ரியாத்: அநாதைகளின் தாய் என்று போற்றப்பட்ட கொடைவள்ளல் சனா பின்லாதின் மறைவுக்கு சவூதிஅரேபிய மக்கள் சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த துயரத்தையும் இரங்கலையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
கட்டுமானத்துறையில் சவூதியில் பிரசித்திப் பெற்ற பின்லாதின் குடும்ப மகளாகப் பிறந்த சனா எளிமையான வாழ்வுக்கும் வள்ளல்தன்மைக்கும் பெயர் பெற்றவராகத் திகழ்ந்துவந்தார். கடந்த வெள்ளியன்று லண்டன் ஹாம்ப்ஷையரில் தனியார் விமானமொன்று தரையிறங்க முயன்று விபத்துக்குள்ளானதில் சனாவும், அவருடைய கணவர் ஸுஹைர் ஹாஷிம், தாயார் ரஜா ஹாஷிம், விமானத்தின் வளவர் ஆகியோரும் இறப்பைத் தழுவினர்.
பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த போதும், எளிமையான அடுக்ககம் ஒன்றில் வசித்துவந்த சனா தனக்கென்று பணியாளர்களைக் கூட வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால், மக்காவில் அநாதைகளுக்கான ஆதரவு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். எவ்வித பகட்டோ ஆடம்பரமோ இன்றி எளிமையாக வாழ்ந்த சனாவுக்கு சொந்தக் குழந்தைகள் இல்லை எனினும் தான் பேணிப் பராமரித்து, கல்வி புகட்டிய அநாதைக் குழந்தைகளால் சோசோ அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். தனது செல்வத்தை மட்டுமின்றி நேரத்தையும் அநாதைகளின் முன்னேற்றத்திற்காக செலவிட்டு வந்த சனாவின் மறைவு அநாதைக் குழந்தைகளுக்குப் பேரிழப்பு என்று சவூதி அரேபிய சமூக பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்,
சவூதி பொதுமக்களும் சனா பின்லாதின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். “குடும்பத்து உறுப்பினர் ஒருவரை இழந்த துயரம் கொள்வதாக” அதில் பலரும் தெரிவித்துள்ளனர். “அநாதைகளின் தாய்” என்று பலரும் சனாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஒசாமா பின்லாதினுடைய தந்தைவழிச் சகோதரியே சனா பின்லாதின் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://inneram.com/
No comments:
Post a Comment