Saturday, September 28, 2013

ஆட்டுக்குட்டி ...........


நாம் மற்றவங்களுக்கு உதவி செய்யும் போது செய்த உதவியயை அந்த நேரத்தோடு நாம் மறந்து விடுவோம்

ஆனால் நம்மிடம் இருந்து உதவி பெற்றவர்கள் நாம் செய்த உதவியை எப்போதும் அவர்களின் மனதில் வச்சுக்கிட்டு தான் இருக்காங்க

நோன்பு பெருநாள் அன்று கத்தார் நாட்டில் இருந்து ஒரு சகோதரர் எனக்கு போன் செய்து என் பெயரை கூறி பெருநாள் வாழ்த்து கூறினார் அதோடு உடல் நலமும் விசாரிச்சார்

ஆனால் இவர் யார் என்று கொஞ்ச நேரமா தெரியாமதான் அவர் கிட்ட பேசிட்டு இருந்தேன். பிறகு சிறிய கூச்சத்தோட.......... மன்னிக்கணும் நீங்க யாருன்னு எனக்கு சரியா பிடி படல்ல, உங்க பெயரும் என்று இழுத்தேன் ......

அவர் நிதானமாக தன் பெயரையும், நாங்கள் இருவரும் சந்தித்த இடத்தையும் விளக்கினார். என் மனசுக்கு சந்தோசமா இருந்தது

இவர் பெயர் முகம்மது அலி, தமிழ் நாட்டை சார்ந்தவர். 2001 இல் நான் வேலை செய்து கொண்டு இருந்த இடத்தில் வைத்து பார்த்தது

நாடோடியாக திரியும் சவுதியிடம் பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் வேலையை செய்து கொண்டு இருந்தார். சில மாதங்கள் நான் இருக்கும் ஊரின் அருகில் உள்ள பாலைவனத்தில் ஆடுகளை மேய்துக்கொண்டிருந்தார்.

உணவுக்காகவோ அல்லது வேறு எந்த ஒரு தேவை என்றாலும் நான் இருக்கும் இடத்தின் அருகில் தான் வந்தாகவேண்டும். சில நேரம் சவுதியுடன் வருவார் இல்லை என்றால் அவர் மட்டும் தனியாக கழுதையின் மேல் ஏறி வருவார்.

அவர் இருக்கும் இடத்தில் இருந்து நான் இருக்கும் இடத்திற்கு கழுதையில் வருவதாக இருந்தால் இரண்டரை மணி நேரம் ஆகும்.

மாதத்தில் ஒருமுறை வியாழன் இரவு என்னுடைய அறையில் தங்கிவிட்டு வெள்ளிக்கிழமை ஜும்மாஹ் முடிந்து செல்வது வழக்கம்
அப்போது அவர் வந்த வாகனமான கழுதையை ஊர் எல்கையில் உள்ள மஜ்ராவில் கட்டி வைத்து அதற்க்கு தேவையான உணவும் நீரும் வைத்து விட்டு வருவார்

அவர் மனைவியிடம் இருந்து வரும் கடிதத்தை அவருக்கு படித்து காட்டுவதும் நான்தான், அதற்க்கு பதிலாக அவர் மனதில் உள்ளதை வார்த்தையாக பெற்று அதை எழுத்தின் முலமாக காகிதத்தில் பதிவு செய்து அவருடைய மனைவிக்கு அனுப்பி விடுவதும் நானே தான்

தன் மகளின் பெயரை புதிதாக பிறந்த ஆட்டு குட்டிக்கு வைத்து அதை செல்லமாக கொஞ்சி விளையாடுவதை சந்தோசமாக கூறிக்கொள்வார்

பாலைவனத்தில் இருக்கும் இந்த ஆட்டு குட்டிக்கு கிடைக்கும் இந்த பாசமும், அன்பும் ஊரில் தாயுடன் இருக்கும் அந்த குழந்தைக்கு கிடைக்க வில்லையே என்ற வருத்தமும், ஏக்கமும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்

இது போன்று தான் கடல் கடந்து வாழும் அதிகமானவர்களின் பாசமும், அன்பும், அரேபியா என்ற பணம் காய்க்கும் பாலைவனத்தில் கரைந்தே போகின்றது.

நன்றி
தகவல் தந்தவர் Abu Haashima Vaver
Abu Shadin

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails