நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். 'அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்' என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்னர் நான் அமைதியாக இருப்பது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒரே இரத்தத்தில் உண்டான பந்தம் இது.
நான் 'அத்மகாம்' பாலத்தை நெருங்கினேன். எனது சகோதரனின் வீடு நேரெதிர்ப் புறத்தில் அமைந்திருந்தது. அதனை நெருங்க எனக்கு ஐந்து நிமிடங்கள் மாத்திரமே எடுக்கும். திருடனைப் போல வலதுக்கும் இடதுக்கும் எனது பார்வையைச் செலுத்திய நான், என்னையே தைரியப்படுத்திக் கொண்டு தேசத்தின் எல்லையைக் கடந்து செல்ல முயன்றேன். எனினும், சில அடிச்சுவடுகளைப் பதித்து முன்னேறிச் செல்கையில் பலத்த சப்தத்தோடு கூக்குரலிடும் ஓசையைக் கேட்டேன்.
'நில்!'
நான் செய்வதறியாது அவ்விடத்திலேயே சிலையாக நின்றேன். முன்னே பார்த்த எனக்கு, துப்பாக்கியை நீட்டியபடி என்னை நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் தென்பட்டனர்.
"இந்தியனொருவன்" என எனது முக லட்சணத்தைப் பார்த்த ஒரு இராணுவ வீரன் கத்தினான்.
"கைது செய் அவனை" என அடுத்தவன் கத்தினான்.
"இல்லை...இல்லை... ஐயா நான் இந்தியனில்லை. அதே போல பாகிஸ்தானியனும் இல்லை. நானொரு காஷ்மீர்வாசி. அதோ அங்கே கேரனிலிருக்கும் சிறிய வீடொன்று தென்படுகிறது அல்லவா? அதுதான் எனது வீடு. ஆற்றின் மறுகரையிலிருக்கும் அந்தச் சிறிய வீடும் தென்படுகிறது அல்லவா? அங்கேதான் எனது சகோதரன் வசிக்கிறார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அவருக்கென்று கூற அங்கு யாரும் இல்லை. அவரது உதவிக்கு யாராவது வரும்படி தகவலொன்று கிடைத்தது. ஐயா, தயவுசெய்து எனக்கு ஒரு அரை மணித்தியாலம் கொடுங்கள். அவருக்கு எப்படியிருக்கிறதெனப் பார்த்து, முடிந்தால் மருந்துகளும் வாங்கிக் கொடுத்து..சிலவேளை அது தண்ணீர் மாத்திரமாகவும் இருக்கலாம்...அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன்."
எனது கழுத்தில் துப்பாக்கிப் பிடியால் தாக்கப்பட்டேன். எனது இரு பாதங்களுக்குக் கீழே பூமி அதிர்வதைப் போல உணர்ந்தேன். அவர்கள் என்னை அவர்களது பங்கருக்கு இழுத்துச் சென்றனர்.
"இந்தியனொருவன் - எதிரி உளவாளியொருவன்" என இன்னுமொரு இராணுவ வீரன் என்னைப் பார்த்துக் கூறினான். அதனைத் தொடர்ந்து அவர்கள் சித்திரவதைகள் செய்ய ஆரம்பித்தனர். நான் பாகிஸ்தானுக்கு எதிராக வேவு பார்க்க வந்த இந்திய உளவாளியொருவனென வாக்குமூலமளிக்கும்படி அவர்கள் என்னை மிரட்டினர்.
நான் எதனை வாக்குமூலமளிப்பது? நான் எனது சகோதரனின் எதிரியெனக் கூற இயலுமா?
எனது சகோதரனின் வீட்டிற்கு அண்மையில் அமைந்திருந்த அவர்களது தலைமையகத்துக்கு அவர்கள் என்னைக் கொண்டு சென்றனர். திரும்பவும் நான் கெஞ்சினேன்.
"தயவு செய்யுங்கள் ஐயா. எனது சகோதரன் அடுத்த வீட்டில்தான் இருக்கிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஐயா, எனக்கு கைவிலங்கிட்டாலும் பரவாயில்லை. அதனோடு என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள். அவருக்கு எப்படியிருக்கிறதென விசாரிக்கக் கிடைத்தாலும் போதும்"
எனினும் அவர்கள் செவிமடுக்கவில்லை. எனது நகங்களைப் பிடுங்கிய அவர்கள், அக் காயங்களின் மேல் உப்பிட்டனர். நான் மயக்கமுற்றேன். எனது சகோதரன் மிகுந்த சிரமத்தோடு சுவாசித்தபடி, தண்ணீர் கேட்டு முனகும் ஓசை எனக்குக் கேட்டது. எனது சகோதரனுக்கு அண்மையில் நான் கொண்டு வரப்பட்டுள்ளேன் என்பதனை நான் உணர்ந்தேன். எனினும் எனக்கு விலங்கிட்டு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தேன். சுற்றிவர எங்கேயுமே தண்ணீர் தென்படவில்லை. கை விலங்கின் கூரிய முனையொன்றில் எனது இடது கையை வெட்டிக் கொண்டேன். கையின் வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குருதி பெருக்கெடுத்துப் பாய்ந்தது. வலது உள்ளங்கையைக் குவித்து அக் குருதியைச் சேமித்து எனது சகோதரனின் தாகத்தைத் தணிக்க முயன்றேன். எனினும் எனது கைகள் விலங்கிடப்பட்டிருந்த காரணத்தால் எனது சகோதரனின் உதடுகளை என்னால் நெருங்குவது சிரமமாக இருந்தது. இறுதியில் தண்ணீர் கேட்டு இறுதி முனகலொன்றை வெளிப்படுத்திய அவர் அமைதியடைந்தார். நான் அழுது அரற்றினேன்.
"எல்லாம் முடிந்து விட்டது. ஆண்டவனின் இராசதானி உடைந்து வீழ்ந்து விட்டது. மனித எண்ணங்கள் யாவும் அழிந்து விட்டன. சகோதரனொருவன், தனது சகோதரனுக்கே எதிரியாகி விட்டான்."
திடுக்கிட்டு எழுந்த நான் இராணுவ வீரர்களின் விழிகளும் கலங்கியிருப்பதைக் கண்டேன். யன்னலினூடே வெளியே பார்க்கும்படி அவர்கள் எனக்குக் கூறினர். நான் அதனைக் கண்ணுற்றேன். எனது சகோதரனின் உடலானது ஒரு சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
"என்னைப் போக விடுங்கள். எனது சகோதரனின் முகத்தைப் பார்க்க விடுங்கள். எனது இறுதி மரியாதையைச் செலுத்த விடுங்கள். உங்களுக்குத் தெரியுமா? அவர் எனது சகோதரன்."
காலஞ்சென்றவர் எனது சகோதரன் என்பதை தாம் நன்கறிவோம் என அவர்கள் கூறினர். எனினும் அவரது இறுதிக் கிரியைகளில் பங்குகொள்ள எனக்கு இடமளிக்க முடியாதெனவும் அவர்கள் அறியத் தந்தனர்.
"எம்மால் எதுவும் செய்ய முடியாது" என அவர்கள் கூறினர்.
"உங்கள் அதிகாரிகளிடமிருந்து அனுமதி வாங்கிக் கொடுங்கள்" எனத் தாழ்மையாகக் கேட்டேன்.
"அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது" என அவர்கள் பதிலளித்தனர்.
"அவ்வாறெனில் அதிகாரிகளின் தலைவர்களிடமிருந்து எனக்கு அனுமதி வாங்கிக் கொடுங்கள்."
"அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது" என்பதே எனக்குக் கிடைத்த பதிலாக இருந்தது.
"அதுவும் அவ்வாறெனில் எனக்கு உதவி செய்யக் கூடியவர் யார்? அதிகாரம் யாரிடம் இருக்கிறது?"
"அது எமக்குக் கூடத் தெரியாது."
- ஏ.ஜி. அத்தார் (காஷ்மீர்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
----------------------------------------------------------------
எழுத்தாளர் பற்றிய குறிப்பு :
எழுத்தாளர் அப்துல் கனி அத்தார், ஜம்மு காஷ்மீர் கல்வித் திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் ஒரு ஆசிரியர் ஆவார். இவர் கவிதைகள், சிறுகதைகள், நாடகப் பிரதிகள் ஆகிவற்றை எழுதியிருக்கிறார். சிறுகதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
source : http://rishantranslations.blogspot.in
No comments:
Post a Comment