Showing posts with label அறிமுகம் செய்திகள். Show all posts
Showing posts with label அறிமுகம் செய்திகள். Show all posts

Monday, October 25, 2010

"HAVE YOU DISCOVERED IT'S REAL BEAUTY" in Englsih By:Dr.Naji(Saudi Arabia) Translated in TAMIL:"அதன் உள்ளழகைக் கண்டுகொண்டீர்களா?"by:"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

டாக்டர் நாஜி இப்ராஹிம் அர்ஃபாஜ் என்னும் முஸ்லிம் மார்க்க அறிஞர்(சஊதி அரபிய்யா)அவர்களால்  ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  "HAVE YOU DISCOVERED IT'S REAL BEAUTY? என்ற நூலினை இறையருளால் தமிழாக்கம்:"அதன் உள்ளழகைக் கண்டுகொண்டீர்களா?"என்ற தலைப்பில்
 செய்துள்ளேன்; இத்துடன் உங்கள் யாவர்க்கும் எனது அன்பளிப்பாக அனுப்புகின்றேன்.
மனம் திறந்து இந்நூலினைத் திறந்து படியுங்கள்; உண்மைத் தேடும் உள்ளங்களே....!!!!
தினம் உங்களின் சிந்தையில் ஓர் மாற்றமும்; மகிழ்வும் காண்பீர்கள்...
இறைவன் நாடினால், அவன் மார்க்கத்தில் இணைத்துக் கொள்வான்;
மறைகூறும் மார்க்கம் மனித குலம் யாவர்க்கும்..
எல்லாப் புகழும் இறைவனுக்கே..!(அல்ஹம்துலில்லாஹ்)
அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) மற்றுமொரு மொழிபெயர்ப்பு நூலுடன்
சந்திப்போம்;அந்த ஓர் உண்மை இறைவனையே எந்நேரமும்
சிந்திப்போம்............
மிக்க நன்றியுடன்,
"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி, (இருப்பிடம்)

00971-50-8351499 (MOBILE)
00971-2-6770080 EXT; 343
to view the book called "HAVE YOU DISCOVERED ITS REAL BEAUTY" click the following link
http://d1.islamhouse.com/data/en/ih_books/signal/en_Have_you_discovered_its_real_beauty.pdf


Downlad
as PDF

தமிழாக்கம் பார்க்க :மேல் உள்ள Downlad as PDFகிளிக் செய்யவும்

Sunday, October 10, 2010

அன்புடன் புகாரி அவர்கள் சென்னை வந்துள்ளார். யார் இந்த அன்புடன் புகாரி!

அஸ்ஸலாமு அலைக்கும்.
 


அன்புடன் புகாரி அவர்கள் சென்னை வந்துள்ளார். அவரை  பார்த்து  பலர் 

பேட்டி கண்டு அகமகிழ்கின்றனர்; 


என் பெயர் புகாரி. என் தந்தை எனக்கு அன்போடு வைத்த பெயர். புகாரி என்று ஏன் பெயர் வைத்தார் என்று எனக்குத் தெரியாது. சொல்லும்போது அதன் உச்சரிப்பு அவரை ஈர்த்திருக்கலாம். அதன் பொருளில் மயங்கி வைத்திருக்கலாம். அல்லது எங்கோ ஒரு நண்பர் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனின் பெயர் புகாரி என்று கேட்டு, அன்றே தன் பிள்ளைக்கும் அதே பெயரைச் சூட்டவேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கலாம். ஆனால் எது உண்மை என்று நான் கேட்டுத் தெரிந்துகொள்ள என் தகப்பனார் உயிரோடு இல்லை. என் ஒன்பதாவது வயதிலேயே நான் போகிறேன் என்று ஒருவார்த்தை என்னிடம் கூறாமலேயே போய்விட்டார். அவருக்கு ரொம்பப் பிடித்தது அதனால் புகாரி என்று பெயர் வைத்தார் என்று என் அம்மா ஒற்றை வரியில் தன் விளக்கத்தை முடித்துக்கொண்டார்.

நான் என் பெயருக்கான பொருள் தேடி அலைந்தேன். ரஷ்யாவில் புகாரா என்ற இடத்திலிருந்து முகமது என்ற ஓர் இமாம் அரபு நாடு வந்து நபிகளின் வரலாறு அறிந்து 'ஹதீஸ்' என்னும் குறிப்புகள் தொகுத்தார். நபிகள் வாழ்வில் நடந்ததாகவும் நபிகள் கூறியதாகவும் இவர் தொகுத்த அந்தக் குறிப்புகள், ஆதாரப்பூர்வமானவை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவரை இமாம் முகமது புகாரி என்று அழைப்பார்கள். அதாவது புகாரி என்பது புகாராவிலிருந்து வந்தவர் என்று பொருள் கொண்டது. அது அவருக்குக் குடும்பப் பெயர் ஆனது.

நான் புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனா என்றால் சத்தியமாய் இல்லை.

ஆக, நான் புகாராவிலிருந்து வந்தவனும் அல்ல; புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனும் அல்ல. ஒரு குடும்பப் பெயர் எனக்கு முதல் பெயராய் அமைந்திருக்கிறது. எனவே பொருளை நாமே உருவாக்க வேண்டியதுதான் என்று முடிவுசெய்தேன்.

தமிழகராதியில் புகார் என்ற சொல்லுக்கு அற்புதமான பொருள்கள் இருப்பதைக் கண்டேன்.

ஆற்றுமுகம்
காவிரிப்பூம்பட்டினம்
பனிப்படலம்
மந்தாரம்
மழைபெய்யும் மேகம்
கபிலமரம்
கபிலநிறம்
முறையீடு

இவற்றுக்கு எனக்கு மேலும் விளக்கம் தேவைப்பட்டது. என் பெயருக்கான பொருளாக மிகச் சரியாக எதைக்கொள்ளலாம் என்ற என் அலசலில், சொல்லறிஞர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது. சொல்லறிஞர் என்றதுமே எனக்கு திரு. இராம.கி அவர்களின் நினைவே வரும். என் கேள்வியை அவரிடமே விட்டேன். வழக்கம்போல் அவர் பதிலும் அற்புதமாய் வந்து இறங்கியது. அவருக்கு என் நன்றி. இதோ அவரின் விளக்கம்:

(இந்த விளக்கத்தின் இறுதியில் என் கவிதை ஒன்று என் பெயர் குறித்து இருக்கிறது)

அன்பிற்குரிய புகாரி,

ஆறு என்பது ஓடி வரும் போது அதன் கரைகளில் ஊர்களுக்கு அருகில் இருப்பது ஆற்றுத் துறை.

துறுதல் = நெருங்குதல், அணுகி வருதல்; நாம் வாழும் இடத்திற்கு அருகில் வருகிறது.

அதே ஆறு கடலை அடையும் போது அது கடலுக்குள் நுழைகிறது; அதாவது புகுகிறது; புகல்கிறது; புகருகிறது. புகரும் இடம் புகார். அப்படிப் பார்த்தால் எல்லா ஆறும் புகும் இடம் புகார்தான். (அதனால் தான் புகல் என்ற சொல் port என்ற ஆங்கிலச் சொல்லிற்கு முற்றிலும் இணையானது.) இருப்பினும் சிறப்பாகக் காவிரி புகும் இடத்திற்குப் புகார் என்று சொன்னார்கள். ஆறு கடலில் புகும் போது ஆற்றுப் பக்கம் ஒரு முகமும் கடலின் பக்கம் ஒரு முகமும், கடலிலிற்கும் ஆற்றிற்கும் அருகில் சற்று உள்வாங்கினால் போல் ஏற்படும் கழியில் (backwaters) இன்னொரு வகை முகமும் ஏற்படும்.

ஆற்றில் ஏற்படும் முகம் (இங்கே முகம் என்பது ஆங்கிலத்தில் சொல்லும் face என்னும் பொருள் தான்) ஆற்றுமுகம்; கடலைப் பார்த்தாற்போல் ஏற்படும் முகம் (ஆங்கிலத்தில் sea face என்பார்கள்.) கடல்முகம்; இதைக் கடற்புறம் என்றும் சொல்வது உண்டு. கழியைப் பார்த்தாற்போல் ஏற்படும் முகம் கழிமுகம்.

மேலே உள்ள மூன்றுமே புகாரில் உண்டு; (இந்தக் காலப் புகாரிலும் உண்டு; சற்று சீரழிவுடன். ஆனால் எர்ணாகுளம், கொச்சி போனால் இந்த மூன்றையும் பெரியாற்றின் முகப்பில் காணலாம்.)

காவிரி புகும் பட்டினம் காவிரிப் பூம்பட்டினம் ஆனது; அதற்கும் பூவுக்கும் முடிச்சுப் போடுவது கவிநயம் கருதியே ஒழிய உண்மை அல்ல.

இது போன்ற சொல்லாட்சிகள் இங்கிலாந்து, இரோப்பா போன்ற இடங்களில் ஆற்றின் மேல் உள்ள ஊர், கடலின் மேல் உள்ள ஊர் என்ற பெயர்களால் உண்டு. இங்கு சவுதியில் கூட Yanbu Al bahar (Yanbu on the sea) என்ற ஆட்சி உண்டு.

It is a city through which Kaveri enters the sea. இதுதான் காவிரிப் புகும் பட்டினத்தின் பொருள். நம் வேறாகப் புரிந்து கொண்டு குழம்பிக் கொள்கிறோம்.

இனி அடுத்த மூன்று பொருட்பாடுகள் மேகம், மழை, நீர் பற்றிய தொடர்பு கொண்டவை. இதை அறிய ப.அருளியின் "யா" என்ற பொத்தகத்தைப் படிக்கவேண்டும்.

புய் என்பது துளைக் கருத்து மூலவேர்
புய்+அல்>புயல் = துளைவளியாக ஒழுகுதலையுடைய முகில்

மிகப் பலவாகிய பொத்தல்கள் உடைய ஒரு நீர் நிரம்பிய கலத்தினின்று நீர் வெளிப்பட்டு ஒழுகுதலைப் போலவே மழைநீர்ச் சொரிதலைக் கண்டு அப்படிப் பெயர் ஏற்பட்டது. நாளடைவில் புயல் என்பது முகில், மழை, காற்றோடு அடிக்கும் மழை என்று பொருள் நீட்டம் பெற்றது.

இதே போல நிலத்தின் மேல் நிரம்பிக் கிடக்கும் நெடுநீர்ப் பரப்பில் இருந்து முகந்து கொண்டதால் முகில்

முகு>முகுவு>முகவு>முகவை = நீர் முகக்கும் கருவி முகு+இல்>முகில் = நீரை முகக்கும் மேகம். பின் அது மழையையும் குறித்தது.

முகில் கரிய தோற்றம் கொண்டதால் மை, மழை, மங்குல், மப்பு, மந்து, மஞ்சு, மாரி, மால், மாசு, மேகம், கார், ஆயம் எனப் பல சொற்களைப் பெற்றது.

மய்>மை = கரிய முகில்
மய்>மய்+ஐ>மயை>மழை = கரிய முகில்
மய்>மய்ம்>மம்>மம்பு>மப்பு = கரிய முகில்
மம்+கு>மங்கு>மங்குல் = கரிய முகில்
மய்>மய்ம்>மய்ம்+து>மய்ந்து>மந்து = கரிய முகில்
மய்>மய்ம்>மய்ம்+து>மய்ந்து>மய்ஞ்சு>மஞ்சு = கரிய முகில்
மய்>மாய்>மாய்கு>மாய்கம்>மேகம் = கரிய முகில்

நான் சொல்லிக் கொண்டே போகலாம். விரிவு அஞ்சி நிறுத்திக் கொள்கிறேன்.

மப்பும் மந்தாரமும் என்று சொல்வது இரட்டைக் கிளவி. மந்து+ஆரம் = மந்தாரம் = மேகக் கூட்டம்; மேகம் நிறைந்து நிற்பது; அடைந்து நிற்பது ஆறு கடலை அடைவதைப் போல; அதன் வழியாக நீர் கொட்டுகிறதல்லவா?

மேகப் படலம் பனிப் படலம் போல;

இனி அடுத்த பொருட்பாடு கபில நிறம்.

புகர்தல் என்பது துளையிடுதல் என்று சொன்னேன் அல்லவா? அதனால் புகர்வது புள்ளியிடுவது ஆகும். புகர் என்றால் புள்ளி என்றும் பெயர். புகரப் புகர கருத்தது இன்னும் கருக்கும்; சிவந்தது இன்னும் சிவக்கும்.

எனவே புகர் என்பதற்கு இருண்டது என்ற பொருளும் வந்தது. dark என்ற பொருளில். புகார் என நீண்டு brown நிறத்தைக் குறிக்கும். ஆங்கிலத்திலும் brown என்ற சொல்லின் பிறப்பு இந்தக் கருத்தில் தான். brown என்பது தமிழில் இரண்டு விதமாக உணரப் படும். ஒன்று கருமை கலந்த பொன்மை; இன்னொன்று கருமை கலந்த செம்மை..

கபில நிறம் என்பது இது தான்; brown நிறம். கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்பது போல் கபிலன் என்றால் புகர் நிறத்தான். புலவர் கபிலர் என்றால் என்னமோ, ஏதோ என்று எண்ணிக் கொள்கிறோம். அது அவருடைய நிறக் குறிப்பு. அந்தக் காலப் பெயர்கள் பல இப்படி நிறம் சார்ந்து இருக்கின்றன. கருப்பன், செவத்தான், பொன்னன், வெள்ளையன், நீலன், பச்சையப்பன் போல இது ஒன்று கபிலன்.

இந்தப் புகரிலேயே கொஞ்சம் செம்மை கூடிவிட்டால் அது குரால் எனப் படும் (reddish brown).

தமிழில் இருக்கின்ற நிறப் பெயர்கள் இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.

பெருங்கூச்சல், முறையீடு இரண்டும் வேற்று மொழிச் சொல்லால் கொண்ட பொருட்பாடுகள். இந்த மூலம் பாரசீகமோ, என்னவோ எனக்குத் தெரியாது.

அன்புடன்,
இராம.கி.


ஆக, நான்
கபில நிறத்தவனோ

கூட்டம் கூடி
கருணைக் கும்மியடித்து
மண்ணுக்குத் தேன் பொழியும்
மேக மனத்தவனோ

எண்ணக் குஞ்சுகள்
சின்னச் சிறகினை
விண்ணில் விரிக்க
மெல்லக் கிழிக்கும்
பனிப்படலமோ

ஓடித் திரிந்த
காவிரிப் பெண்ணின்
காதல் புகலிடமோ

ஆற்றலைத் தாகமும்
கடலலை மோகமும்
ஆரத்தழுவ
ஆசையாய் விரிந்துகிடக்கும்
இன்ப மடியோ

கற்பனை நீர் முத்துக்கள்
கணக்கற்று இறைய இறைய
கவிதை இழைகள்
காற்றினில் நிறைய நிறைய
கருத்துகள் எடுத்து வீச
புறப்பட்ட புயலோ

நானறியேன் நானறியேன்
ஆனால்...

புகாரி என்றெவரும்
அன்போடு அழைக்கும்போது
பூரித்துப் போகிறேன்
இந்த
அன்புடன் புகாரி

அதுவொன்றே
போதும் எனக்கு! 


ஒரத்தநாடு - நான் பிறந்த ஊரு


தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

 

வானூறி மழை பொழியும்
.....வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
.....தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
.....கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
.....பசியாறும் உரந்தையில்

நான் பிறந்தேன்.

நெஞ்சிலும் தோளிலும் உரம் மிகுந்தவர்களின் நாடு உரத்தநாடு என்று சொல்வார்கள்

சரபோஜி மகாராஜாதான் ஒரத்தநாட்டை ஆண்ட மன்னர்.

ஒரத்தநாட்டின் ராணி முத்தம்பாள் தன் உயிரைத் தந்து ஒரு புதையல் எடுத்ததாகவும், அதைக்கொண்டு 40 அன்னசந்திரங்களை மன்னர் நிறுவியதாகவும் சொல்வார்கள்.

அதனால் ஒரத்தநாட்டிற்கு முத்தம்பாள் சத்திரம் என்றும் பெயருண்டு. அந்தக் காலத்தில் ஒரத்தநாட்டுச் சத்திரத்தில் வந்தோருக்கெல்லாம் இலவச உணவு உண்டு.

தற்போது அது ஏழை மாணவர்கள் படிப்பதற்கென்று மாற்றப்பட்டுவிட்டது. அதாவது எந்த செலவுமே இல்லாமல் பள்ளிப்படிப்பை ஏழை மாணவர்கள் இங்கே முடிக்கலாம்

சரபோஜி மகாராஜாவின் அரண்மனையில்தான் நான் என் பள்ளிப்படைப்பை முடித்தேன். அரண்மனையின் சுவர் முழுவதும் நிறைத்த மகாராஜாவின் படம் இப்போதும் கம்பீரமாக அங்கே இருக்கிறது. அது பதினோராம் வகுப்புக்கான வகுப்பறையும்கூட

போர்வீரர்கள் பயிற்சிபெற்ற இடம்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம்.

அரணமனைக்கு அருகே தெப்பக்குளம் இருக்கும். மகாராணி நீராடிய இடம்.

ஊரின் இருபக்கமும் இரண்டு பெரும் அரசுத் தோட்டங்கள். கீழத்தோட்டம் மேலத்தோட்டம் என்பார்கள்.

கீழத்தோட்டத்தில் மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை என்று சில பண்ணைகள் உண்டு. எனவே விலங்கினங்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மூன்றாம் ஆண்டு முழுவதும் எங்கள் ஊரில்தான்.

பல ஊர்களிலிருந்தும் பாலும் முட்டையும் கோழியும் வாங்க ஒரத்தநாடு வருவோர் பலருண்டு.

மேலத்தோட்டம் என்பது அருமையான இடம். உயரமாக புற்கள் முதல் பெரும் மரங்கள்வரை வளர்க்கப்படும்.

ஊருக்குச் சற்று வெளியே ஓடுவது கல்யாண ஓடை காவிரியிலிருந்து பிரிந்து பிரிந்து வந்து ஓடும் சிற்றாறு

ஒரத்தநாட்டைச்சுற்றி ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன.

ஒரத்நாடு தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 21 கிலோமீட்டர்கள்தான்.

எனவே என் ஊர் என்று தஞ்சையை அழைத்து என் நான்காம் தொகுப்பில் நான் எழுதிய கவிதை இது:

என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கிவிடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டிவைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?


வானூறி மழைபொழியும்
.......வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
.......தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
.......கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
.......பசியாறும் தஞ்சாவூர்

தேரோடித் தெருமிளிரும்
.......திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
.......மதமோடி உறவாடும்

வேரோடிக் கலைவளரும்
.......விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
.......பொன்னோடும் தஞ்சாவூர்

சேறோடி நெல்விளைத்து
.......ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
.......கண்ணோடிக் கறிசமைத்து

நீரோடி வளர்வாழை
.......நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
.......விண்ணோடும் தஞ்சாவூர்

வாய்மணக்கும் வெத்திலைக்கும்
.......வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
.......கைமணக்கும் பட்டுக்கும்

சேய்மணக்கும் சேலைக்கும்
.......சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
.......தரம்மணக்கும் தஞ்சாவூர்

தலையாட்டும் பொம்மைக்கும்
.......அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
.......சிலைகாட்டும் சோழனுக்கும்

மழைகூட்டும் மண்ணுக்கும்
.......பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
.......எழில்காட்டும் தஞ்சாவூர்

 
 அன்புடன் முகம்மது அலி ஜின்னா  

LinkWithin

Related Posts with Thumbnails