Wednesday, January 5, 2011

ரஜினி ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெறுமா?




வலது பக்க இமை துடித்தால் நல்ல காரியம் நடைபெறும் என்றும் இடப்பக்க இமை துடித்தால் கெட்ட காரியம் நடைபெறும் என்றும் சிலர் கூறுகின்றனர். பொதுவாக இமைகள் இவ்வாறு துடிப்பதற்கான காரணம் என்ன?- சிவா
கண்ணிமையைச் சுற்றியுள்ள தசைகள் திடீரென இழுக்கப்படுவதால் அனிச்சையாக இமைகள் துடிக்கின்றன. உறக்கம் குறைவதாலும் அதிகப்படியான உடல் தளார்ச்சியாலும் கண்களில் ஏற்படும் அதிகப்படியான சோர்வாலும் உறக்கமின்மையாலும் கூட இது நிகழலாம். இந்த உடலியல் நிகழ்வால் நல்லது கெட்டது நடக்கும் எனச் சிலர் நம்புவது நகைப்புக்குரியது.

இன்னுமா இந்திய மக்களுக்கு ஊழல் ஒரு பிரச்சன்யில்லை? -சுகுமார்

ரேஷன் கடையில் அரிசி கடத்துகிறான், பருப்பைப் பதுக்குகிறான், சர்க்கரை எடை குறைவு, மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு என்பவை மட்டுமே ஊழல் எனக்கொதிக்கும் அன்றாடங்காய்ச்சிகள் அதிகம் வாழும் நாட்டில், ஊருக்குள் பஸ் வரவில்லை; வந்தாலும் டிக்கெட் கட்டணம் அதிகம், கேபிள் டி வி யில் படம் தெரியவில்லை என்பன மட்டுமே பிரச்சனையாகக் கருதும் மக்கள் அதிகம் வாழும் நாட்டில், அரசியல்வாதிகள் தரும் அதிக விலைக்கு ஓட்டுகளை விற்கலாம் என்ற எண்ணமே உள்ள பாமரர்கள் அதிகம் வாழும் நாட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் அல்லது முறைகேடு போன்ற செய்திகளை அவர்கள் அறிந்து கொண்டாலும் அவை அவர்களுக்குப் பொருட்டில்லை. ஏனெனில் அவை அவர்களை அன்றாடம் பாதிக்கும் பிரச்சனை இல்லை.


கேள்வி பதில் பகுதி தேர்வில் உண்டு. அதனைக் கண்டு பிடித்தவர் யார்? அது தேவையா?- முஹம்மது அலி ஜின்னாபடிப்பதை விடக் கேட்பதன் வாயிலாய் அறிவு விரைவில் வளரும். "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்பது குறள்.

இதனால்தான் 'படிக்காத மேதை'கள் உருவாக முடிகிறது.எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட நாட்டுப்புறப் பாடல்களைப் பாடவும் பழந்தமிழ் இலக்கியங்களை அறியவும் செவிச்செல்வமே துணை புரிந்தது.

இந்து மதத்தின் வேதங்களைச் "ச்ருதி" என்பர். செவியால் கேட்டுக் கேட்டு மற்றவர்களுக்குப் பரவியதால்தான் வேதங்களைச் "ச்ருதி" என்கின்றனர். . முஸ்லிம்களின் வேதமும் செவிவழியாகவே வந்து எழுத்தில் வடிக்கப்பட்டதாகவும் நபியிடம் சீடர்கள் வினாக்கள் தொடுத்தே விளக்கங்கள் பெற்றதாகவும் அவ்வேதம் அருளப்பட்ட வரலாறு கூறுகிறது.

எனவே கேள்வியால் கற்ற அறிவை ஆசான் உறுதிப் படுத்தித் தேர்வு செய்ய வினாத் தொடுப்பது கட்டாயத் தேவையாக இருந்தது. இக்காலத்தில் படிப்பதன் மூலமும் எழுதுவதன் மூலமும் அறிவு பெருகுவதால் தேர்வுகளில் எழுத்தில் வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. எனவே அதைக் கண்டுபிடித்தவர் யார் என்பது தேவையற்றது; ஆனால் வினாத்தொடுப்பது தேவையானது.

ரஜினி கை காட்டும் கட்சி தமிழ்நாட்டில் ஜெயிக்கும் என்று தாங்கள் நம்புகிறீர்களா? - ராஜேஷ், சென்னை
அரசியலில் நுழையாத அல்லது அரசியலில் இறங்க விரும்பாத ரஜினிக்கு எனத் தமிழ்நாட்டு மக்களிடம் தனி அரசியல் செல்வாக்கு இருந்ததில்லை. ஜெயலலிதாவின் வீடு இருக்கும் போயஸ்தோட்டப் பகுதியில் ஸூப்பர்ஸ்டார் ரஜினியின் வீடும் இருக்கிறது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்படும் என்ற உளவுத் தகவலை அடுத்து போயஸ்தோட்டத்தின் நுழைவாயிலில் ரயில்வேகேட் போல ஒரு செக்போஸ்ட் வைக்கப்பட்டுப் போவோர் வருவோர் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதில் ரஜினியைக் காண வருவோர் பாதிக்கப்பட்டதால் ரஜினி எரிச்சலடைந்து தம் அதிருப்தியை வெளியிட்டார்.

அமைச்சர்கள் உட்பட கட்சியினர் அனைவரையும் தம் காலில் விழ வைத்து ஆண்டு கொண்டிருந்த ஜெயலலிதாவின் தரப்புக்கு இது பிடிக்கவில்லை. யாரையும் மதித்தோ பொருட்படுத்தியோ பழக்கப்பட்டிராத ஜெயலலிதா தரப்பு எதிர்வினையாற்றவே கடுப்படைந்த ரஜினி "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று கூறினார்.

இருதரப்புச் செய்திகளையும் ஊடகங்கள் பெரிதாக ஊதி விட்டிருந்தன. அச்சமயத்தில் ஜெயலலிதாவுடன் நரசிம்மராவ் கண்ட தேர்தல் கூட்டணி பிடிக்காமல் மூப்பனார் தலைமையில் சிதம்பரம் உட்பட்டோர் பிரிந்து 1996 ஆம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. கட்சியைத் துவக்கினர். ரஜினியின் ஆதரவு அறிக்கையும் வந்தது. அத்தேர்தலில் ஜெயலலிதா, நரசிம்மராவ் தரப்பு தோல்வி கண்டது.

இது ரஜினியால் ஏற்பட்டது என ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டது. ரஜினிக்கு எனச் செல்வாக்கு இருந்திருந்தால் அடுத்த தேர்தலில் ஏன் அது செல்லுபடியாகவில்லை முத்து, படையப்பா போன்ற படங்களில் சில அரசியல் சாய்வு வசனங்கள் ரஜினியால் பேசப்பட்டதிலும் ரசிகர்கள் புதுப்புது அர்த்தம் கண்டனர். குசேலன் படத்தில் இதற்கு விளக்கமும் கொடுத்து விட்டார் ரஜினி. 2004 ஆம் ஆண்டில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முகத்துக்கு நேரே அவரைப் புகழோ புகழ் எனப் புகழ்ந்து வாய்ஸ் கொடுத்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டார் ரஜினி.

பங்கு சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகினறன? - அப்துல்ஹமீது
நாட்டில் தேர்தல் நடக்கும்போது அல்லது அரசியல் குழப்பங்கள் நிலவி ஆட்சி கவிழும் என அஞ்சப்படும்போது, பட்ஜெட் வெளியிடும் நேரம் அல்லது அரசின் பொருளாதாரக் கொள்கை மாற்ற அறிவிப்புகள் வரும்போது அல்லது உலகச் சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்றவை நிகழும் சமயங்களில் பங்குச் சந்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பணவீக்க சதவீதம் குறைவாகவும் பொருளாதார நீலை சீராகவும் நாட்டின் உற்பத்தி உயர்ந்தும் இருக்கும்பொழுது பங்குச் சந்தை ஏறுமுமுகமாக இருக்கும்.

முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு தெரியாமலே இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறதே உண்மையா? - முத்துக் கருப்பன்
இப்போது அப்படித்தான் சொல்ல முடியும்.

நீரா ராடியா உரையாடலில் இதுவரை வெளியான டேப்புகளின் அடிப்படையில் பார்த்தால் அழகிரி, ஸ்டாலின் இருவருக்கும் தெரியாமல் இவ்வளவும் நடந்திருக்க வாய்ப்புண்டு என நம்புவதற்கு இடமிருக்கிறது.

விக்கிலீக்ஸிற்கு விஷ(ய)ங்களை லீக் செய்வது யார்? - ராஜா
அவரே ஒரு ஹேக்கர் என்று செய்தி வந்துள்ளது. அமெரிக்க ராணுவப் புலனாய்வுப் பகுப்பாய்வாளர் ஒருவர் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள செய்தியும் வெளியானதே!

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்? - விஜய்
பல முறை போட்டுப் பார்த்தேன். பன்னிரெண்டு வருகிறது.

சரியா தவறா என நீங்கள்தாம் சொல்ல் வேண்டும்.

வங்கி மைனஸ் வட்டியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் வணங்காமுடியாரே? இந்தியாவில் இது சாத்தியமாகுமா?- செல்வமணி
இந்தியாவின் பிரதமராக இருக்கும் பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன்சிங் கூட இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறாரே! சாத்தியம் இல்லையெனில் அவர் அப்படி ஆதரவு தெரிவித்திருப்பாரா? மலேசியா சென்றபோது, அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் வட்டியில்லா வங்கி முறையை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் சொல்லியிருந்தார்.


இந்தியாவின் எல்லாச் சந்திலும் சந்தி சிரித்துப் பலமாதங்களுக்குப் பிறகு 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடையவர்களின் இடங்களில் ஸீபீஐ "திடீர் சோதனை" நடத்துவது பற்றி ... - வசீகரன், பட்டுக்கோட்டை
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் தான் சி பி ஐ விசாரிப்பதற்குக் களம் இறங்கியது. அதனால் சி பி ஐ யைக் குற்றம் சொல்ல முடியாது.

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2011010212819/vanagamudi-answers-02-01-2011

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails