- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்இரகசியம் பேணுதல்:-
நட்பும், அன்பும் நீடிக்க நெருங்கிப் பழகுகின்றவர்களின் இரகசியங்களைப் பேணுவது அவசியமாகும். இரகசியங்களை அம்பலப்படுத்துபவன் மாணத்தை வாங்குபவன் என்று அறிந்துவிட்டால் யாரும் நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள். தோழமையுடன், நட்புணர்வுடன் கதைக்க முற்படமாட்டார்கள். இத்தகையவர்கள் அனாவசியமாக அடுத்தவர்களின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும்.
அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமீ எனும் அறிஞர் சகோதரர்களின் இரகசியங்களைப் பேணுவது என்பது நட்புறவின் ஒழுங்குகளில் உள்ளதாகும் என்று குறிப்பிடுகின்றார்.
இவ்வாறே மற்றும் சில அறிஞர்கள் நல்லவர்களின் உள்ளங்கள் இரகசியங்களின் புதைகுழிகள் என்று கூறுவர்.
இரகசியங்கள் சிலரிடம் சொல்லப்பட்டால் அவர்களது உள்ளங்கள் எனும் கப்ருகளுக்குள் அவை அடக்கப்பட்டுவிடும் மீண்டும் அவை வெளியே வராது என்று குறிப்பிடுகின்றனர்.
உமர்(ரழி) அவர்களது மகள் ஹப்ஸா(ث) அவர்களை உனைஸ் இப்னு குதாபா(ரழி) மணந்நிருந்தார். இவர் ஒரு பத்ர் ஸஹாபியாவார்.
இவர் மரணித்த பின்னர் உமர்(ரழி) அவர்கள், உஸ்மான்(ரழி) அவர்களைச் சந்தித்து “நீங்கள் விரும்பினால் ஹப்ஸாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்!” என்று கூறினார்கள்.
உஸ்மான்(ரழி) அவர்கள் இது குறித்து யோசித்து முடிவு சொல்வதாகக் கூறி விட்டு சில நாட்களின் பின்னர் “தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை!” என்று கூறினார்கள்.