Monday, January 17, 2011

வாழ்த்துக்கள் சொல்வது எப்படி ?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.... 

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
அஸ்ஸலாமு அலைக்கும் (May Peace be upon you)
என்னும் அற்புத முகமனாகும். "உங்கள் மீது அமைதி நிலவுவதாக" என்று பொருள்படும் இந்த முகமன் கேட்பவர் உள்ளங்களை கொள்ளை கொண்டது. அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மனிதகுலம்  என்றென்றும் ஏங்குவது மன அமைதிக்காகத்தான். ஒருவர் நமது அமைதிக்காக பிரார்த்திக்கும் போது யார் தான் மகிழ்ச்சியடையாமல் இருப்பர்? அமைதி என்று பொருள்படும் ஸலாம் என்ற வார்த்தை அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும். அமைதியின் பிறப்பிடம் இறைவன் தானே?



அன்றிலிருந்து அந்த வார்த்தை இன்றியமையாத ஒன்றாக திகழ ஆரம்பித்தது. ஸலாம், அஸ்ஸலாமு அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் 
வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு என்று பல முறைகளில் சலாம் கூற ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். 

ஸலாம் கூறுவதின் முக்கியத்துவம் என்ன? 

அல்லாஹ்வின் தூதரிடம் ஒருவர் கேட்டார், "இஸ்லாத்தில் சிறந்த விசயம் எது?". அதற்கு இறுதித் தூதர் (ஸல்), "அடுத்தவருக்கு உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் கூறுவதுமே ஆகும்" என்று பதிலளித்தார்கள் --- Al-Bukhaari (12, 28 and 6236), Muslim (39), Ahmad (2/169), Abu Dawood (5494).  

ஆம், இஸ்லாத்தில் மிக முக்கிய விசயங்களில் ஒன்று அடுத்தவருக்கு சலாம் கூறுவது, இறைவனின் சாந்தி அவர் மீது நிலவ வேண்டுமென மனதார துஆ செய்வது. மேலே பார்த்த ஹதீஸை உற்று நோக்கினால் அழகான ஒரு விஷயத்தை உணரலாம். அதாவது, ஒருவருடைய வயிற்று பசியை போக்குவதும், அவருடைய மன அமைதிக்கு பிரார்த்திப்பதும் ஒரு முஸ்லிமின் கடமையென மிக அழகாக கூறியிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். 

ஏன் ஸலாம் கூற வேண்டும்? 

சகோதரத்துவத்தையும், அன்பையும் வளர்க்கும் ஒரு உன்னத வழி என்பதால்...



பின்வரும் ஹதீசை கவனியுங்கள்.       

நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியது, "நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் விரும்பாதவரை நம்பிக்கை கொள்ள முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தக்கூடிய வழியை நான் சொல்லவா? உங்களுக்குள்ளாக ஸலாத்தை பரப்புங்கள்" --- Muslim (54), Ahmad (2/391), and al-Tirmidhi (2513)   

சுபானல்லாஹ்...என்னவொரு அழகான வார்த்தைகள் !!!...நம்மிடையே அன்பை வளர்க்கும் ஒரு இடைமுகமாக ஸலாம் கூறுவது இருப்பதாக இறுதி தூதர் (ஸல்)  கூறியிருக்கின்றார்கள். 

ஸலாம் கூறுவதால் என்ன பயன்?

முஸ்லிம்களாகிய நமக்கு நன்கு தெரிந்த ஒன்று தான். ஒருவர் ஈமான் கொண்டு நல்ல அமல்களை செய்தால் அவர் சுவர்க்கவாதி ஆகின்றார். அந்த நல்ல அமல்களில் ஒன்று அடுத்தவருக்கு ஸலாம் கூறுவது. நல்ல அமல்களுக்கு கூலி உண்டல்லவா? ஸலாம் கூறுவதால் நன்மைகள் எவ்வளவு? 

ஒரு மனிதர் நாயகம் (ஸல்) அவர்களை கடந்து செல்லும் போது "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் (ஸல்) அவர்கள் "பத்து நன்மைகள்" என்று கூறினார்கள். மற்றொருவர் நாயகம் (ஸல்) அவர்களை கடக்கும்போது "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்தல்லாஹ்" என்று கூறினார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நாயகம் (ஸல்) அவர்கள் "இருபது நன்மைகள்" என்று கூறினார்கள். அப்போது மற்றொருவர் முஹம்மது (ஸல்) கடந்தார். அவர் "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதல்லாஹி வபர காத்துஹு " என்றார். அதற்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் அவர்கள் "முப்பது நன்மைகள்" என்றார்கள் --- Al-Bukhaari in al-Adab al-Mufrad (586)      
       
ஒவ்வொரு முறை ஸலாம் கூறும்போதும் ஏகப்பட்ட நன்மைகள் நம் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கின்றன...அல்ஹம்துலில்லாஹ்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமீன். 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My sincere thanks to:
1. Islam-qa.com for Hadith references. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Source

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails