Saturday, December 18, 2010

விக்கிலீக்ஸ்: பயங்கரவாதத்தின் மீது இந்திய முஸ்லிம்களுக்கு நம்பிக்கையில்லை!

இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்துக்கு துணை போவதில்லை; அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பியதாக விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார். சானியா மிர்சா, ஷாருக்கான் போன்றவர்கள் இந்திய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரங்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Source : http://www.inneram.com/2010121812570/wikileaks-indian-muslims-reject-extremist-creeds

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails