அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! முன் தொடர்களில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கத்தை பார்த்து விட்டு பிறகு தொடரலாம். கடன் கட்டுரை தொடங்கி 8 தொடர் வெளிவந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்! நாடுகள் வாங்கும் கடன், வங்கி கடனும் மனிதர்களின் ஆசைகளும், கடன் அட்டை (Credit Card), வளைகுடாவில் காலடி வைப்பதற்கு முன்னும் பின்னும் நாம் வாங்கும் கடன்கள், சகோதர சகோதரிகள் கடன் கொடுத்து வாங்கிய விபரங்கள், தாயகத்தில் உள்ள உறவினர்களிடமிருந்து வளைகுடா நாட்டில் உள்ளவர்களுக்கு வந்த பலதரப்பட்ட கடன் மனுக்கள், ஆடம்பர கடன், நகை கடன்கள், வங்கியின் நிலைபாடு, இரவல் நகை கடன், இஸ்லாம் உலகிற்கு வழங்கிய நன்மைகள், ஏலச்சீட்டு கடன், தினச்சீட்டு கடன், வாரச்சீட்டு கடன், குர்பானிக்காக வாங்கும் கடன், திருமண(வலீமா)கடன், திருமண கடன்கள், சகோதரிகள் வாங்கும் கடனால் நிம்மதியற்று தவிக்கும் கணவர்கள், கடன் எனும் நிழல் கூட தன் மீது விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி இவைகள் அனைத்தையும் பார்த்தோம்.
இனி தீர்வுகளில் அல்லாஹ்விற்காக அழகிய கடன் பிறருக்கு நாம் எவ்வாறு கொடுக்க வேண்டும். மேலும் கடனை வாங்குபவர்களின் நிலைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். இதுவரை கடன் வாங்காதே என்று கூறிவிட்டு இந்த தொடரில் கடன் வாங்குவதை ஊக்கப்படுத்துவதாக நினைத்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் இஸ்லாம் மார்க்கம் கடன் வாங்குவதைப் பற்றியும், கொடுப்பதைப் பற்றியும் விவரித்து அதற்கான வழிமுறைகளையும் நமக்கு தெளிவாக்குகிறது. அதை மார்க்க வழிமுறைகளில் பார்ப்போம்.
நாம் தொழுவது எதற்காக?
வல்ல அல்லாஹ் தொழுகையை கடமையாக்கி நம்மை ஜமாஅத்தோடு தொழச்சொல்கிறான். தனியாக ஒருவர் தொழுவதை விட பள்ளிக்கு சென்று ஜமாஅத்துடன் தொழுவது பற்றி நபி(ஸல்) அவர்கள்: தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவது இருபத்தி ஏழு மடங்கு சிறப்பானதாகும் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள்.(புகாரி,முஸ்லிம்).
ஜமாஅத்துடைய ஒருங்கிணைப்பின் மூலம் நாம் நன்மையை பெற்றுக்கொள்வதோடு, மனித நேயத்துடன் நடந்து கொள்வது எப்படி என்ற பயிற்சியும் கிடைக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. பள்ளிக்கு வரும் சகோதரர்களிடம் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலையை மறந்து சகோதர உணர்வுடன் பழகி அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பை இந்த ஜமாஅத் தொழுகை ஏற்படுத்திக் கொடுக்கிறது. (தற்பொழுது உள்ள தொழுகைகள் நாமும் முஸ்லிம்கள் என்று காட்டிக்கொள்ளவும். நமது கடமை தொழுவது மட்டுமே என்பதற்காகவும் இருப்பதுபோல் எண்ணத்தோன்றுகிறது).
நன்மை எதில் உள்ளது?
வல்ல அல்லாஹ் கூறுவதை பாருங்கள்:
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம் மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (அல்குர்ஆன்:2:177)
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத்தோழருக்கும், நாடோடிகளுக்கும். உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 4:36)
