Thursday, December 2, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 9

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! முன் தொடர்களில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கத்தை பார்த்து விட்டு பிறகு தொடரலாம். கடன் கட்டுரை தொடங்கி 8 தொடர் வெளிவந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்! நாடுகள் வாங்கும் கடன், வங்கி கடனும் மனிதர்களின் ஆசைகளும், கடன் அட்டை (Credit Card), வளைகுடாவில் காலடி வைப்பதற்கு முன்னும் பின்னும் நாம் வாங்கும் கடன்கள், சகோதர சகோதரிகள் கடன் கொடுத்து வாங்கிய விபரங்கள், தாயகத்தில் உள்ள உறவினர்களிடமிருந்து வளைகுடா நாட்டில் உள்ளவர்களுக்கு வந்த பலதரப்பட்ட கடன் மனுக்கள், ஆடம்பர கடன், நகை கடன்கள், வங்கியின் நிலைபாடு, இரவல் நகை கடன், இஸ்லாம் உலகிற்கு வழங்கிய நன்மைகள், ஏலச்சீட்டு கடன், தினச்சீட்டு கடன், வாரச்சீட்டு கடன், குர்பானிக்காக வாங்கும் கடன், திருமண(வலீமா)கடன், திருமண கடன்கள், சகோதரிகள் வாங்கும் கடனால் நிம்மதியற்று தவிக்கும் கணவர்கள், கடன் எனும் நிழல் கூட தன் மீது விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி இவைகள் அனைத்தையும் பார்த்தோம்.

இனி தீர்வுகளில் அல்லாஹ்விற்காக அழகிய கடன் பிறருக்கு நாம் எவ்வாறு கொடுக்க வேண்டும். மேலும் கடனை வாங்குபவர்களின் நிலைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். இதுவரை கடன் வாங்காதே என்று கூறிவிட்டு இந்த தொடரில் கடன் வாங்குவதை ஊக்கப்படுத்துவதாக நினைத்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் இஸ்லாம் மார்க்கம் கடன் வாங்குவதைப் பற்றியும், கொடுப்பதைப் பற்றியும் விவரித்து அதற்கான வழிமுறைகளையும் நமக்கு தெளிவாக்குகிறது. அதை மார்க்க வழிமுறைகளில் பார்ப்போம்.

நாம் தொழுவது எதற்காக?

வல்ல அல்லாஹ் தொழுகையை கடமையாக்கி நம்மை ஜமாஅத்தோடு தொழச்சொல்கிறான். தனியாக ஒருவர் தொழுவதை விட பள்ளிக்கு சென்று ஜமாஅத்துடன் தொழுவது பற்றி நபி(ஸல்) அவர்கள்: தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவது இருபத்தி ஏழு மடங்கு சிறப்பானதாகும் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள்.(புகாரி,முஸ்லிம்).

ஜமாஅத்துடைய ஒருங்கிணைப்பின் மூலம் நாம் நன்மையை பெற்றுக்கொள்வதோடு, மனித நேயத்துடன் நடந்து கொள்வது எப்படி என்ற பயிற்சியும் கிடைக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. பள்ளிக்கு வரும் சகோதரர்களிடம் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலையை மறந்து சகோதர உணர்வுடன் பழகி அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பை இந்த ஜமாஅத் தொழுகை ஏற்படுத்திக் கொடுக்கிறது. (தற்பொழுது உள்ள தொழுகைகள் நாமும் முஸ்லிம்கள் என்று காட்டிக்கொள்ளவும். நமது கடமை தொழுவது மட்டுமே என்பதற்காகவும் இருப்பதுபோல் எண்ணத்தோன்றுகிறது).


நன்மை எதில் உள்ளது?

வல்ல அல்லாஹ் கூறுவதை பாருங்கள்:

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம் மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (அல்குர்ஆன்:2:177)

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத்தோழருக்கும், நாடோடிகளுக்கும். உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 4:36)

இந்த இரண்டு வசனங்களும் நன்மை எதில் கிடைக்கும் என்பதையும், பிறர் நலன் நாடுவதையும் தெளிவாக விளக்குகிறது. நாம் பள்ளிக்குச் சென்று தொழுத பிறகு அங்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் மட்டும் பேசி விட்டு வந்து விடுகிறோம். அங்கு வருகின்ற மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளும் நடைமுறையும் நம்மிடம் இல்லாமல் இருக்கிறது. வல்ல அல்லாஹ் மனித நேயத்தை மிக மிக அதிகமாக வலியுறுத்தி கூறுகிறான். இஸ்லாம் மனித நேயத்தை மிக வலுவாக போதிக்கிறது என்பது நமக்கு சரியான முறையில் கற்றுத்தரப்படவில்லை.

நாமும் இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்து கொள்ள முயற்சி செய்வதும் இல்லை. முயற்சி செய்யாததற்கு காரணம் என்னவாக இருக்கும் : உலக வாழ்க்கை ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்வது இதற்காகவே முழு நேரத்தையும் செலவழிப்பது. நம் சகோதரர்கள் எப்பொழுது பார்த்தாலும் ஒரு வார்த்தையை தயாராக வைத்திருக்கிறார்கள் என்ன அது? நேரம் இல்லை... (Busy அல்லது Too much Busy ).

இந்த வார்த்தையை எந்த வயது வரை சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறார்கள். நம் உயிர் உடலை விட்டுப்போகும் வரையா? நாம் என்ன நினைக்கிறோம்: தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம், ஜக்காத் கொடுக்கிறோம், ஹஜ் செய்கிறோம் பிறகென்ன இஸ்லாத்தின் கடமை முடிந்து விட்டது. சொர்க்கம் சென்று விடலாம் என்று நமது வேலைகளை கவனித்து கொண்டு இருக்கிறோம். வல்ல அல்லாஹ் இவைகளை மட்டும் கடமையாக ஆக்கவில்லை. நிறைய பொறுப்புகளை நம்மீது சுமத்தியுள்ளான். அவைகளில் மிக முக்கியமானது பிறர் நலன் நாடுதல்.

பிற மத சமுதாயத்தவர்களின் உதவி எவ்வாறு உள்ளது?

பிற மதத்தில் சில சமுதாயங்கள் தங்கள் இனத்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தால் அந்த குடும்பத்தில் ஒருவரை தன் கடையிலேயே வேலைக்குச் சேர்த்து சிறிது காலம் கழித்து அவன் சொந்த கடை வைக்கும் அளவுக்கு தயார் செய்து வெளியே அனுப்பி கடனாகவோ அல்லது தருமமாகவோ உதவிகள் செய்து வருகிறார்கள். மேலும் அறக்கட்டளைகள் ஆரம்பித்து இதன் மூலமும் தொழில் வைக்க உதவி செய்து வருகிறார்கள்.

அசத்திய கொள்கையை கடைபிடிப்பவர்களிடம் உள்ள உதவும் மனப்பான்மை, சத்திய கொள்கையை பின்பற்றும் நம்மிடம் எங்கே சென்றது? (முழுவதுமாக இல்லாவிட்டாலும், நம்மிடமும் சில உதவிகள் அமைப்பு ரீதியாக மக்களுக்கு சென்று கொண்டு இருக்கிறது தனித்தனியாக).

அழகிய மனித நேயத்திற்கு சொந்தக்காரர்களின் நிலை என்ன?

அழகிய மனித நேயத்திற்கு இஸ்லாம்தான் சிறந்த மார்க்கம் என்று நாம் சொல்லிக்கொண்டு, இஸ்லாமிய பெயர்களை சூட்டிக்கொண்டு, இஸ்லாம் காட்டிய மனித நேயத்தை கடைபிடிக்க முயற்சிகள் செய்திருக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், பழகியவர்கள் மீது நாம் வைத்துள்ள அன்புகள் எவ்வாறு உள்ளது : திருமணத்தில் கலந்து கொள்வது, மரணம் அடைந்தால் சென்று பார்த்து வருவது இத்தோடு முடிந்து விடுகிறது. உறவுகளும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பதை அறிந்து கொண்டே அவர்களுக்கு உதவ மனம் இல்லாமலும், மழைபெய்தால் தங்கள் வீடுகளுக்குள் மழை பெய்வதை தடுக்க வழியற்று தவிக்கும் ஏழைகளை கண்டு கொள்ளாமலும், நாம் மட்டும் நமது வீட்டு சுவரிலும், தரையிலும் மார்பிள், கிரணைட் கற்களால் அலங்கரித்து, வீடு என்ற பெயரில் ஆடம்பர பங்களாக்களை (வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 அல்லது 3 இருந்தாலும் ஜின்கள் வந்து குடியிருப்பதற்காக பல அறைகளையும்) கட்டிக்கொண்டும், பிற தேவையற்ற காரியங்களையும் நிறைவேற்றி நம் உறவுகளுக்குள் உள்ள ஏழைகளையும், உறவில் இல்லாத நம்மைச் சுற்றி உள்ள ஏழைகளையும் மறந்து வாழ்ந்து வருகிறோம்.

தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நமது சமுதாயத்தில் உள்ளவர்களின் நிலையை பார்த்தால் தாம் மட்டுமே எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என்பது போல் பலரின் நிலை இருப்பதை பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டளவில் நம் சமுதாயத்தில் உள்ள செல்வந்தர்களின் வீட்டு திருமணங்களை தொலைக்காட்சிகளிலும் பார்த்திருக்கிறேன் நண்பர்கள் மூலமும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த செல்வந்தர்கள் இப்படி வாரி இறைத்து செலவழிக்கிறார்களே என்ற வேதனை ஏற்படும். அவர்களின் தெருவில் ஏழைகள் இல்லையா, இல்லை ஏழைக்குமர்கள் முதிர்கன்னியாக இல்லையா? ஒரு செல்வந்தர் வீட்டு திருமண செலவில் 10 ஏழைக்குமருக்கு திருமணம் செய்து கொடுத்து விடலாமே. இந்த செல்வந்தர்களின் நெஞ்சில் ஈரம் இல்லையா? மறுமை பயம் இல்லையா? இப்படி இவர்கள் இஸ்லாமிய பெயர்தாங்கியாக இருப்பது வேதனை அளிக்கிறது.

வல்ல அல்லாஹ் ஒரு மனிதனின் குடும்ப செலவுக்கும் மற்ற தேவைகளுக்கும் 25ஆயிரம் ரூபாய் போதுமானதாக இருந்தும் 50ஆயிரம் அல்லது லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செல்வத்தை தந்தால் அந்த செல்வம் தனக்கே உரியது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தன்னுடைய அறிவுக்கும், திறமைக்கும், படிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக்கொள்கிறார்கள். எல்லா அறிவாளிகளுக்கும், எல்லா படித்தவர்களுக்கும், எல்லா திறமைசாலிகளுக்கும் செல்வம் கிடைத்து விடுவதில்லை. (உதவி செய்து கொண்டு இருக்கும் செல்வந்தர்கள் சில பேர்தான் இருப்பார்கள்).

கைநாட்டு முதலாளியிடம் படித்தவர்கள் கை கட்டி சம்பளம் வாங்கும் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். வல்ல அல்லாஹ்தான் தான் நாடியவருக்கு குறைவாகவும், அதிகமாகவும் செல்வத்தை வழங்குகிறான். அதனால் ஒருவருக்கு அவர் தேவைகள் போக மீதமிருக்கும் செல்வங்களில் ஏழைகளுக்கும் பங்கு இருக்கிறது என்பதை குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது. நாம் வல்ல அல்லாஹ் கூறியபடி நடந்தால் கடன்காரர்களை நமது சமுதாயத்தில் பார்க்க முடியுமா?

யார் கவலைப்படமாட்டார்கள்?

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2: 262)

தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன்: 2:274)

வல்ல அல்லாஹ் என்ன சொல்கிறான் என்பது புரிகிறதா? நம் உறவுகளிலும், தெருக்களிலும் உள்ள சகோதர, சகோதரிகளின் நிலை அறிந்து அவர்கள் நம்மிடம் (அவர்கள் என்ன பெரிய ஆளா? நம்மிடம் வந்து கேட்கட்டுமே? அவர்கள் தேவைக்கு அவர்கள்தானே வந்து கேட்க வேண்டும் என்ற வசனங்களை பேசிக்கொண்டு இருக்காமல்) கேட்காமலேயே அவர்களுக்கு கடனாகவோ, தருமமாகவோ உதவி செய்ய வேண்டும். நாம் எப்படி இருக்கிறோம் யாரும் வந்து கடன் கேட்டால் கொடுக்கலாமா? வேண்டாமா? என்ற பல கேள்விகளுக்கு இடையில் வேண்டா வெறுப்பாக உதவி செய்வோம் அல்லது இல்லை என்று சொல்லி விடுவோம். அவர்களின் வீண் ஆடம்பரத்திற்கான செலவுகளுக்கு உதவி செய்ய வேண்டியதில்லை. அவசிய அத்தியாவசியமான தேவைகளை நாம் நன்கறிந்து உதவி செய்யலாம்.

மேலும் வல்ல அல்லாஹ் என்ன கூறுகிறான்:

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! (அல்குர்ஆன் : 17:26)

விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 17:27)

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் நாம் உதவி செய்யவில்லை அவர்களின் உரிமையைத்தான் கொடுக்கிறோம் என்பதை வல்ல அல்லாஹ் எவ்வளவு அழகாக விளக்கியுள்ளான் என்பதை நம் ஆழ் மனதில் நன்கு பதிய வைத்துக்கொண்டால் கஷ்டப்படும் நம்மைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு கொடுக்கலமா? வேண்டாமா? என்ற ஊசலாட்டமான கேள்விகளுக்கு இடமே இருக்காது.

ஆனால் நம் சமுதாய மக்களோ விரயம் செய்து பிறருக்கு கொடுக்காது ஷைத்தானின் உடன்பிறப்புக்களாக மாறி வருவதைத்தான் அதிகம் காண முடிகிறது. நமது எண்ணங்களை மாற்றிக்கொண்டு வல்ல அல்லாஹ் கூறியபடி வாழ முயற்சிப்போம். இன்ஷாஅல்லாஹ்.


இன்ஷாஅல்லாஹ் வளரும்...
-- அலாவுதீன்
Source : http://adirainirubar.blogspot.com/2010/12/9.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails