பதிவை வாசிக்கும் முன்னர் சிறு முன்னோட்டம்...
60'களில் பிறந்த நடுத்தர குடும்ப இஸ்லாமியப் பெண் , இராமநாதபுரத்தின் கடற்கரை கிராமம் தான் பிறந்து வளர்ந்த ஊர் , இவர் தான் மூத்த மகள், இவருக்கு பின் 6 பிள்ளைகள் . இந்த அறிமுகத்துடன் அந்த காலக்கட்டத்தில் பயணிக்கும் போது நம் கற்பனைக்கு வந்த கதாபாத்திரம் இப்படியிருந்திருக்க கூடும்..
தலைமை ஆசிரியரான தந்தையின் கடுங்கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டு பள்ளிக்கூட வாசனையை நுகராதவர்?
கணவன் கொண்டு வரும் போதாத மாத சம்பளத்தில் வீட்டை நிர்வகிக்கும் அம்மாவால் சொல்லப்படும் வீட்டு வேலைகளால் கசக்கி பிழியப்பட்டு எந்நேரமும் களைப்புடனும், எண்ணெய் வழியும் முகத்துடனும் நான்கு சுவருக்குள் முடங்கி கிடப்பவர் ?
பள்ளிக்குச் செல்லும் தன் சகோதரர்களுக்கு எடுபிடி வேலை செய்துக்கொண்டு எதிர்காலம் குறித்த கனவு காண கூட சுதந்திரமல்லாதவர்?
"சனியன் தொலஞ்சா போதும்" என பருவமடைந்தவுடனே திருமணம் செய்துவைக்கப்பட்டு கணவன் வீட்டில், மாமியாரின் அதிகாரத்தில் அடங்கியிருப்பவர் ?
பக்குவம் பெறாத வயதிலேயே கணவனின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருப்பவர் ??
போதும் போதும்... நம் கற்பனைகள் நீளலாம். ஆனால் அவை அனைத்தையும் தகர்த்தெறிந்தவர் தான், நாம் பார்க்கவிருக்கும் சாதனைப் பெண்மணி.
