ்பங்கள்
ரண நாறில்
கோவைப்பட்டுச்
சரஞ்சரமாக
சரிந்து விழ
கல் ஆயுதங்களைக்
கையாண்டாலும்...

ஒருநாள்...

உங்கள்
வெற்றி மண்டபத்தில்
வெறுமனே
அவர்கள் நின்ற போது...

விரோதப் புயலை
விளைவிக்காது
நேசக் கரத்தால்
மன்னிப்புக் கனிகளை
வாரி வழங்கிய
விநோதக்காரரே. ..

அபிஸீனிய
கறுப்பு ரோஜாக்களின்
அடிமை அழிம்புகளை
ஒரு
வாக்குப் பிரமானத்தாலேயே
முறித்து விட்டவரே...

வர்க்க பேதங்களை
வாசல் படிகளாக
வைத்திருக்கையில். ..

அன்புத் துளிகளை
அனுப்பி வைத்துக்
கரைத்து முடித்த
காரியக்காரரே. ..!

தேசப் பிரதேசங்கள்
பிரிவினைப் பாயில்
சோம்பல் துயிலில்
சுகித்துக் கிடக்கையில்
ஒரு
ஒப்பந்தத்தால்
ஒருமைத் தெருக்களில்
உலவச் செய்தவரே. ..!

இந்தச்
சாம்ராஜ்யங்கள்
அனைத்தின்
சர்வாதிகாரி
இறுதியாக
அனுப்பிய
கடைசித் தீர்வே...!

நீங்கள்தான்
இறைவன்
அருளின்
மிச்ச சொச்சமில்லாத
மொத்த வரவு...!

உங்ளுக்கு
முன்னால்...

துண்டுத் துண்டுச்
சமூகங்களுக்காகத்
தூது தரப்பட்டது...!

நீங்கள்தான்
ஒட்டு மொத்தமான
உலக வரப்புக்குத்
தூதுச் செய்தியைத்
தூக்கி வந்தவர்கள்...!

இறை ஆற்றலுக்கு
மனிதப் படைப்பே
எடுத்துக் காட்டு...!

மானுடத்தின்
முதல்
சுவன நடமாட்டம்
இறையருளுக்கு
விளக்க விளம்பரம்...!

சுவன நீக்கம்
அவன்
தண்டனையின்
வெளிப்பாடு...!

மனிதப் பூமியில்
அவனின்
மறுபடி வாழ்க்கை
இறைக் கருணையின்
அத்தாட்சி...!

வர்க்கங்கள் தோறும்
வழி தப்புகையில்
தூதுக்காரர்களை
ஏவி விட்டது
அவனின்
இரக்கச் சாட்சியங்கள்...!

நாயகமே...

நீங்கள்தான்
இறைக் குணங்களின்
வெளிப்பாட்டிற்கு
முற்றுப் புள்ளி.....!

அனைத்துத் தரப்பாருக்கும்
அவன்
அனுப்பி முடித்த
வாழ்க்கை எல்லையின்
இறுதிப் பாகம்...!

"அர்ஷு ப் புறத்து
அருள் வெள்ளத்தின்
கர்ப்ப ஊற்று...!

அவன்
தயாரித்திருக்கும்
துலாம்பரத்தில்
அனைத்துப் படைப்புக்கும்
ஒரு தட்டென்றால். ..

அடுத்தத்
தனித் தட்டு
தங்களுக்காகவே...!

இணை என்ற
சொல்லையே
ஏற்பாடு செய்யாத
ஏகனே. ..

உன்
அருள்கள்
அனைத்தையும்
அலங்கரித்து
கட்டி முடித்த
நாயக மாளிகையில்
எங்களின்
நடமாட்டத்தையும்
அனுமதித்தவனே. ..!

எங்களின்
நன்றி மூட்டைகளைச்
சுமந்து வருகிறோம்...!

சுமைப் பாரங்களை
உன்
சன்னிதானத்திலேயே
சமர்ப்பித்துப் பணிகிறோம்...!

                                       Hilal Musthafa

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails