பெரும் பாலும் முஸ்லிம் மக்கள் ரமலான் மாதம் வந்து விட்டால் தமது ஊரில் இருந்து நோன்பு வைக்கவே விரும்புவார்கள்.காரணம்; தமது வசதிக்கு தக்க நோம்புக்கு உண்ண, உறங்க ஏற்பாடு வச்சுக்கலாம். அதனாலதான்.
மேலப்பாளையத்து மக்களும் அந்த மாதிரி அவா கொண்டவர்கள் தான்.இத சொல்லும்போது மேலப்பாளையம் மக்கள் வாய்க்கு ருசியா,பல வகை உணவு வகைகளைக் கொண்டு தான் நோன்பு வைப்பாங்களோ? என்று முடிவுக்கு வந்துடாதீங்க.
ரொம்ப ரொம்ப சாதாரணமான வகை உணவுகளே நோன்புக்கும் இருக்கும்.
அரிசிச்சோறுடன்,வார நாட்களை பிரித்து இறைச்சி,மீன்,முட்டை,பருப்பு ஏன் துவையல் புளியாணமும், சோறும் உண்டே நோன்பு வைக்கும் மக்கள் கூட இருக்கிறார்கள்.
"நெய்யும் தொழிலே செய்யும் தொழில்" என்று இருந்த காலத்தில் அதி காலை ஸகர் வேளைகளில் பழைய சோறை வெங்காயம், பச்ச மிளகாயைக் கடித்துக்கொண்டு உண்டுமுடித்து நோன்பு வைப்பார்கள்.
மறுநாள் காலை வழக்கம் போல் “காக்குழியில்” தறி நெய்ய இறங்கி ஒரு "சாம்போ"......."ஒன்னரை சாம்போ" நெய்து முடிப்பார்கள். மற்ற மாதங்களில் எப்படி தங்கள் வாழ்க்கை நடை முறை இருக்குமோ அவ்வாறே நோன்பு காலங்களிலும்தொடர்ந்தார்கள்.இதெல்லாம் அக்கம் பக்க வீடுகளில் சின்னஞ்சிறிய வயதுக் காலங்களில் பார்த்திருக்கிறேன்.
ரமலான் மாதத்தில் என்னுடைய அமீரக மற்றும் அரபக நண்பர்களிடம் ஏதாவது விஸா நடைமுறைகள் பற்றிக் கேட்டால் “இப்போ இங்கே ரமலான் மாதம். பாதி நாள் வேலை இருக்காது.பெருநா கழிச்சித்தான் அதெல்லாம் நடக்கும்,அப்படி இல்லேன்னா கொஞ்சம் மெதுவா இருக்கும்” இப்படி ஏதாவது ஒரு தகவல் தருவார்கள்.
நான் தான் அரபு நாடு வந்து இத பாக்கலியே.அதனால்அவங்க சொல்றது சரியா இருக்குமோன்னு நம்பிக்கிடுவேன்..
