Showing posts with label சகிப்புத் தன்மை. Show all posts
Showing posts with label சகிப்புத் தன்மை. Show all posts

Wednesday, October 17, 2012

மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.

மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.
பகை கொண்ட நெஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர்கள் எந்நிலையிலும் அமைதி பெறுவதில்லை. இத்தகையோர் வெளியில் அமைதியாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்றவர்கள். இவர்கள் எந்த வேளையில் எதைச் செய்வார்கள் என்பதை யாரலும் கணித்துக் கூற முடியாது.

பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள் மென்மை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகளை இழந்துவிடுகின்றனர். மேலும் இவர்களின் செயல்களைத் தீர்மானிப்பவர்கள் இவர்களது எதிரிகளே! இவர்களின் உறக்கம், உணவு, மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றை முடிவு செய்பவர்களும் இவர்களது எதிரிகளே. எப்போதும் எதிரிகளையே எண்னிக் கொண்டு இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். தமது வாழ்க்கையையே நரகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல் ஆகிய பண்புகளை உடையோர் அமைதியின் இருப்பிடங்களாக விளங்குகின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும், மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் உரியவர்களாகவும் திகழ்வார்கள். “ (தண்டிக்கும்) சக்தி  பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : பைஹகி)

மன்னிப்பதால் கண்னியம் உயருமே தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். மன்னிப்பவர்கள் பகையை வெல்கிறார்கள். தீமைகளுக்குப் பதிலாக நன்மைகளையே செய்து எதிரிகளையும் நணபர்களாக  ஆக்கிக் கொள்கிறார்கள்.

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.(திருக்குர் ஆன் 41: 34-35 )

நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அவமானங்களும் நம்முள் பகை உணர்வைத் தோற்றுவிக்கின்றன.

அநீதிகளை அகற்ற உரிய வழிமுறைகளில் போராடலாம். கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது.

அவமானங்களைப் பொறுத்தவரையில் பல கற்பனையானவை; சில நாமாகவே தேடிக் கொண்டவை. இன்னும் சில எந்தக் கொட்ட நோக்கமும் இன்றியே இழைக்கப்பட்டவை இத்தகைய ‘அவமானங்களை’ பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை வேண்டுமென்றே நாம் அவமானப்படுத்தப்பட்டாலும் அதனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இத்தகைய இழி செயலைச் செய்பவர்கள் பொறமை, விரக்தி, ஆணவம் ஆகிய உணர்வுகளுக்குப் பலியானவர்கள். இவர்கள் உண்மையில் நம்மை அவமானப்படுத்தவில்லை. தம்மைத்தாமே அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு இழைக்கப்பட்ட அவமரியதைகளை ஒரு சவலாக எடுத்துக் கொண்டு நமது நிலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சி செய்யலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails