Thursday, December 16, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 11

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

மெகா தள்ளுபடி: இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசம். இரண்டு பேண்ட எடுத்தால் ஒரு பேண்ட இலவசம். தரமில்லாத சோப்புத்தூளாக இருந்தாலும் ஒரு வாளி இலவசம் என்றால் நம் மக்கள் வாங்க தயாரக இருக்கிறார்கள். இந்த வியாபார தந்திரம் பல வடிவங்களில் நம்மை சுற்றி சுற்றி வந்து வேடிக்கை காண்பித்துக்கொண்டு இருக்கிறது. 25%, 50%, 70% என்று தள்ளுபடிகளை நாம் பார்த்து வருகிறோம்.

மன்னிப்பு வேண்டுமா? கடனை தள்ளுபடி செய்யுங்கள்

நாம் இந்த உலகத்தில் வாங்கும் பொருட்களில் தள்ளுடி கிடைக்கிறது என்றால் சிரமம் எடுத்தாவது வாங்க முயற்சி செய்கிறோம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? இதோ நம் தலைவர் நபி(ஸல்) அவர்கள் கூறுவதை பாருங்கள்: ஒரு மனிதர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ''நீ உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்'' என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: ஹூதைஃபா(ரலி) நூல்: புகாரி எண் : 2391)

கடனைத் திருப்பி கேட்கும்போது நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ''உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி அவரிடம் ''நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா? ''எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது வேலையாட்களுக்கு கட்டளையிட்டிருந்தேன்! '' என்று கூறினார். உடனே, ''அவரது தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்! '' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்.'' (அறிவிப்பவர் : ஹூதைஃபா(ரலி) நூல்: புகாரி எண் : 2077).

நம்மிடம் கடன் வாங்கியவர் திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் இப்பொழுது நாம் என்ன செய்வது.  அவர் மனம் வேதனைப்படும் அளவுக்கு தொல்லை கொடுக்காமல் அவருக்கு வசதி ஏற்படும்வரை அவகாசம் கொடுக்கலாம் அல்லது கடனை தள்ளுபடி செய்து விடலாம். இப்படி நாம் செய்தால் நம்முடைய பாவங்களையும், தவறுகளையும் வல்ல அல்லாஹ் தள்ளுபடி செய்வான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் விளங்க முடிகிறது.

தர்மம் செய்த கூலி வேண்டுமா?

இந்த நபிமொழியை பாருங்கள்: அல்லாஹ்வின் தூதரே (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகிறார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் கேள்விப்பட்டேனே (அது சரிதானா) என புரைதா(ரலி) கேட்டபோது, கடனின் (தவணைக்)காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : புரைதா(ரலி) நூல்: அஹ்மத்).

இதுவரை அல்லாஹ்வுக்காக அழகிய கடன் நாம் எவ்வாறு கொடுக்க வேண்டும்  என்பதை பார்த்தோம். இனி இதற்கான தீர்வில் பிறரிடம் கடன் வாங்கும் சகோதர சகோதரிகளின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

கடன் வாங்குவோர் நிலை

நாம் எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம் என்பதை முன் தொடர்களில் விரிவாக பார்த்து விட்டோம். நாம் வாங்கும் கடன் முக்கிய மூன்று காரியங்களுக்காக இருந்தால் நலமாக இருக்கும். வயிற்றுபசி, மருத்துவம், இருக்கும் வீட்டிற்காக வெயில், மழை உள்ளே படாமல் இருக்க ஆடம்பரம் இல்லாமல்  சீர்படுத்திக்கொள்ளவும் இதை தவிர ஆடம்பரம் இல்லாமல் பலபேருக்கு சில அத்தியாவசிய காரியங்களுக்கும் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

கட்டாய கடன்

நமக்கு சிரமம் ஏற்படும்பொழுது கடன் வாங்க முடிவு செய்தால் திருப்பி கொடுக்க முடியாத நிலை நமக்கு ஏற்படும் என்று கருதினால் கடன் வாங்குவதை விட நம்மிடம் உள்ள நகைகள்  (உடனே விற்று பணமாக்க கூடியது நகைகள்தான்)அல்லது சொத்துக்களை விற்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நகைகளும் இல்லை சொத்துக்களும் இல்லை என்ற நிலை வரும்பொழுது நாம் வாங்க போகும் கடன்  அவசியம்தானா? எப்படி இதை திரும்ப கொடுப்போம். நம்முடைய வருமானத்தில் மீதப்படுத்தி திருப்பி அடைத்து விட முடியுமா? என்றெல்லாம் நன்றாக யோசித்தபிறகுதான் கடன் வாங்க தயாராக வேண்டும்.

கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

தங்களின் அவசியத்திற்கு கடன் வாங்கி விட்டீர்கள். திருப்பி கொடுக்கும்பொழுது நமக்கு பெரிய பாரமாகவும், சிரமமாகவும் தோன்றும். இதில் சொன்ன நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாதவர்கள் கடன் தந்தவர்களிடம் நேராக சென்று தங்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி வருத்தத்தை தெரிவித்து விட்டு அவகாசம் கேட்கலாம்.

இதில் வசதியுள்ளவர்கள் எவ்வாறு நடக்க வேண்டும்: வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும். என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல் புகாரி, எண்:2400)

கடன் தொடர் ஆரம்பித்து 11வது தொடரில் இருக்கிறோம். இந்த தொடரை படித்த அத்தனை வாசக நெஞ்சங்களிடமும் சில கேள்விகளை வைக்கிறேன்.

1)         கடன் வாங்காமல் வாழ முடியுமா? முடியும் என்றால் அதன் விளக்கத்தை தரவும்!
2)         கடன் எதற்கெல்லாம் வாங்கலாம்?
3)         கடன் எதற்கெல்லாம் வாங்கக்கூடாது?

சிறந்த 3 பதிலுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் பரிசளிக்கப்படும். பதிலை இமெயில் alaudeen45@gmail.com  adirainirubar@gmail.com  மூலமாகவும் அனுப்பலாம். பதில் அனுப்ப கடைசி தேதி 31.12.2010.

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
-- அலாவுதீன்
 Source:http://adirainirubar.blogspot.com/2010/12/11.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails