வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி
பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, நாட்களையும் நேரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து சிறிதளவும் மாறிவிடக்கூடாது என்கிற எண்ண ஓட்டம் சில நேரங்களில் பாதிப்புக்கும் உள்ளாகிறது. என்னதான் நம்மை நம் வழியிலேயே வைத்துக் கொண்டு, சமூகத்திற்கு முற்றிலும் பயனுள்ள வகையில் பணிகள், எழுத்துக்கள், பேச்சுக்கள் என்று அனைத்தையும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாலும் நம்மை நோக்கி வருகிற சிற்சில இடையூறுகளைச் சந்திக்காமல் இருக்கவும் முடிவதில்லை. இதனால் நம்முடைய சிந்தனை ஓட்டம் பாதிப்படைவதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் உலகில் வாழ்கிற குறுகிய இக்காலக்கட்டத்தில் செலவு செய்கிற செல்வத்திற்கு மாத்திரமல்ல; செலவு செய்கிற நேரம், உழைப்பு, உதவிகள் என்று எல்லாவற்றிற்கும் வல்ல இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே என்கிற கவலை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருந்தே ஆக வேண்டுமல்லவா!
அதனால்தான் ஒழுக்கம், கல்வி என்பதோடு இறையச்சம், தொழுகை, நற்பண்புகள், நற்செயல்கள் என ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல முஸ்லிமாக வாழவேண்டும் என்பதை நாம் கடமையாக எண்ணுகிறோம். இதே சிந்தனையில்தான் சமூகப் பணி, அரசியல் என்று வருகிறபோது கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழிநின்று தாய்ச்சபை முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதை அந்தக் கடமையின் அங்கமாகக் கருதி பணியாற்றுகிறோம்.
நடைமுறை அரசியல்பாணி என்பது சில நேரங்களில் நமக்கு கசப்புணர்வாகத் தென்படுவதையும் இல்லை எனச் சொல்ல முடியாது. அப்படி என்ன கசப்பு? நமது சமுதாயத்தில் நாங்களும் பணியாற்றுகிறோம் எனச் சொல்லி புதுப்புது அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டு தனித்தனி அமைப்புகளாகச் செயல்படுபவர்களே நம்மைச் சீண்டுவதும், கீழான விமர்சனங்கள் செய்வதும், தவறான தகவல்களைத் தந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுமான காரியங்களில் ஈடுபடுவதைத்தான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விழைகிறேன். நம்மைச் சீண்டுவதையோ, கீழான விமர்சனங்கள் செய்வதையோ நாம் பொருட் படுத்துவதுமில்லை; அதற்காக பதில் சொல்ல வேண்டுமே என்று நேரம் ஒதுக்கி தரம் தாழ்ந்து விடுவதுமில்லை. ஆனால், சமுதாயத்திற்குத் தவறான தகவல்கள் தந்து குழப்பங்களை உருவாக்குகிறபோது நாம் அமைதியாக இருந்துவிடவும் கூடாது. காரணம், மக்களுக்குத் தெளிவான பாதையைக் காட்டித் தந்து, அரசியல் தளத்தில் சமுதாயத்தின் கண்ணியத்தை நிலைநாட்டுவது நமது கடமை என நினைக்கிறோம். அந்தப் பார்வையில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டு நம்முடைய இதழில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என எண்ணுகிறோம்.
