Monday, December 27, 2010

ஊழல் விஞ்ஞானி கருணாநிதி, ஊழல் மகாராணி ஜெயலலிதா (வணங்காமுடி பதில்கள்)
வணங்காமுடியாரே, யோகா பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது மதம் சம்மந்தப்பட்டதா? - சேக் முகம்மது, மாதவலாயம்
யோகா தியானம் போன்றவை இந்திய மரபு சார்ந்தவை;மிகப்பழமையானவை. தியானம் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியைத் தரும் பயிற்சி; யோகா மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் பயிற்சி. சித்தர்களும் யோகிகளும் இதைத்தான் செய்தனர். சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு நிலைகளையும் அவர்கள் வகுத்துக் கொண்டனர். விடை மற்றொன்று விரித்தலாகி விடும் என்பதால் அவை பற்றி இங்கே விளக்கப் போவதில்லை. யோகம் அல்லது யோகாவைப் பயின்ற சித்தர்களும் யோகிகளும் சைவ மரபைப் பின்பற்றியவர்கள் ஆதலால் பிற சமயத்தினர் அதில் அக்கறை செலுத்தவோ பயிற்சி பெறவோ இல்லை. அமெரிக்கா போன்ற மேல்நாடுகளுக்குச் சென்ற மகேஷ் யோகி, ரஜினீஷ் போன்றோர் அங்கே யோகாவைப் பிரபலப்படுத்தினர். எதையும் மேனாட்டான் சொன்ன பிறகே சொரணை பெறும் நாம், யோகா பயில ஆர்வப்பட்டபின் இங்கும் யோகா வகுப்புகள் தொடங்கின. ஆனால் சந்தர்ப்ப வசத்தால் யோகா கற்றுத்தரும் ஆசான்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருப்பதாலும் யோகாவில் மனதை ஒருமுகப்படுத்தச் சொல்லித்தரும் சில சொற்களும் சமஸ்கிருதத்தில் இருப்பதாலும் யோகாவை மதம் சார்ந்ததாக்கி விட்டன.

கவர்ச்சிப்புயல் சில்பா ஷெட்டி யோகா கற்றுத்தருகிறாராம்; நீங்கள் அவரிடம் கற்றுக்கொள்ளுங்களேன்:-))

என் கொழுப்பை குறைக்க கடைப் பிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து சற்று சொல்லுங்களேன்? - செல்வி
"என் கொழுப்பைக் குறைக்க" என்று மொட்டையாக வினா உள்ளதால் சற்றுக் குழம்பிவிட்டேன். கொலஸ்ட்ரால் எனப்படும் இரத்தக்கொழுப்பு பற்றி வினவியுள்ளீர்கள் என நினைக்கிறேன். இது போன்ற வினாக்களுக்கு என்னைப்போன்ற ஊடகத்தாரிடம் அறிவுரை கோருவதை விட உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நியூட்ரீஸியனிடம் கேட்பதே பயன் தரும். நாங்கள் தகவல் மட்டுமே தர முடியும்.

ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சி, ஈரல், மூளை, குடல், கிட்னி போன்றவற்றிலும் நண்டு, இரால் போன்ற மீன் வகையிலும்கொழுப்பு அதிகம். இவ்வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரித்தவை, முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பு நீக்கப்படாத பால் பொருட்கள் போன்றவற்றையும் தவிர்த்தல் நன்று.

நார்ச்சத்து அதிகம் உள்ளவற்றை உண்ணுங்கள்.காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்ந்த காலத்தில் இவை போன்ற பிரச்சனைகள் இல்லை. கைக்குத்தல் அரிசி உணவு, கிணற்றில் நீர் இறைத்தோ ஆற்றிலும் குளத்திலும் நீச்சல் அடித்தோ குளியல், அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் உரலிலுமாகத் தயாரான உணவுப்பொருட்கள், இரசாயண உரமும் பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லாமல் விளைவித்த காய்கறிகள்,வீட்டில் வளார்த்த ஆடு கோழி போன்றவை, உடல் உழைப்பும் உரிய ஓய்வும் என டென்ஷனோ ஸ்ட்ரெஸ்ஸோ இல்லாமல் வாழ்ந்த காலத்தில் இரத்தக்கொதிப்பு, நீரிழிவு , கொலஸ்ட்ரால் போன்றவை மிகக் குறைவானோர்க்கே இருந்தன.

எல்லோருக்கும் சொல்வது,நிறையத் தண்ணீர் குடியுங்கள்; நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்; உங்கள் உயரத்துக்கும் வயதுக்கும் ஏற்பக் கணக்கிட்டு உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். புகை பிடிக்காதீர்கள்,பீட்ஸா பர்கர் ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் உண்ணாதீர்கள்.


என்.ஜி.ஓ. ஒன்று ஆரம்பித்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்கிறானே என் நண்பன் ஒருவன். உண்மையா வ. மு. அவர்களே? -ஜவஹர், நெய்வேலி

நான் கலூரியில் படித்தகாலத்தில், எங்கள் கல்லூரியின் பின்வாசல் இருக்கும் சாலையில் என் ஜி ஓ சங்கக் கட்டிடம் என்ற பெரிய பெயர்ப் பலகையுடன் ஒரு கட்டிடம் இருந்தது. என் ஜி ஓ என்றால் என்ன என வினவியபோது நான் கெஸடட் ஆஃபீஸர் எனச் சொன்னார்கள். இப்போது அந்த வழக்கம் இல்லை. இப்போது என் ஜி ஓ என்றால் அரசுசாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எனச் சிறு பிள்ளைகளும் அறியும் வண்ணம் ஆங்காங்கே பரவலாக முளைத்து விட்டன. இந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசும் வங்கிகளும் கடனுதவி செய்கினறன.சில என் ஜி ஓக்களுக்கு மேலை நாடுகளில் இருந்தும் பெரும் பணம் வருகிறது. இதனால் பணப்புழக்கம் அதிகமாவதும் அவற்றில் சில முறைகேடுகள் நடப்பதும் சகஜமாகி விட்டன. இதைத் தெரிந்ததால் உங்கள் நண்பருக்கும் ஆசை வந்திருக்கலாம்.

உண்மையிலேயே மக்கள் தொண்டாற்றும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. பிரதமராக இருந்தபோது வாஜ்பாய் காலில் வீழ்ந்து வணங்கினாரே அந்தச் சின்னப்பிள்ளை என்ற தமிழ்நாட்டு மூதாட்டியின் மகளிர் சுய உதவிக்குழுவைச் சான்றாகக் கொள்ளலாம்.


பூமியிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்து கொண்டே போகிறதே அது ஏன், எப்படி அய்யா?- அப்பாஸ், கடலூர்பூமியில் இருந்து உயரே செல்வதற்கு ஆகாய விமானம், ராக்கெட் போன்றவை தேவை. அவற்றில் செல்லும்போது நீங்கள் வெளிக் குளிரை உணர முடியாது. தரை / பூமி மட்டத்திலிருந்து உயரமான மலைக்குச் செல்லும்போது நீங்கள் குளிரை உணர்வீர்கள். ஏனெனில் கடல் மட்டத்தில் காற்றின் அடர்த்தியும் ஈரப்பதமும் கூடுதலாக இருக்கும். கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தியும் ஈரப் பதமும் குறையும். அதனாலும் மலைமேல் அடர்த்தியாக இருக்கும் காடுகளாலும் நீங்கள் குளிரை உணரலாம்.

கருணாநிதி - மன்மோகன் சிங் இருவரின் பலம் மற்றும் பலவீனம் என்ன? - சுந்தர், நாகர்கோவில்
கருணாநிதியின் கட்டுப்பாட்டில் ஒரு குடும்பமாகக் கட்சி இருப்பது அவரது பலம். இன்று வரை அவர் தலைவராக இருப்பது அதனால்தான்.

கருணாநிதி தம் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரது பலவீனம். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போமா என்ற தவிப்பு அதனால்தான்.

மன்மோகன்சிங் அரசியல்வாதியாக இல்லாமல் இருந்து பிரதமர் ஆனது பலம். கம்யூனிஸ்ட்களின் மிரட்டலைப் புறந்தள்ளியது அதனால்தான்.

சோனியாவையே சார்ந்திருப்பது பலவீனம். ஸ்பெக்ட்ரம் முறைகேடு போன்றவற்றை முதலிலேயே உரத்த குரலில் கண்டிக்க முடியாமல் போனது அதனால்தான்.

ஒருவர் இந்தக் கட்சி, அந்த கட்சி என்று மாறும்பொழுது அதனை எப்படி அந்த கட்சி எற்றுகொள்கின்றது. பாசமா? பழி வாங்கும் எண்ணமா ? இதுபோன்று மற்ற நாடுகளிலும் நடைபெறுவது உண்டா? - முஹம்மது அலி ஜின்னா
அந்தக்கட்சி இந்தக்கட்சி எனத் தம் விருப்பம்போல் மாறி வருபவர்களை எல்லாம் உடனடியாகச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

மாறி வருபவர் இருந்த கட்சியில் அவர் பெற்றிருந்த இடம்,அவரது சொந்த ஊரில் அல்லது சொந்தத் தொகுதியில் அவருக்கிருக்கும் செல்வாக்கு, அவரைத் தங்கள் கட்சியில் சேர்ப்பதால் எதிர்க்கட்சியில் ஏற்படும் சரிவு, தங்கள் கட்சியில் ஏற்படும் வளர்ச்சி, உட்கட்சிப்பூசல் வருமா வராதா, தேர்தல் நேரத்தில் அவரால் நன்மையுண்டா எனப்பல அம்சங்களையும் அலசித்தான் பிறகட்சியிலிருந்து வருபவர்களைச் சேர்ப்பர். அல்லது காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டியதுதான்.

பாசம் ஏதும் கிடையாது; ஆனால் பழிவாங்கும் எண்ணம் உண்டு. அதற்காகவே பிற கட்சியின் செல்வாக்கான தலைவர்களைத் தம் கட்சிக்கு இழுக்கும் வேலை நடைபெறுகிறது.சான்றுக்கு அ இ அ தி மு கவில் இருந்து அனிதாராதாகிருஷ்ணன், முத்துச்சாமி போன்றோரையும் ம தி மு கவில் இருந்து கண்ணப்பன் போன்றோரையும் தி மு க இழுத்ததைக் கூறலாம். இப்படி, தி மு கவில் இருந்து பலரையும் இழுக்க அ இ அ தி மு கவும் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

எம் ஜி ஆர் தி மு கவில் இருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்தபோது வேலப்பன் என்ற ச ம உ காலையில் அ தி மு க மாலையில் தி மு க என அங்குமிங்கும் ஊசலாடிக்கொண்டிருந்த வேடிக்கையும் நடைபெற்றது. அச்சமயத்தில் தி மு க ஆதரவு ஆதித்தனார் குழுமப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வேடிக்கையாக இருக்கும்.

தி மு க வில் இருந்து விலகினால் "கட்சித்தாவல்"

தி மு கவிற்கு வந்தால் "தாய்க்கழகம் திரும்பினார்"

வெளிநாடுகளில் உண்டா என வினவியுள்ளீர்கள். அங்கெல்லாம் நம் நாட்டைப்போல் நூற்றுக்கணக்கில் பலப்பல கட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் அற்புதமாக இருந்த தமிழ் இப்போ ஏன் நைனா இப்படிக்கீது?? மொழி மாற்றத்திற்கான காரணம் என்ன? - சீமான்நேசன், அபுதாபி
ஒரு மொழியின் வாழ்வும் சாவும் அதைப் பேசுவோரின் நாவில்தான் இருக்கிறது. இன்று நாம் அன்றாடம் உரையாடும் தமிழில், அரபு, பார்ஸி, உருது, கன்னடம், தெலுங்கு மற்றும் சம்ஸ்க்ருத மொழிச்சொற்களைக் கலந்தே உரையாடுகிறோம். அதை விட மோசமாகத் தமிழர்களில் பெரும்பான்மையோர் "தமிங்கலம்" பேசுவோரே. மெல்லத்தமிழ் இனி செத்துவிடக் கூடாது என்ற கவலையிலேயே பிறமொழிக் கலப்பின்றித் தமிழைப் பேசவும் எழுதவும் வற்புறுத்திக்கொண்டே இருக்கிறோம். எனினும் பொதுமக்களிடம் கலந்துரையாடும் என்னைப்போலப் பலரும் அவர்களுக்கு விளங்கிட வேண்டும் என்ற மெய்யான அக்கறையால் பிறமொழிக் கலப்பில் வேண்டாவெறுப்பாக எழுத நேரிடுகிறது.

உருது, இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, போன்ற மொழிகள் பேசுவோர் சென்னையில் சங்கமித்துத் தமிழ் பேசத் தொடங்கியதால் அவரவரின் வட்டார மொழிகளும் கொச்சை மொழிகளும் கலந்து "ஸென்னைஸ்ஸெந்தமிள்" உருவானது.

சென்னையில் தூய நதியாக ஓடிய கூவம் இன்று துர்நாற்றம் வீசும் காரணம் என்ன என்பதைச் சிந்தித்தால் உங்களுக்கே விடை விளங்கும்.

திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர் சூட்டினால் வரிவிலக்கு அளிக்கப்படுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? - தீன்
வீண்வேலை. இதனாலெல்லாம் தமிழ் வளார்ந்து விடாது. படத்தின் பெயர் மட்டும் தமிழில் இருக்கும்; உள்ளே வசனமும் பாடல்களும் பன்மொழிக் கலப்பில் இருக்கும். இதை நாம் அறிந்தே இருக்கிறோம். பின் ஏன் இந்தப் பம்மாத்து?

சமூக அக்கறையுடன் கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களுக்கு வரிவிலக்கும் உதவித்தொகையும் அளிப்பதே வரவேற்கத் தக்கது.

இது தொடர்பாக முன்னர் அளித்த விடையையும் காண்க!

ஊழல் விஞ்ஞானி கருணாநிதி, ஊழல் மகாராணி ஜெயலலிதா இவர்கள் ஆள்வதை தவிர தமிழகத்துக்கு வேறு ஏதேனும் வழி இல்லை? - விக்ரம், நெல்லிக்குப்பம்
“இவர்கள் ஆள்வதைத் தவிரத் தமிழகத்துக்கு வேறு வழி இல்லை” என்று உங்கள் கவலையைத் தெரிவிக்கிறீர்களா அல்லது, “வேறு ஏதேனும் வழி இல்லையா?” என வினாத் தொடுத்துள்ளீர்களா?

வினாவாகவே எடுத்துக் கொள்கிறேன்.

இருவரும் தத்தம் ஆட்சியில் செய்த மக்கள் நலப் பணிகளும் சாதனைகளும் இருவரும் அல்லது அவர்களின் கட்சியினரும் செய்த ஊழல்களும் வெட்ட வெளிச்சமானவை. அவை மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள்தாம் இருவரின் செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்த்து மதிப்பிட்டுத் தேர்தலில் நல்ல தீர்ர்ப்புக் கொடுக்க வேண்டியவர்கள்.

மக்களில் நன்கு படித்த மற்றும் உயர்மட்ட வர்க்கத்தினர் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதில்லை. இடைப்பட்ட நடுத்தர வ்ர்க்கமும் இதர தொழில் செய்வோரும் பிரச்சாரத்தின் வலிமையில் மயங்கியும் அடித்தட்டு மக்கள் இலவசங்கள் மற்றும் ஓட்டுக்குக் கிடைக்கும் பணம் ஆகியவற்றின் அடிப்படையிலும் முடிவு எடுக்கின்றனர். அரசு ஊழியர்கள் தத்தமது அரசியல் சார்பின் அடிப்படையில் அல்லது அவர்களின் அப்போதைய பிரச்சனைகளைத் தீர்த்த அல்லது தீர்ப்பதாக வாக்குறுதியளிக்கும் கட்சியினருக்கு வாக்களிக்கின்றனர்.

பா ஜ க தமிழ் நாட்டில் பெரிய கட்சி இல்லை. மற்ற தேசீயக் கட்சிகளான காங்கிரஸும் இரு கம்யூனிஸ்ட்களும் திராவிடக் கட்சிகளின் தயவில் காலத்தை ஓட்டிவிட்டன. தனியாக அணி சேர்ந்து களம் கண்டாலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவு அவர்களுக்குப் பலம் இல்லை.

இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில், வேறு வழி இல்லா நிலையில் குறைந்த தீமையைத் தேர்ந்தெடுப்பதே அறிவுடையோர் செய்யும் செயல்.

இப்போது வினாவை மீண்டும் ப்டிக்கவும்.

வணங்காமுடி அய்யா அவர்கள் (2011ல்) முதல்வரானால் போடும் முதல் உத்திரவு என்னவாக இருக்கும்? - கருணாகரன்
அரசியல்கட்சியில் சேராமல்/ அரசியல் கட்சியைச் சாராமல் இந்தியாவில் யாரும் முதல்வராக முடியும் என்ற நிலை வந்தால்..... வணங்காமுடியும் முதல்வராகும் வாய்ப்புக் கிடைக்குமானால்.... - அது 2011இல் நடக்கவே நடக்காது என்பது ஒரு புறமிருக்க - கற்பனைக்கு என்ன காசா பணமா எனத் துணிந்து கற்பனை செய்தால்..முதல் ஆணை, 'தம் கடமையைச் செய்யாமல் நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு தண்டச் சம்பளம் வாங்கியும் கடமையைச் செய்வதற்குக் கையூட்டுப் பெற்றும் கொழுக்கும் அரசு ஊழியர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்து வீட்டுக்கனுப்பும் ஆணை'யே!
(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2010122612721/vanagamudi-answers-26-12-2010

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails