Thursday, December 9, 2010

`நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' கருணாநிதிக்கு மேலும் ஒரு விருது!

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு "நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்" என்றொரு விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழங்க உள்ளது. சென்னை தாம்பரத்தில் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கருணாநிதிக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகைதீன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:

தாம்பரத்தில் வரும் 11ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நடைபெறுகிறது. எனது தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதிக்கு, `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு அவர் சிறப்புரையாற்றுகிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

`இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கு 2020' என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் இ.அஹமது வெளியிட்டு பேசுகிறார். கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர்அலி ஷிஹாப் தொடக்க உரையாற்றுகிறார். மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்று பேசுகிறார். எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., கலீலூர் ரஹ்மான் எம்.எல்.ஏ., அப்துல் பாசித் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசுகின்றனர்.

கேரள முன்னாள் அமைச்சர் குஞ்ஞாலிக் குட்டி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர், இ.டி.ஏ.குழும நிர்வாக இயக்குனர் செய்யது எம்.சலாஹுத்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். நிறைவில், கட்சியின் மாநில பொருளாளர் செய்யது அஹமது நன்றி கூறுகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறது. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சிறப்பான வெற்றி பெறுவதற்காக பாடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Source : http://www.inneram.com/2010120912375/one-more-title-for-karunanidhi-iuml

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails