அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்வதையும் மனித நேயத்தைப்பற்றியும் முன் தொடரில் பார்த்தோம். வாருங்கள் மீண்டும் நாம் பிறருக்கு கடன் கொடுப்பது பற்றி இந்த தொடரில் பார்ப்போம்.
வெற்றி பெற்றோரின் நிலை எவ்வாறு இருக்கும்?
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.(அல்குர்ஆன் : 30:38)
அவனை(அல்லாஹ்வை)நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம் (எனக் கூறுவார்கள்).(அல்குர்ஆன் : 76:8,9,10).
நாம் குர்ஆனில் கூறப்பட்டவாறு தருமங்களாகவும், உதவிகளாகவும் கொடுத்திருந்தால் நம் சமுதாயத்தில் கடனால் துக்கப்படுபவர்களை காண முடியுமா? கடன் வாங்கியதால் பல தரப்பட்ட அவமானங்களை நமது சமுதாய மக்கள் சந்தித்திருப்பார்களா? ஏன் நாம் செய்யவில்லை?
நமது ஜகாத்துகள் பயன் அளிக்கிறதா?
தொழுகை, நோன்பு என்ற கடமைக்கு அடுத்தபடியாக வருவது ஜகாத். ஜகாத்துகளையும், நமது தருமங்களையும் கடன்பட்டோரின், தேவையுடையோரின் தேவைகளை சரியாக அறிந்து கொடுத்திருப்போமா? வல்ல அல்லாஹ் ஜகாத்துகளை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறான்:
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியவனாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன், ஞானமிக்கவன்.(அல்குர்ஆன : 9:60)
நிறையபேர் சரியானபடி ஜக்காத்தை கணக்கிட்டிருப்போமா? ஜகாத் என்ற பெயரில் சில்லரையை மாற்றி வைத்துக்கொண்டு பிச்சைக்காரர்களை உருவாக்கி வருகிறோம். சகோதர, சகோதரிகளே அதிகளவு நாம் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் மக்களின் கடன்களை அரசாங்கம் அடைத்து வந்தது. பைத்துல்மால் மூலம் நிறைய உதவிகளும் செய்து வந்தது. ஆனால் இப்பொழுது உள்ள உலகமய சுரண்டல் பேர்வழிகள் தங்களின் ஆடம்பரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் தங்களின் வயிற்றை மட்டும் நிரப்பி கொண்டு மக்களின் தலையில் கடன்களை சுமத்தி, மக்கள் பசி பட்டினியோடு வாழ்வதை பார்த்துக்கொண்டு ஏழைகளை முன்னேற்ற போகிறோம் என்று நிறைய வீர வசனங்களை மேடையில் பேசி, மேடையை விட்டு இறங்கிய உடன் தங்களின் குடும்பத்தை மட்டும் முன்னேற்றி வருவதை உலகம் முழுவதும் பார்த்து வருகிறோம்.
அதனால் இறைநெறிப்படி ஆட்சி இல்லாத இந்த பூமியில் நம் சகோதரர்களின் கடன் சுமைகளையும் கஷ்டங்களையும் போக்குவதற்கு நாம்தாம் முயற்சி எடுத்து கை கொடுத்து உதவ வேண்டும். கடன்பட்டவரின் கடன்களை எல்லாம் நாம் அடைக்க உதவி கொண்டே இருந்தால் நாமும் கடனாளி ஆகிவிடுவோம் என்று நாம் புலம்ப ஆரம்பித்து விடுவோம். கடன் பட்டவரின் கடனை எல்லாம் நாம் அடைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. ஆனால் மேற்கண்ட இறைவசனத்தில் (9:60) கடன்பட்டவருக்கு தங்களின் ஜகாத்திலிருந்த கொடுங்கள் என்று இறைவன் கட்டளையிடுகிறான். இதை நாம் பின்பற்ற வேண்டாமா?
கடன் மனிதனை நிம்மதியற்று தவிக்க வைத்து பல தீய காரியங்களையும் செய்ய வைப்பதோடு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது. மேலும் சொந்த வீட்டையும் விற்று விட்டு தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த துன்பத்தில் இருந்து கடன்பட்டோர் விடுதலை பெற நம்மால் ஆன முயற்சிகளை செய்ய வேண்டாமா?
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுப்பவர் யாரும் உண்டா?
அல்லாஹ் நம்மிடம் கடன் கேட்கிறான் எதற்கு அவன் ஏழையாகி விட்டானா? அல்லது அவன் வைத்திருக்கும் செல்வம் குறைந்து விட்டதால் நம்மிடம் வாங்கி நிறைத்துக் கொள்வதற்காக கேட்கிறானா? இல்லை சகோதரர்களே! அடுத்து வருகின்ற குர்ஆன் வசனங்களில் வல்ல அல்லாஹ் கூறுவதை பாருங்கள்:... அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாரளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.(அல்குர்ஆன்: 2:245)
அவர்களது செல்வங்களில் யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அறியபட்ட உரிமை இருக்கும்.(அல்குர்ஆன் : 70:24,25)
(கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.(அல்குர்ஆன் : 2:280)
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாரளமானவன்: அறிந்தவன்.(அல்குர்ஆன் : 2:261)
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 2:262)
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத்தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன்: 4:36)
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! தேவையற்ற மனிதர்கள் யாரும் இந்த உலகத்தில் இல்லை, அதுபோல் ஒவ்வொரு மனிதனுடைய தேவைகளும், சூழ்நிலைக்கு எற்ப மாறுபடும். சில நேரங்களில் மனிதர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அம்மனிதர்களுக்கு உதவ யாரும் முன்வராத பொழுது வட்டி என்னும் கொடுமைத்தீயில் தள்ளப்படுகிறார்கள்.
நம் இஸ்லாம் மார்க்கம் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவ கூறுகிறது. அதைத்தான் மேற்கண்ட அனைத்து வசனங்களும் நமக்கு உணர்த்துகிறது. நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு (உறவினராக இருந்தாலும் உறவினராக இல்லாவிட்டாலும்) உதவுவதைத்தான் அல்லாஹ்வுக்காக கடன் கொடுப்போர் யாரும் உண்டா? என்று கேட்கிறான். இனிமேலாவது பிறர் நலன் பேணுவதிலும், உதவுவதிலும் அதிகளவு ஈடுபடுங்கள். வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
-- அலாவுதீன்
Source : http://adirainirubar.blogspot.
No comments:
Post a Comment