Tuesday, December 28, 2010

பெண்ணைத் தாண்டி வருவாயா

பெண்ணை மட்டும் பேசிடும் புலவா

கண்ணில் கண்டிடாக் கடவுள் ஆட்சி

விண்ணில் மண்ணில் விந்தைக் காட்சி

எண்ணிப் பார்த்தே ஏத்திடு புலவா

உள்ளே சென்ற ஓரணு கருவாய்ப்

பிள்ளைச் செல்வமாய்ப் பிரசவம் பெறுதல்;

வாயுள் சென்ற தாயின் பாலே

நோயினை விரட்டிட நலம்தரும் உதிரமாய்

இதயக் கூட்டினுள் இருத்தல் எப்படி?

அதனை எண்ணினால் அவனைக் காண்பாய்

தந்தை விந்தை தந்தும் அந்த

தந்தயின் தந்தை தந்த விந்தே

உந்தை “நான்”எனும் உணர்வே விந்தை!!

சொந்தம் யாரெனச் சொல்நீ “நானா?”

நானா நீயா நாளெலாம் வழக்கு

பேனா தந்த பேரிறை வழங்கிய

அறிவினை மறந்து அல்லற் பட்டதால்

நெறியினைத் துறந்து நிம்மதி இழந்தாய்

உன்னை நோக்கின் உன்னிறை அறிவாய்

உன்றன் பாட்டே உன்னிறை அறியவே



குறிப்பு ”அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்”(அல்-குர் ஆன் அத்யாயம் 96: வசனம் 04)

:*பேனா*

யாப்பிலக்கணம்:

நிலைமண்டில அகற்பா

“கவியன்பன்”கலாம், அதிராம்பட்டினம்


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails