Sunday, January 31, 2010

காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (3)

ஜவஹர்லால் நெஹ்ருவும் காயிதே ஆஸாமும்
[காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் உடல் ரீதியாக பலவீனமானவராக இருந்தாலும், இரும்புப் போல் திடமான மனதைக் கொண்டவர். அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றால், எப்போதும் தன்னந்தனியே, பின்னிரவில் மிகச் சுத்தமான அவரது அறையில் அளந்தெடுத்தாற்போல் அடி வைத்து, மேலும் கீழும் நடந்து கொண்டேயிருப்பார்.மிகக் குறைவாக சாப்பிடுபவர்கள், அவர்களைக் காட்டிலும் மிக அதிகம் சாப்பிடுவர்களைப் பார்த்து ஒன்று பொறாமைப் படுவார்கள் அல்லது அவர்கள் சிறப்பாகச் சாப்பிடுவதைப் பார்த்துச் சந்தோசப்படுவார்கள். காயிதே ஆஸாம் இரண்டாவது வகையைச் சேர்ந்த குறைவாகச் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அதனால் தான் மளிகைப் பொருட்களும் இறைச்சியும் வாங்கியது போக வெளிப்படையாக தெரியக்கூடிய மிச்சப்பணத்தை நாங்கள் என்ன செய்தோம் என்று அவர் எப்போதும் கேட்டதே கிடையாது. ]
நான் இதை எழுதத் தொடங்கிய சமயத்தில், கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பாலுக்கு உயரமான மனிதர்கள் என்றால் பிடித்திருந்ததைப்போல், காயிதே ஆஸாம் திடகாத்திரத்தை விரும்பினார் என்று என்னுள் தோன்றியது. பலம் - காயிதே ஆஸாமிடம் வேலை பார்த்த எல்லோருமே இந்த தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அசாத் இருந்த சமயத்தில், காயிதேவிற்கு வேலை பார்த்தவர்கள் எல்லோரும் பார்ப்பதற்கு அழகாகவும் திடமானவர்களாவும் இருந்தார்கள். அவருடைய காரியதரிசி மட்லூம் அழகாகவும் திடமான உடலைக் கொண்டவராகவும் இருந்தது போலத் தான், அவருடைய வண்டி ஓட்டுநர்களும் காவல்காரர்களும் இருந்தார்கள். காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் உடல் ரீதியாக பலவீனமானவராக இருந்தாலும், இரும்புப் போல் திடமான மனதைக் கொண்டவர். பலவீனமானவர்களோடு எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ள அவர் விரும்பாததை, நாம் உளவியல் ரீதியாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். எவர் ஒருவரும் தாம் நேசிப்பதை மிகவும் அக்கறையோடு பாத்துக்கொள்வார்கள். காயிதே ஆஸாமும் இதில் வேறுபட்டவர் அல்ல அவருக்கான வேலை பார்ப்பவர்கள், மிக நேர்த்தியாக வேலைக்கு வரவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

பட்டான் காவலாளி, எப்போதும் அவனுடைய பாரம்பரிய உடையில் தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அசாத் பஞ்சாபியில்லை என்றாலும், ஒரு ஆணை உயரமாகவும், கம்பீரமாகவும் வெளிப்படுத்தக் கூடிய அந்தத் தலைப்பாகையை அணிய வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்பட்டதும் உண்டு. அவன் தலைப்பாகையை ஒழுங்காகவும் அழகாகவும் கட்டியிருந்தால், சில சமயங்களில் அன்பளிப்பாகக் காசு பெறுவதற்கு சாத்தியமும் இருந்தது.இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும்போது, காயிதே ஆஸாமின் திடமான மனதின் ரகசியம் அவருடைய உடல்ரீதியான குறையை அடிப்படையாகக் கொண்டதுதான் என்றே தோன்றுகிறது. வலுவற்ற உடல் பலவீனத்தை அவர் எப்போதும் பிரதிபலித்தது. காயிதே ஆஸாம் மிகக் குறைவாகவே உணவு உட்கொள்ளக்கூடியவர் என்று அசாத் என்னிடம் தெரிவித்தான். ''அவர் அத்தனை குறைவாக உண்பதைப் பார்க்கும் போது, எது அவரை உயிரோடு வைத்திருக்கிறது என்று நான் வியந்தது. உண்டு. ஒரு வேளை நானும் அது போல் மிகக் குறைந்த அளவே உணவு உட்கொள்ள வேண்டியிருந்தால், ஒரு சில நாட்களில் கரைந்து காணாமல் போய்விடுவேன்.
இளம் வயதில் ஜின்னாவும் அவர் துணைவியாரும்
ஒவ்வொரு நாளும் சமையல் அறையில் நான்கைந்து கோழிகள் சமைக்கப்படும் என்றாலும், ஜின்னா சாகிப் உட்கொள்ளுவது எல்லாம் ஒரு பெரிய கிண்ணத்தில் சூப் மட்டுமே. ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய அளவில் புத்தம் புதிய பழ வகைகள் அவருடைய வீட்டிற்கு வந்தாலும், அதை அவர் எப்போதும் உட்கொண்டதே கிடையாது. எல்லாமே வேலைக்காரர்கள் வயிற்றுக்குள் தான் சென்றது. ஒவ்வொரு நாளும் படுக்கப் போவதற்கு முன் அடுத்த நாள் என்ன என்ன சமைக்கப்படவேண்டும் என்று ஒரு பட்டியலில் இருந்து சொல்வார். பொருட்கள் வாங்குவதற்கு என்னிடம் நூறு ரூபாய் நோட்டு கொடுக்கப்படும்''''ஒவ்வொரு நாளும் நூறு ரூபாயா?'' என்று ஆச்சர்யத்தோடு கேட்டேன்.
''ஆமாம் ஐயா, நூறு ரூபாய் தான். காயிதே அஸாம் அதற்கான கணக்கை எப்போதும் கேட்டதே கிடையாது. மிச்சப்பணத்தை எல்லாம் வேலை பார்க்கும் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம். சில நாட்களில் அது முப்பது ரூபாயாக இருக்கும். வேறு சில நாட்களில் நாற்பது. ஏன் சில சமயங்களில் அறுபது எழுபதாகக் கூட இருக்கும். நிச்சயமாக இதைப் பற்றி அவருக்குத் தெரியும் என்றாலும் எப்போதும் கணக்குக் கேட்டதே கிடையாது. ஆனால் மிஸ். ஜின்னா வேறு மாதிரியானவர். பொருட்களுக்குச் கொடுக்கும் விலையைக் காட்டிலும் அதிகமாகக் கணக்கு கொடுக்கிறோம் என்றும், நாங்கள் எல்லோரும் திருடர்கள் என்றும் அடிக்கடி சொல்வர். அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்போம். ஏனெனில் இது போன்ற விசயங்களில் சாகிப் அக்கறை காட்டுவதில்லை என்று எங்களுக்குத் தெரியும். அத்தகைய சமயங்களில் அவருடைய சகோதரியிடம் ''இட்ஸ் ஆல்ரைட்... இட்ஸ் ஆல்ரைட்...'' என்பார். இருந்தாலும் ஒரு சமயத்தில், அது ''ஆல்ரைட்டாக'' மாற முடியாமல் போக, மிஸ். ஜின்னா சமையற்காரர்கள் இருவரை வேலையை விட்டு வெளியேற்றும் அளவிற்கு அவர்கள் மீது கோபம் கொண்டார். அதில் ஒருவன் பிரத்தியேகமாக ஐரோப்பிய உணவுகள் சமைப்பதற்காகவே இருக்க, மற்றொருவன் இந்திய உணவுகளுக்குப் பொறுப்பாளனாக இருந்தான். பின்னவன் எப்போதும் வேலை எதுவும் இல்லாமல் இருப்பான் - சில சமயங்களில் மாதக் கணக்கில்கூட. ஆனால் அவனுடைய முறை வரும்போது சுறுசுறுப்பாகக் காரியத்தில் குதிப்பான்.
காயிதே ஆஸாம் உண்மையில் இந்திய உணவுகளைப் பெரிதாக விரும்பியது கிடையாது. இருந்தாலும் அவருடைய சகோதரி விஷயங்களில் அவர் எப்போதும் தலையிடாததால், இரண்டு சமையல்காரர்களும் வேலையை விட்டு நீக்கப்பட்ட போது அமைதியாகவே இருந்தார். உணவு உண்பதற்காக அவர்கள் இருவரும் பல நாட்கள் தாஜ் ஹோட்டலுக்குச் சென்று வந்தார்கள். எங்களைப் பொறுத்தவரை இதனால் நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். புது சமையல்காரர்களைத் தேடுகிறோம் என்று நாங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு, சௌகரியமாக நகர வீதிகளில் வெறுமனே சுற்றிவிட்டு, வேலைக்குத் தகுதியான ஆட்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று திரும்பி வந்தவுடன் எங்களது அறிக்கையைச் சமர்ப்பிப்போம். இறுதியில் மிஸ். ஜின்னா அந்த இரண்டு பழைய சமையல்காரர்களையே திரும்ப வருமாறு அழைத்தார்.
மிகக் குறைவாக சாப்பிடுபவர்கள், அவர்களைக் காட்டிலும் மிக அதிகம் சாப்பிடுவர்களைப் பார்த்து ஒன்று பொறாமைப் படுவார்கள் அல்லது அவர்கள் சிறப்பாகச் சாப்பிடுவதைப் பார்த்துச் சந்தோசப்படுவார்கள். காயிதே ஆஸாம் இரண்டாவது வகையைச் சேர்ந்த குறைவாகச் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அதனால் தான் மளிகைப் பொருட்களும் இறைச்சியும் வாங்கியது போக வெளிப்படையாக தெரியக்கூடிய மிச்சப்பணத்தை நாங்கள் என்ன செய்தோம் என்று அவர் எப்போதும் கேட்டதே கிடையாது.
நான் உன்னிடம் ஒரு கதை சொல்கிறேன். அது 1939ம் வருடம் கடல் அலைகள் உற்சாகமாய்க் கரை மீது மோதிக்கொண்டிருக்க, நான் காயிதே ஆஸாமை அவருடைய வெள்ளை பேக்கார்ட் வண்டியில் மேரின் டிரைவில் மிக மென்மையாக ஓட்டிக்கொண்டிருந்தேன். காற்றில் சற்றே சில்லிட்ட தன்மை இருந்தது. ஜின்னா சாகிப் மிக நல்ல மனநிலையில் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இன்னும் ஒரு சில நாட்களில் வரப்போகும் ஈத் பண்டிகையைப் பற்றிச் சொல்வதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தேன்.
பின் பகுதியைப் பார்க்கக்கூடிய கண்ணாடியில், அவரைப்பார்க்க முடிந்தது. அவருடைய உதட்டில் மிக மெல்லிய புன்னகை தோன்றியது. நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அவர் எப்போதும் பிடித்துக் கொண்டிருக்கும் சிகார் அவருடைய உதடுகளுக்கு இடையில் இருந்தது. இறுதியாக அவர், ''நல்லது, நல்லது நீ திடீரென்று ஏன் முஸல்மானாக மாறிவிட்டாய்... கொஞ்சநாட்களுக்கு கொஞ்சம் போல் இந்துவாக இருப்பதற்கு முயற்சி செய்'' என்று பேசினார். நான்கு நாட்களுக்கு முன்னர்தான் காயிதே எனக்கு இருநூறு ரூபாய் நோட்டை அன்பளிப்பாகக், கொடுத்து என்னுள் இருந்த முஸல்மானைச் சந்தோஷப்படுத்தினார். மேலும் பணம் கேட்க நினைத்ததால், நான் இந்துயிசத்தைச் சற்றே தழுவிச் கொள்ளுமாறு இப்போது அறிவுரை கொடுக்கிறார்.
காயிதே ஆஸாமுடன் அவர் சகோதரி ஃபாத்திமா ஜின்னா
காயிதே ஆஸாமின் அந்தரங்க வாழ்க்கை எப்போதும் மர்மமாகவே இருந்தது. அப்படியே தான் எப்போதும் இருக்கும். அவருடைய எல்லா நேரங்களும் அரசியலுக்காகக் கொடுக்கப்பட்டதால், அவருக்கு என்று அந்தரங்க வாழ்க்கை என்பது ஏறக்குறைய கிடையாது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு அவர் மனைவியை இழந்ததோடு, அவருடைய மகளும் அவரின் விருப்பத்திற்கு எதிராக ஒரு பார்சியைத் திருமணம் செய்து கொண்டார்.''ஜின்னா சாகிபுக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எந்த நிறத்தில் இருந்தாலும் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவள் ஒரு முசல்மானைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அவருடைய மகள் அவரோடு விவாதம் செய்தாள். அவரே, மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் அவருடைய சுதந்திரத்தை நிலைநாட்டியிருக்க, அதே சுதந்திரத்தை அவளுக்குக் கொடுக்க அவர் ஏன் மறுக்கிறார் என்று அவள் கேட்டாள்'' என்றான் ஆஸாத்.
மிகப் பிரபலமான பம்பாய் ஃபார்சி ஒருவருடைய மகளை காயிதே ஆஸாம் திருமணம் செய்து கொண்டது, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் கோபம் கொள்ள வைக்க அதற்குப் பழிவாங்கவேண்டும் என்று இருந்திருந்தார்கள். காயிதே ஆஸாம் மகளுக்கு ஒரு ஃபார்சி உடனான திருமணம் என்பது சிந்தித்துச் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் என்று சிலர் சொன்னார்கள். நான் இதை ஆஸாத்திடம் தெரிவித்த போது அவன், ''இறைவனுக்குத்தான் எல்லாம் தெரியும். ஆனால் எனக்குத் தெரிந்தது எல்லாம், அவருடைய மனைவியின் மறைவிற்குப் பிறகு இது தான் காயிதே ஆஸாமை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்தத் திருமணம் பற்றிய செய்தியை அவர் தெரிந்து கொண்டபோது, அவருடைய முகத்தில் இருந்த சோகத்தைப் பார்க்க வேண்டும். அந்த விதத்தில் அவர் மிகவும் வெளிப்படையானவர். அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும். எளிதில் புண்படக்கூடிய அவரை ஒரு சாதாரண நிகழ்ச்சி கூட பெரிய அளவில் இம்சைப்படுத்தும். அவருடைய புருவங்கள் விரிவதை வைத்தே அவர் கோபமாக இருக்கிறாரா அல்லது குழப்பத்தில் இருக்கிறாரா என்று சொல்லிவிட முடியும்.
அவரது துக்கத்தை அவரால் மட்டுமே அளக்க முடியும் என்றாலும், அந்த நாட்களில் அவரைப் பார்த்தவர்கள் எவ்வளவு நிலைகுலைந்து இருந்தார் என்று உணர்ந்திருப்பார்கள். இரண்டு வாரங்களுக்கு, அவரைப் பார்க்க வந்தவர்கள் எவரையும் அவர் சந்திக்கவில்லை. சிகார் பிடித்துக்கொண்டு, வெறுமனே அறையில் மேலும் கீழும் நடந்து கொண்டே இருந்தார். அந்த இரண்டு வாரங்களில் அவர் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்திருக்க வேண்டும்.'' அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றால், எப்போதும் தன்னந்தனியே, பின்னிரவில் மிகச் சுத்தமான அவரது அறையில் அளந்தெடுத்தாற்போல் அடி வைத்து, மேலும் கீழும் நடந்து கொண்டேயிருப்பார். அவருடைய பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ இருக்கும், கனத்த தோல் செருப்பு தாள சுதியோடு சப்தம் எழுப்ப, அந்த இரவுகள் நகர்ந்து கொண்டிருக்கும். அது கடிகார துடிப்புப் போல் இருக்கும். காயிதே ஆஸாம் அவருடைய காலணிகளை மிகவும் விரும்புவார். அதற்குக் காரணம் அது எப்போதும் அவருடைய காலடியிலேயே இருப்பதாலும், அவர் விருப்பப்படுவது போல் மிகச்சரியாக செயல்படக்கூடியது என்பதினாலும் தானா?
இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் வெளியே வந்தார். அவருடைய முகத்தில் துக்கத்திற்கான அறிகுறிகளையோ மன அழுத்தத்திற்கான அறிகுறிகளையோ காணமுடியவில்லை. இரண்டு வாரங்களாக தாழ்ந்திருந்த அவருடைய தலை இப்போது மீண்டும் நிமிர்ந்து இருந்தது. ஆனால் இதற்கு நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டார் என்றோ, அந்த அதிர்ச்சியிலிருந்து தேறிவந்துவிட்டார் என்றோ அர்த்தம் இல்லை.
ஆஸாத்துக்கு இது எப்படி தெரியும் என்று கேட்டேன். ''பணியாளர்களிடமிருந்து எதுவும் மறைக்கப்படுவதில்லை'' என்று பதில் தந்தான். ''சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பழைய இரும்புப் பெட்டியை அவரது அறைக்கு எடுத்து வந்து அதன் பூட்டைத் திறக்கச் சொல்வார். அது முழுக்க இறந்து போன அவருடைய மனைவி மற்றும் பிடிவாத குணம் கொண்ட அவருடைய மகள் சிறு குழந்தையாய் இருந்தபோது அணிந்திருந்த துணிமணிகளால் நிரம்பி இருக்கும். அந்தத் துணிமணிகள் வெளியே எடுக்கப்பட, ஒரு வார்த்தையும் பேசாமல் அதை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பார். ஓட்டிப்போய் இருக்கும் அவருடைய முகம் கருத்துப் போகும். ''இட்ஸ் ஆல்ரைட் இட்ஸ் ஆல்ரைட்'' என்று சொல்லி, ஒற்றைக்கண் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்வார்.
லாஹூரிலுள்ள ஜின்னா தோட்டம்
காயிதே ஆஸாமுக்கு மூன்று சகோதரிகள் இருந்தார்கள். ஃபாத்திமா, ரெஹ்மத், மற்றும் மூன்றாவது சாகோதரியின் பெயர் என் நினைவில் இல்லை. அவள் டோங்கிரியில் வசித்து வந்தாள். ரெஹ்மத் ஜின்னா ''சினாய் மோட்டர்ஸ்'' அருகில் இருந்த சௌபாத்தி கார்னரில் வசித்து வந்தார். அவருடைய கணவர் எங்கோ வேலை பார்த்து வந்தாலும் பெரிதாக வருமானம் ஏதும் இல்லை. சாகிப் ஒவ்வொரு மாதமும் சீல் வைக்கப்பட்ட உறையை என்னிடம் கொடுப்பார் - அதில் பணம் இருக்கும். சில சமயங்களில் பெரிய பொட்டலத்தைக் கொடுப்பார் - அதில் துணிமணிகள் இருந்திருக்கலாம். நான் இதை ரெஹ்மத் ஜின்னாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வப்போது சாகிப்பும் மிஸ். ஜின்னாவும் அவரைப் போய் பார்த்து வருவார்கள். டோங்கரியில் இருந்த அவருடைய மற்றொரு சகோதரியும் திருமணமானவர்தான். எனக்குத் தெரிந்தமட்டில் அவர் மிக நல்ல நிலையில் இருந்ததால் அவருக்குப் பொருளாதார உதவிகள் ஏதும் தேவைப்படவில்லை. காயிதேவுக்கு ஒரு சகோதரனும் இருந்தான், அவனுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து கொண்டிருந்தாலும், அவருடைய வீட்டிற்கு வர மட்டும் அவனுக்கு அனுமதி கிடையாது.
ஒரு முறை நான் அவனைப் பம்பாயில் பார்த்தேன். சவாய் பாரில் தான், பார்ப்பதற்குக் காயிதே ஆஸாம்
போலவே இருந்த அவன், அப்போதுதான் சிறு அளவு ரம் சொல்லியிருந்தான். அதே மூக்கு, அதே முக அமைப்பு, அதேபோல் வாரியிருந்த தலைமுடி அதே போல் நடுவில் நரைத்தமுடி. நான் எவரோ ஒருவனிடம் அந்த மனிதர் யார் என்று கேட்ட போது, அவன் தான் ஜனாப். முஹம்மது அலி ஜின்னாவின் சகோதரன் அஹமது அலி என்று சொல்லப்பட்டது. நான் நீண்ட நேரம் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பணம் கொடுத்தான் - அது ஒரு ரூபாய்க்கும் குறைவானதுதான் என்றாலும், ஏதோ பெரிய தொகையைக் கொடுப்பது போல் ஆடம்பரமாகக் கொடுத்தான். அவன் அங்கு உட்கார்ந்திருந்த விதம் மூன்றாம் தர பம்பாய் மதுக்கடையில் தான் என்பது போல் அல்லாமல், தாஜ் மஹல் ஹோட்டலிலேயே அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி - ஜின்னா பேச்சுவார்த்தைக்கு முன்னர் அதே அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற பம்பாய் முஸல்மான்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் என்னுடைய நண்பன் ஒருவனும் கலந்து கொண்டான். காயிதே ஆஸாம் அவருக்கே உரிய பாணியில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவனுடைய சகோதாரன் அகமத் அலி கூட்டத்திற்குப் பின்னால் ஒற்றைக்கண் கண்ணாடி அணிந்து கொண்டு நின்றபடியே, ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்ததாக என்னிடம் தெரிவித்தான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails