Showing posts with label இந்திய யூனியன் முஸ்லிம் லீக். Show all posts
Showing posts with label இந்திய யூனியன் முஸ்லிம் லீக். Show all posts

Saturday, December 11, 2010

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம் - முஸ்லிம் லீக் மாநாட்டில் கருணாநிதி அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தற்போது செயல்படும் மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, "அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்" எனப் பெயர் மாற்றம் செய்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியத்தை ஏற்படுத்திடவும் அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு, சென்னை தாம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்கு, ``நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்'' என்னும் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்டு முதல்வர் கருணாநிதி நிறைவுப்பேருரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

மாநாட்டுத் தலைவர் காதர் மொகிதீன் விருதினை எனக்கு வழங்கும்போது அவருடைய அழகான முத்து முத்து போன்ற இனிய தமிழால் அதைப் படித்தளித்தார். அந்த விருதைப் பெறும்போது, எனக்கொரு குறை. பெரியாருடைய பெரும் தொண்டன், அண்ணாவின் அருமை தம்பி நான் என்பதையும் அந்த வாழ்த்திலே எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒன்றை விட்டுவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை? காயிதே மில்லத்தினுடைய அடியொற்றி நடந்தவன் நான் என்ற அந்த வாசகத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய இயக்கத்தைப் பற்றிச் சொன்னால், அது சுயவிளம்பரமாகி விடும் என்று கருதி விட்டுவிட்டார்களோ - என்னவோ தெரியவில்லை. ஆனாலும், எனக்கு பெரிய மனக்குறை அது.

பெரியாரை, அண்ணாவை தமிழகத்திலே நினைவு படுத்துகிற நேரத்தில் காயிதே மில்லத்தை மறந்து விட்டால் நான் நம்முடைய பேராசிரியர் பெரியவர் என்பதால் இந்த வார்த்தைகளை ஜாக்கிரதையாகச் சொல்லுகிறேன் - மன்னிக்க முடியாத குற்றம். இரவு வீட்டுக்குச் சென்றாலும் அவருக்கு தூக்கம் வராது. எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை நினைத்து நினைத்து மனம் உருகுவார் என்பதும் எனக்குப் புரியும். அதனால் தான் அவர் படிக்கும்போது மாத்திரமல்ல - படித்து முடித்த பிறகும்கூட - எடுத்து திரும்பத் திரும்ப பார்த்தேன். காயிதே மில்லத் பெயர் இருக்குமா என்று. இல்லை என்பதற்காக நான் மீண்டும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

Thursday, December 9, 2010

`நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' கருணாநிதிக்கு மேலும் ஒரு விருது!

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு "நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்" என்றொரு விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழங்க உள்ளது. சென்னை தாம்பரத்தில் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கருணாநிதிக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகைதீன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:

தாம்பரத்தில் வரும் 11ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நடைபெறுகிறது. எனது தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதிக்கு, `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு அவர் சிறப்புரையாற்றுகிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

`இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கு 2020' என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் இ.அஹமது வெளியிட்டு பேசுகிறார். கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர்அலி ஷிஹாப் தொடக்க உரையாற்றுகிறார். மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்று பேசுகிறார். எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., கலீலூர் ரஹ்மான் எம்.எல்.ஏ., அப்துல் பாசித் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசுகின்றனர்.

கேரள முன்னாள் அமைச்சர் குஞ்ஞாலிக் குட்டி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர், இ.டி.ஏ.குழும நிர்வாக இயக்குனர் செய்யது எம்.சலாஹுத்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். நிறைவில், கட்சியின் மாநில பொருளாளர் செய்யது அஹமது நன்றி கூறுகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறது. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சிறப்பான வெற்றி பெறுவதற்காக பாடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Source : http://www.inneram.com/2010120912375/one-more-title-for-karunanidhi-iuml

LinkWithin

Related Posts with Thumbnails