இஸ்லாம் எங்கள்
இதயம் கனிந்த வாழ்வுரிமை --எம்
இந்தியம் எமது
தோற்றம் நிகழ்ந்த பிறப்புரிமை! ( இஸ்லாம்...)
சுவனமே நாங்கள்
சுற்றித் திரிந்து தங்குமிடம்--சுகச்
சோபனம் நிறைந்து
இறையருள் கனிந்து பொங்குமிடம்! ( இஸ்லாம்...)
கடமைகள் ஐந்தும்
கருணை யாளன் கட்டளைகள்--நபி
நடைமுறை அவற்றில்
சுடரும் ராஜ முத்திரைகள்! (இஸ்லாம்...)
வாழும் தேசம்
வல்லவன் வழங்கும் அருள்கொடைகள்--அதை
வாழ வைப்பதே
வசிக்கும் மக்கள் நடைமுறைகள்! ( இஸ்லாம்...)
அடிமைச் சங்கிலி
நொறுங்கிச் சிதற உடைத்தெறிவோம்--நாம்
ஆதமின் மக்கள்
அனைவரும் சமமென தலைநிமிர்வோம்! ( இஸ்லாம்..)
அடுத்தவர் நெறியை
அவரது வாழ்வை மதித்திடுவோம்--இதை
தடுப்பவர் எவரே
ஆயினும் அவரை எதிர்த்திடுவோம்! ( இஸ்லாம்...)
மறைவிலும் குற்றம்
புரியும் எண்ணம் எமக்கில்லை--பிறர்
குறைகள் பேசி
குதர்க்கம் செய்யும் வழக்கமில்லை! ( இஸ்லாம்...)
உரிமை என்பதை
என்றும் நாங்கள் விடுவதில்லை--பிறர்
உடைமை கவரும்
கேவலம் எம்மைத் தொடுவதில்லை! ( இஸ்லாம்...)
கல்வியில் ஆண் பெண்
என்னும் இரண்டு பிரிவில்லை--மனக்
கள்ளம் புகுவது
மட்டும் இங்கே சரியில்லை! ( இஸ்லாம்...)
ஆண்டவன் கிருபையில்
அவனது கருணையில் தடையில்லை--அவன்
அருளினை இழந்தே
வாழவும் இங்கே இடமில்லை! (இஸ்லாம்...)
கவிதை ஆக்கம் Hilal Musthafa அவர்கள்
No comments:
Post a Comment