Friday, December 31, 2010

அந்த தைரியம் யாருக்கு வரும்?-- by டாக்டர் ஹிமானா சையித்


 அந்த தைரியம் யாருக்கு வரும்?
தமிழக தென் மாவட்டமொன்றின் கடற்கரைக் கிராமம். நீண்ட நாட்களாக கட்டுமாணத்தில் கிடந்த பள்ளிவாசல் சுறுசுறுப்புடன் கட்டி முடிக்கப் பட்டு திறப்பு விழா காண்கிறது. அந்தப் பகுதி முஸ்லிம்களின் பெருவாரியான வருகையால் அந்தப் பள்ளி வளாகம் எங்கும் மனிதத் தலைகள்! உச்சி நேரம் நெருங்க நெருங்க வேன்களும் கார்களும் அந்தக் கிராமத்தை முற்றுகையிட ஆரம்பித்தன. ஆயிற்று... ஜும்ஆ நேரமும் நெருங்கிற்று! விழாக் குழுவின் தலைவர் செயலர் போன்ற நிர்வாகிகள் ஒரு வித பதற்றத்தில்!
காரணம், பள்ளிவாசலைத் திறந்து வைக்க வேண்டிய முக்கியப் பிரமுகர் இன்னும் வந்தபாடில்லை!
செல்போனெல்லாம் தமிழகக் கிராமங்களை எட்டியிருக்காத காலம்.
பள்ளிவாசலில் இருந்த போனில் பல முறை கால் போட்டுப் பேசிப்
பார்த்தாகிவிட்டது.பிரமுகர் ஊரிலிருந்து ஜீப்பில் புறப்பட்டு விட்டார் என்ற தகவல் மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது.
"இதோ இப்போது வந்துவிடுவார்!"; "இன்னும் அரை மணி நேரத்தில்
வந்துவிடுவார்!";
"இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்துவிடுவார்!" என்றெல்லாம் பல முறை அறிவித்தாயிற்று.
ஆனால்.... பிரமுகர் வந்தபாடில்லை!
ஊர் நிர்வாகிகளின் முகங்களில் ஏகமாய் இறுக்கம்!

ஒரு சில இளவட்டங்கள் தங்களின் அதிருப்திகளை முகங்களில்
பிரதிபலிக்க... சிலர் முணுமுணுக்க ..சில சலசலப்புகள்!
அழைப்பின் பேரில் வந்திருந்த பக்கத்து ஜமாஅத்துக்களைச் சேர்ந்த நிர்வாகிகள்
அக்கிராம நிர்வாகிகளை நெருக்கத் தொடங்கி விட்டனர்.
"நேரம் போய்க்கிட்டே இருக்குது பாருங்... ஜும்ஆவை நேரம்
கடத்தியெல்லாம் நடத்த முடியாது... அதுதான் பெரிய ஹளரத்
காலையிலேயே வந்து காத்துக் கெடக்காங்கள்ல?...அவங்கள வச்சே பள்ளியை திறந்துட்டு, ஜும்ஆ ஏற்பாட்டக் கவனிக்கலாம் ....
பிரமுகர் பின்னால வந்து விழாவுல கலந்துக்கிடட்டுமே? " என்ற
ஆலோசனைகள்!
ஊர் நிர்வாகிகள் சிலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அதில் உடன்பாடு
தெரிகிறது. ஆனால் மூத்தவர்கள் அதற்கு ஒப்ப மறுக்கிறார்கள்.
நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது;
சலசலப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது.
பள்ளியின் வெளிவராண்டாவில் ஒரு மூலையில் அமர்ந்திருந்த
பெரிய ஹளரத் - துஆவுக்காகவும் சிறப்பு ஜும்ஆவுக்காகவும்
திருநெல்வேலியிலிருந்து அழைக்கப் பட்டிருந்த ஹளரத் - மெல்ல எழுந்தார்கள்.
"அஸ்ஸலாமு அலைக்கும்"
என்று உரக்க ஒலித்தார்கள்!ம்பீரமான அந்த ஸலாம் முழக்கத்தில் கூட்டத்தின்
கவனம் முழுவதும் இப்போது அவர்களை நோக்கித் திரும்பியது !
சலசலப்பு மறைகிறது!
ஹளரத் அவர்களின் பயான்(சொற்பொழிவு) தொடங்கிவிடுகிறது!
"இஸ்லாத்தில் நேரந்தவறாமை எவ்வளவு முக்கியம் என்பதிலிருந்து
தொடங்கி, இறையச்சம் பற்றிய உரை கம்பீரமாக நகர்கிறது!
அவசரம் அவசரமாக மைக் சரி செய்யப்பட்டு அவர்கள் முன் வைக்கப்படுகிறது
.
இப்போது ஒட்டு மொத்தக் கூட்டமும் பள்ளியின் வெளிப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. பிரமுகர் இன்னும் வந்தபாடில்லை!
ஹளரத் பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்!
"இஸ்லாத்தில் தனிமனிதர்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்றாலும் - நியதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மனிதர்களுக்காக வணக்க வழிபாடுகளைத் தள்ளிப்போட யாருக்கும் அதிகாரமில்லை. சரியாக ஜும்ஆ நேரம் வந்ததும் நான் குத்பாவைத் தொடங்கிவிடுவேன்."
கூட்டம் முழுதும் அதை அப்படியே அங்கீகரிக்கிறது.
ஆயிற்று...!இன்னும் ஓரிரு நிமிடங்களே பாக்கி !
ஆர்ப்பாட்டமாக- பெரிய ஆர்ப்பரிப்பான பட்டாளத்தின்
'அல்லாஹ¤ அக்பர்' என்ற முழக்கத்துடன் நுழைகிறார் பிரமுகர்!
"இறையில்லக் கொடை வள்ளல் வாழ்!" என்ற கோஷங்களும்
இடையிடையே!

கூட்டத்தில் இப்பொழுது ஒழுங்கு குறைகிறது. உட்கார்ந்திருந்தவர்கள் சிலர் எழுந்து பிரமுகருடன் பரபரப்பாக நுழைகின்ற கூட்டத்துக்கு இடம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஊர் நிர்வாகிகள் பிரமுகரை இழுத்துச் சென்று பள்ளியின் தலைவாசல் கதவைத் திறக்க வைக்க, முண்டியடித்துக் கொண்டு கூட்டம் உள்பள்ளிக்குள் திமுதிமு வென்று ஓடுகிறது! எத்தனை பேர் உளுவுடன் என்பது
அல்லாஹ்வுக்கே வெளிச்சம் என்று ஒருசிலர் முணுமுணுக்கிறார்கள்!
சில ஆயிரம் ரூபாய்களை பள்ளிகள் கட்ட அன்பளிப்புச் செய்கின்ற அந்தப் பிரமுகர் வேண்டுமென்றே இப்படி விழாவுக்குத் தாமதமாக வருவது பழக்கம் என்றும் சிலர் பேசிக் கொள்கின்றனர். அந்த விழாவில் நானும் இருந்தேன்.
அந்த ஹளரத் கிப்லா அவர்களின் தாட்சண்யமற்ற தைரியத்தை நேரில் பார்த்து விளங்கிக் கொண்டேன்.
அதன் மூலமே அவர்களுடன் தொடர்பு... நெருக்கம்!
அவர்களின் 'ஜமாஅத்துல்உலமா' மாத இதழில் 20 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து "நாடும் நாமும்" என்ற தொடரை எழுதி வருகிறேன்.
மௌலானா மௌலவி அபுல் ஹஸன் ஷாதலி ஹளரத் அவர்களை
- அவர்களது தைரியத்தை மறக்க முடியுமா என்ன?

.டாக்டர் ஹிமானா சையத்
( 'ஊற்றுக்கண்' எனது 36- வது நூல்.
அதில் சில கட்டுரைகள் என் வாழ்வில் சந்தித்த ஆலிம்கள்)

1 comment:

அ.மு.அன்வர் சதாத் said...

எந்த ஒரு இஸ்லாமிய கோட்பாடுகளும் இல்லாமல் தானும், அதுபோல் தன சம்பாத்தியமும் என்று இருக்கக்கூடியவர்களிடம் இருந்து ஒரு சல்லிக்காசும் வாங்கமாட்டேன் என்று எப்போது சமூக தலைவர்கள் வருகிறார்களோ அப்போதுதான் இதுபோல் உள்ள வெக்கம்கெட்ட வள்ளல்கள் மாறுவார்கள்.
மாறுவார்களா தலைவர்கள்?

LinkWithin

Related Posts with Thumbnails