Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Thursday, November 25, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 8

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே தியாகத் திருநாளை கொண்டாடி விட்டு வந்திருக்கும் நம் அனைவருக்கும் குர்ஆனையும், இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையையும் பின்பற்றி நடக்கவும், மார்க்கத்திற்கு முரணான அனைத்து வழிமுறைகளையும் விட்டு, ஹலால், ஹராமை பேணி மறுமை வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இம்மையில் வாழ்வதற்கு வல்ல அல்லாஹ் உறுதியான ஈமானை நமக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்த(துஆச் செய்த)வனாக என்னுடைய கட்டுரையை தொடங்குகிறேன்.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.(அல்குர்ஆன் :2:208)

எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன் : 2:201)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் தாம் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் : 2:82)

இந்த தொடரிலும் சகோதரிகளைப்பற்றியே தொடர்ந்து வருவதால் சகோதரிகள் கவனமாக படியுங்கள். சில சகோதரிகள் கடன் எனும் கடலில் தனது கணவனை தள்ளி விட்டு கவலைப்படாமல் இருந்த நிகழ்ச்சிகளையும், அடுத்து கடன் எனும் கடலில் கணவனை விழாமல் காத்துக்கொண்ட பெண்மனியைப்பற்றியும் பார்ப்போம்.

கடன் எனும் கடலில் தள்ளிய சகோதரிகள்!

கணவனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தாலோ தன்னிடம் உள்ள நகைகளை (அசையாத சொத்துக்கள் நிலங்களாக இருக்கும், இன்று அதிகமாக அசையும் சொத்துக்களாக இருப்பது தங்க நகைகள்தான்) கணவனின் கஷ்டத்திற்கு கொடுத்து உதவாமல் கணவன் வெளியில் உறவினர்களிடம் கடன்கள் வாங்கினாலும் பார்த்துக்கொண்டு கடன் உள்ளதே என்ற பொய் கவலையுடன் தன்னிடம் உள்ள நகைகளை மட்டும் பாதுகாத்துக்கொண்டு நடமாடும் சகோதரிகளைப் பற்றி என்ன சொல்வது? (கணவன் வாங்கி கொடுத்த நகைகளையும், சொத்துக்களையும் கொடுத்து உதவி செய்யவே மறுக்கிறார்கள்).

இப்படி நடந்து கொள்ளும் சகோதரிகளே! கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். கணவனுக்கு அதிக பொருளாதாரம் கிடைத்தால் யாருக்கு தரப்போகிறார்? கணவன் கடனோடு நடமாடுவதை பார்த்துக்கொண்டு இருப்பது நிம்மதியா? அல்லது போலி கௌரவத்திற்காக கணவனுக்கு உதவாமல் நகைகளோடு தாங்கள் நடமாடுவது நிம்மதியா? எது நல்லது?

ஊதாரி கணவனுக்கு கொடுத்து ஏமாந்த சகோதரிகள்!

கணவன் நல்லவனா? கெட்டவனா? என்பது மனைவிக்கு தெரியும். தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருக்கும் கணவனுக்கு உதவி செய்து சொத்துக்களை இழக்கலாமா? என்று சில சகோதரிகளின் கேள்வியாக இருக்கிற,து. ஒரு தடவை உதவி செய்து பயனற்ற வழியில் செலவு செய்கிறார், மீண்டும் உதவி செய்கிறார். இப்படியே எல்லாவற்றையும் இழந்த சகோதரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட கணவர்களின் விஷயத்தில் தெளிவான முடிவு எடுத்து, இருக்கும் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதில் கவனம் எடுப்பது சிறந்தது. தொடர்ந்து ஏமாறுவது புத்திசாலித்தனம் இல்லை.

பாலைவனத்தில் பிடித்து தள்ளிவிடும் சகோதரிகள்!

கணவன் வெளிநாட்டிலேயே தொடர்ந்து இருந்து பிறகு சில காலம் கழித்து உள்நாட்டில் தொழில் வைத்து தங்கி விடலாம் என்று யோசனை செய்து ஊரில் தங்கினாலும் அல்லது முடிவெடுத்தாலும் உடனடியாக எதிர்ப்பு மனைவியிடம் இருந்து வருவதை காண முடிகிறது. உடனே கணவனை வெறுக்கத் தொடங்கி விடுகிறார்கள். என்ன காரணம் மாதா மாதம் பணம் வந்து கொண்டு இருந்தது. வித விதமான சேலைகள் வாங்கி, புதிய புதிய நகைகள் செய்து, தினமும் தொலைக்காட்சியில் வரும் சமையலை செய்து பார்த்துக்கொண்டும், மற்ற ஆடம்பர செலவுகளும் செய்து வந்த நிலை இனி பறி போய் விடுமே, என்ற மிகப்பெரிய மனக்கவலைதான் காரணமாக இருக்கிறது.

கணவன் ஊரோடு வந்து தங்கி விட்டால் முதலில் அடிபட்டு போவது இவர்களின் ஆடம்பர வாழ்க்கைதான். மிகச் சிக்கனமாக வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற பலவிதமான கவலை இவர்களை வாட்ட ஆரம்பித்து விடுகிறது. இவர்களின் நினைப்பு என்ன ஒரு வருடம், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கணவன் பெட்டி நிறைய துணிமனிகளும், நகைகளும் கொண்டு வர வேண்டும். இதைப்பார்த்து மனமகிழ்ச்சி அடைய வேண்டும். இதை தவிர வாழ்வில் வேறு ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தை சகோதரிகளிடம் காண முடிகிறது. அதே நேரத்தில் கணவன் கடனாளியாக வருகிறானே என்ற அக்கரையெல்லாம் இவர்களிடம் இருக்கிறதா? என்றால் இல்லை என்று சொல்லி விடலாம். வருடா வருடம் வரும்பொழுது பெட்டியுடன் கடனும் சேர்ந்து வருகிறது என்பதை உணராமல் இருக்கிறார்கள். சகோதரிகளே! சிந்தித்து தெளிவுபெற்று கணவனுக்கு உறுதுணையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

காலமெல்லாம் கணவனை கடனோடு,
பாலவன வெயிலில் போராட வைத்த சகோதரிகள்!


ஒரு சகோதரருக்கு இருப்பதற்கு வீடு இருக்கிறது. ஆனால் ஓட்டு வீடாக இருப்பது மனைவிக்கு பிடிக்கவில்லை. வீட்டை இடித்துவிட்டு புதுவீடு கட்டியே ஆக வேண்டும் என்ற தீராத லட்சியம் கணவரை தொந்தரவு செய்கிறார். இவரின் வருமானத்தில் உடனடியாக வீடு கட்ட முடியாது. மனைவியிடம் சில காலம் ஆகும் என்கிறார். ஆனால் கணவனின் பேச்சை மீறி கூட்டுறவு வங்கியில் வீட்டுக்கடன், கணவனையும் அவருடைய NRE கணக்கு உள்ள வங்கியில் கடன் வாங்கி மாடி வீட்டை கட்டி முடித்து விட்டார். சரி வீடு கட்டியாகி விட்டது. வீட்டில் நிம்மதியாக இருந்து கடன்களை அடைப்பதற்கு முயற்சி செய்வோம் என்ற எண்ணம் வந்ததா? அதுதான் இல்லை. அடுத்த முறையீடு ஆரம்பமாகிறது...

என்ன அது, விரைவில் நகைகள் சேர்க்க வேண்டுமாம். கணவனின் பதில்... வீடு கட்டிய கடன்கள் அடைந்த பிறகு நகைகள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் அந்த சகோதரி சொல்வதை பாருங்கள். கடன் இருந்து கொண்டுதான் இருக்கும் அதற்காக நகைகள் வாங்காமல் இருக்க முடியுமா? என்ற அழகான பதிலை தருகிறார். கணவனோ என் வாழ்நாளில் இந்த கடன்கள் அடைந்து விடுமா? என்ற சந்தேகத்தில் புலம்பிக் கொண்டு நிம்மதியற்று தவிக்கிறார் வளைகுடாவில்.

சகோதரிகளே! கடன் வாங்கித்தான் வீட்டை கட்ட வேண்டும், நகைகள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபடுங்கள். தங்களின் நிர்பந்தத்திற்காக கடன் வாங்கிய தங்கள் கணவர்தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி நிம்மதியற்று வாழ்வார். இது நியாயமா?

இன்னொரு சகோதரியைப்பற்றி பார்ப்போம் இவருக்கு எவ்வளவு பணம் அனுப்பினாலும் பண பற்றாக்குறை. அடுத்த மாதம் பணம் கூட வேண்டும் என்கிறார். பண பற்றாக்குறைக்கு வித விதமாக உணவு செய்து சாப்பிடுவது காரணம் இல்லை. இவருக்கு ஒரு மன வியாதி என்ன தெரியுமா? ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட உடனடியாக டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். உள்ளுர் டாக்டரிடம் காண்பித்தால் சின்ன சின்ன நோய்கள் குணமாகாது. அடுத்த ஊரில் உள்ள பீஸ் அதிகமாக வாங்கும் டாக்டரிடம் (கைராசி டாக்டர்) காண்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் சாதாரண தலைவலி, வயிற்றுவலி குணமடையும். இவருக்கு வந்தது உண்மையில் நோயா? இல்லை மன நோய்.

சாதாரண தலைவலியைக்கூட பெரிதாக போட்டு குழப்பி கொள்வதால் கண்ட பலன் : இவருக்கு டாக்டர் தரும் மருந்தால் பக்க விளைவு நோய் லாபம், டாக்டருக்கோ ஏதாவது ஒன்றில் குணமாகட்டும் என்ற மருந்து பட்டியலால் (மளிகை கடை பட்டியல் போல்) லாபம், கணவருக்கோ கடனாளி என்ற பெயர் லாபம்.

கணவர் தனக்கு உடம்புக்கு முடியாமல் போனாலும் உடனே டாக்டரிடம் போகாமல் மருந்துக்கடையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு, பக்குவமாக இருந்து செலவு அதிகமாகி விடுமே என்று முடிந்தவரை டாக்டரிடம் காண்பிப்பதை தவிர்த்துக்கொள்கிறார். கஷ்டப்படும் கணவரே சிக்கனமாக இருந்து தவிர்த்துக் கொள்ளும்பொழுது நிழலில் இருக்கும் மனைவி எப்படி இருக்க வேண்டும். (அதற்காக டாக்டரிடம் காட்டாமல் இருந்து விடாதீர்கள்).

இந்த நேரத்தில் நம் ஊர் வாடகை வாகன ஓட்டி சொன்னதை நினைவு கூர்கிறேன்: நம் ஊரைச்சேர்ந்த சகோதரிகள் திருச்சிக்கு சென்று துணிமனிகள் எடுத்துவிட்டு திரும்பி வரும் வழியில் தொந்தரவு தரும் பல்லை எடுப்பதற்கு தஞ்சை தனியார் பல் மருத்துவ மனைக்கு சென்று இருக்கிறார்கள். (முன்கூட்டியே தொலைபேசி மூலம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள்). மருத்துவரின் பீஸ் எவ்வளவு தெரியுமா? 3ஆயிரமாம், மேலும் அங்குள்ள நர்ஸ்க்கு 200ரூபாய் கொடுத்தார்களாம். வாகன ஓட்டி அவர்களிடம் கேட்டது ஏன் பட்டுக்கோட்டையில் மருத்துவர் இல்லையா? என்றதற்கு அங்கெல்லாம் சரியான முறையில் எடுக்க மாட்டார்கள் என்று சொன்னார்களாம். அவர் சொன்னது: காக்கா பட்டுக்கோட்டையில் 300ரூபாய்க்குள் இந்த பல்லை எடுத்து விடலாம். முள்ளங்கி பெற்றது போல் பணத்தை எண்ணி கொடுக்கும்பொழுது எனக்கு வயிற்றில் கலக்கம் ஏற்பட்டது என்றார். இதில் வருந்த தக்க விஷயம் என்னவென்றால் அந்த வாகன ஓட்டி காலையில் திருச்சிக்கு புறப்பட்டு அங்கு மதியம் வரை அவர்கள் வாங்கிய பொருட்களை வேலைக்காரனை போல் சுமந்து கொண்டு வந்து சேர்த்து பின் தஞ்சாவூர் வந்து பல் மருத்துவம் செய்து விட்டு பிறகு இரவு திரும்பி ஊர் வந்து வீட்டுக்கு விடும்பொழுது எனக்கு 10ரூபாய் கொடுத்தார்கள் காக்கா நான் ஏன் இதை கொடுக்கிறீர்கள் இதையும் தாங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று திருப்பி கொடுத்து விட்டேன் என்று சொன்னார். டாக்டருக்கு கொடுக்க மனம் வருகிறது, அங்குள்ள நர்ஸ்க்கும் கொடுக்க மனம் வருகிறது. காலையிலிருந்து கஷ்டப்பட்ட வாகன ஓட்டிக்கு பணம் கொடுக்க மனம் வரவில்லை. (அவரின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்). (இந்த பணத்தை சம்பாரிக்க இவர்கள் வீட்டு ஆண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்).

வீண் விரயத்தை விரும்பக்கூடிய சகோதரிகளே! எந்தக் காரியத்திலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். டாக்டர் தொழில் என்பது புனிதம் என்று கூறிய காலம் போய் விட்டது. லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து படித்து விட்டு வந்து போட்ட பணத்தை எடுக்க வேண்டும் (விதி விலக்காக நல்ல டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்) என்ற வியாபார நோக்கில் சேவை மனப்பான்மை அடிபட்டு பணம் ஒன்றே குறிக்கோளாகி விட்ட உலகத்தில் இருக்கிறோம் என்பதையும், தங்கள் கணவர் படும் கஷ்டங்களையும் மனதில் நினைத்து கைமருந்து சாப்பிட்டால் குணமாகும் என்ற நோய்களுக்கெல்லாம் மருத்துவரிடம் காண்பித்து வீண் விரயம் செய்யாமல், மனதை திடப்படுத்திக் கொண்டு சிக்கனமாக இருந்து கணவனை கடன் என்னும் கடலில் மூழ்க விடாமல் பார்த்துக்கொண்டால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

கடன் எனும் நிழல் கூட தன் மீதும் கணவன் மீதும் விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி!

கணவர் கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தை வீண் விரயம் செய்யாமல் எப்படியெல்லாம் சிக்கனமாக செலவு செய்ய முடியுமோ அவ்வாறெல்லாம் சிக்கனமாக இருந்து கணவர் ஊர் செல்லும்பொழுதெல்லாம், கடன் வாங்க விடாமல் தாம் சேமித்து வைத்த பணத்தை கையில் கொண்டு வந்து கொடுத்து உங்கள் பணம் செலவழித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். தானும் கடன் வாங்காமல், கணவனையும் கடன் வாங்கக்கூடாது என்று நிர்பந்தித்து வாழும் மனைவி. இவரைப்போல் சில பேர் இருக்கலாம். (எனக்குத் தெரிந்து இப்படி கடனே இல்லாமல், கணவரையும் கடன் வாங்க விடாமல் வாழ்பவர் என்னுடைய மனைவிதான் – அல்ஹம்துலில்லாஹ்!).

சகோதரிகளே! தாங்களும் இப்படி சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். சிக்கனத்தை கடைபிடித்து தாங்களும் கடன் வாங்காமல் தங்கள் கணவரையும் கடனுக்குள் விழுவதை தடுத்து வாழ ஆரம்பித்தால் தங்களுக்கும் - கணவருக்கும் மன நிம்மதி அளிக்கும்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- S. அலாவுதீன்
நன்றி : http://adirainirubar.blogspot.com/2010/11/8.htmlகடன் வாங்கலாம் வாங்க - 8

LinkWithin

Related Posts with Thumbnails