
சிபிஐ விசாரனை என்றவுடன் அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வருகிறதே. அது ஏன்?- ராஜா
ஒளித்து வைக்க வேண்டிய உண்மைகள் நெஞ்சில் நிறைந்திருப்பதால் விசாரணையில் அவற்றை வெளிக்கொண்டு வந்து விடுவார்களோ என்ற படபடப்பால் நெஞ்சு வலி வருகிறதோ என்னவோ? விசாரணையை எப்படி எதிர்கொள்வது என்ற திட்டமிடலுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என யோசிப்பதற்கும் தனிமையும் ஓய்வும் தேவை என்பதால் மருத்துவமனைக்குப் போவது வசதி. அங்கு ICU அறையில் இது சாத்,தியமாகலாம்.
மாநாடுகளின் உண்மையான நோக்கம்தான் என்ன? (அல்லது) பொதுக்கூட்டங்களினால் ஏதேனும் மாற்றங்கள் வருமா? -கருத்தான்
பொதுவே அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சாதிச் சங்கங்கள் போன்றவை மாநாடு கூட்டுவது தங்கள் பலத்தைப் பிறருக்கு அறிவிக்கவே! சில ஒடுக்கப்பட்ட அல்லது அரசால் வேட்டையாடப்டும் சில சமூகங்கள் நடத்தும் மாநாடுகளால் அச்சமூகத் தவருக்கு, "நாம் மட்டும் தனித்தில்லை; இத்தனை பேர் நம்மோடும் நம் உணர்வோடும் ஒன்றி இருகிறார்கள்" என்ற நம்பிக்கை வரும். அங்கு நிகழ்த்தப்படும் உரைகளையோ நிறைவேற்றப்படும் தீர்மானங்களையோ பெரும்பாலோர் கவனிப்பதே இல்லை. உளவுத்துறையினர் மட்டுமே இவற்றில் ஆர்வம் காட்டுவர்.
தெருமுனைக் கூட்டங்கள் இரண்டு அல்லது மூன்று மணிநேரக் காட்சி என்பதால் அவற்றில்
உரைகளை கேட்கும் வாய்ப்பு உள்ளது. பொதுக்கூட்டப் பேச்சுகளால் மாற்றம் வரும் என்பது மிக அரிதானது. இப்போது யாரும் பேச்சாளர்களை நம்புவதில்லை. பொழுது போக்கிற்காகவே கூட்டங்களுக்கு வருகிறார்கள். அது, தி.மு.க. நடத்தும் ஆ.ராசா ஆதரவு ஸ்பெக்ட்ரம் விளக்கப் பொதுக்கூட்டமானாலும் தமிழ்க்குடி தாங்கி ராமதாஸ் நடத்தும் மது ஒழிப்புக் கூட்டமானாலும் சரியே!
அருந்ததி ராய் சொல்வதை பார்த்தால் கஷ்மீர் விஷயத்தில் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் நேருதானே வருகிறார்?- மார்க்ஸ், சேலம்
அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. நேரு முழுமனதோடு இன்னும் சற்றுக் கூடுதலாக முயன்றிருக்கலாம்தான். ஆனால் அரசியலோ அல்லது வேறு அழுத்தங்களோ அவரைத் தடுத்து விட்டன.
பலதார மணத்துக்கு எதிராகக் குரலெழுப்புவோர், இருதாரமுடைய கருணாநிதிக்கு எதிராகப் பேசாதது ஏன்? - அமீர் ஹம்ஸா
இந்துத் திருமணச்சட்டப்படி இரு தாரம் குற்றமாம். எம் ஜி ஆர் முதல்வராகவும் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலதார மணம் பற்றி ஒரு விவாதம் எழுந்தது. அப்போது அமைச்சர்களாக இருந்த காளிமுத்து, திருநாவுக்கரசு போன்றோர் இரு மனைவிகளுடன் வாழ்ந்து வந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி இருவருடன் வாழ்ந்து வந்ததும் மேலும் பல உறுப்பினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் வாழ்ந்து வந்ததும் ஒரு உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டன.
சட்டமன்றத்தில் பேசியதைவிட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கி.வீரமணி யாரை ஆதரித்துக் கொண்டிருப்பார்? - இளமாறன், நாகப்பட்டினம்
ஆளும் கட்சியை... 
புதுசு புதுசாய் வந்து கொண்டிருக்கும் ஹைடெக் உபகரணங்கிளில் வ.மு.வைக் கவர்ந்தது எது? - பாபு, சென்னை
மடிக்கணினி!அதுதான் எனக்கு மிகவும் பயன்படுகிறது. அதைதாண்டிய தேவை இப்போது எனக்கில்லாததால் வேறு கருவிகளில் நாட்டமில்லை; அதனால் நட்டமுமில்லை.
திமுக அரசு வழங்கும் இலவசங்களால் மக்கள் பயன்பெறுகிறார்களா? சோம்பேறியாகின்றார்களா? - வசீகரன், பட்டுக்கோட்டை
பயன்தான். அன்றாட உணவுக்கும் இதர தேவைகளுக்கும் குறைந்த அளவாவது உழைத்தாக வேண்டும். கருணாநிதி இலவச டி.வி பெட்டி வழங்கினாலும் "கேபிள் கனெக்ஷன்" இலவசமில்லையே!
"ஏழைகள் நடமாடும் வரை இலவசங்கள் தொடரும்" எனக் கருணாநிதி அறிவித்திருப்பது மக்களைச் சோம்பேறி யாக்குவதற்கில்லை.
ஏனெனில் அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் மதுக்கடைக்கு வாரிக்கொடுக்க மக்கள் உழைத்தாக வேண்டுமே?
தமிழகத்தின் அடுத்த முன்னாள் முதல்வர் யார்? - ராஜன் பிள்ளை
அண்மையில் சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங் சொன்னபடி தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால்....ஜெயலலிதாவின் இடத்துக்குப் போட்டியில்லை.!
திமுகவிலிருந்து ராசா கழட்டி விடப்படுவாரா?- கனி
வாய்ப்பிருக்கிறது. பதவி மட்டுமே பெரிதாகிப்போன அரசியலில் உறவும் பகையும் நிரந்தரமில்லை. ராசாவைப் பலி கொடுத்தால்தான் பதவி என்றால் அதற்கும் தயக்கமில்லை. இந்நேரம் தளத்தில் ரஸ்ஸலின் அலசலில் இது சுட்டிக்காட்டப்பட்டிருந்ததே!
நான் கேட்க நினைக்கும் கேள்விகளை வேறொரு நபர் கேட்டு விடுகிறாரே, எப்படி?... - ஜமால்
Great people think alike என நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளத்தான்........ (வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
Source : http://www.inneram.com/2011010912936/vanagamudi-answers-09-01-2011
No comments:
Post a Comment