1970-களின் இறுதியில் முதன் முறையாக மலேசியா சென்ற பொழுது அரசு அலுவலகங்களில் ஆலிம்கள் (இஸ்லாம் மார்க்க அறிஞர்கள்) கவனிக்கத்தக்க அளவில் பணிபுரிவது கண்டு வியந்தேன், நம்மூரில் அது நடவாதது அல்லவா?-அதனால்.
சகோதரர்கள் எளிதாக இவ்வாறு புரிய வைத்தனர்: வேலூர் பாக்கியாத்தில் படித்துவிட்டு தமிழ்நாடு அரசு தலைமையகத்தில் பணியாற்றுவது போல இதைக் கருதிக் கொள்ளுங்கள். இங்கு அதற்கேற்ற பாடத்திட்டம், அரசு ஆணை முதலியன உண்டு. அரசுப் பணிகளில் மட்டுமல்ல வாழ்வின் எல்லாத்துறைகளிலும் அவர்களுடைய பங்களிப்பும் அதற்குரிய அந்தஸ்துகளும் இங்கு உண்டு.
கேட்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மலேசிய மாநிலமொன்றில் ஓர் ஆலிம் மக்கள் செல்வாக்கு மிக்க முதலமைச்சராக இருந்து எளிமையாகவும் எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து மறைந்தார் என்பது நாமெல்லாம் ஆறு மாதங்களுக்கு முன்னர்(பிப்ரவரி,2015- இல்) அறிந்த செய்தி. அதாவது நல்ல அரசியல் வாதியாக ஓர் ஆலிம் விளங்க முடியும் என்று நிலைநாட்டிக் காட்டிய அவருடைய பெயர்: மவ்லானா தோக் குரு நிக் அஜீஸ் நிக் மாட்.
மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தின் அசைக்க முடியாத, முதல்வராக 23 ஆண்டுகள் அவர் இருந்தார். போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் ஆட்சி செய்தார். மூன்று முறை அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தேவ்பந்த் மதரசாவில்தான் அவர் ஆலிம் ஆனார். பிறகு அல் அஸ்ஹர் பல்கலை கழகத்தில் மேல் படிப்பு படித்தார். தாய் நாடு திரும்பிய பின்னர் அரசியலில் ஈடுபட்டு வெற்றிகரமான முதல்வராக விளங்கி மறைந்தார்!
அவர் இல்லத்திற்கு கதவுகள் கிடையாது. யாரும் சென்று எளிதில் சந்திக்கும் முதல்வராக அவர் இருந்தார்.
வெளியூர், வெளி நாடுகளில் இருந்து அவரை சந்திக்க வருபவர்களை இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவர் கையாலேயே தேநீர் பரிமாறுவார். நபிமார்களின் வாரிசு, கலீஃபாக்களுக்கும் வாரிசாக விளங்கினார்....
நம் ஊர் ஆலிம்கள் இந்தத் தொடரைக் கவனத்தில் கொள்வார்களாக.
No comments:
Post a Comment