Sunday, January 31, 2010

நரை நீக்கும் நல்ல மருந்து

முடி நரைக்காமல் இருப்பதையே நாமெல்லாம் விரும்புகிறோம். அதற்காக எத்தனை மருந்துகள், மாத்திரைகள்,மருத்துவ ஆலோசனைகள்.........
இருந்தும் முடி நரைப்பது தடுக்க இயலாததாகவே உள்ளது.

முடியின் இயற்கையான நிறமே வெண்மைதான். முடியில் உள்ள நிறமிகளே முடிக்கு நிறத்தைத் தருகிறது. அதனால் தான் நாட்டுக்கு நாடு முடியின் நிறம் வேறுபடுகிறது. நிறமிகள் தீர்ந்துபோனபின், முடி தன் இயற்கையான நிறத்தை (வெண்மை)அடைகிறது.

முடி நரைப்பதற்கு மரபியல் அடிப்படையில் பல காரணங்களை அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆயினும் முடி நரைக்காமல் இருக்கவேண்டும் என்ற நமது ஆசையை மூலதனமாகக் கொண்டு பல விற்பனை நிறுவனங்கள் தம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. நரை நீக்கும் மருந்துகள் இன்றைய நிலையில் பல வடிவங்களில் கிடைக்கின்றன.

சங்க காலத்திலேயே நரை நீக்கும் மருந்து ஒன்று இருந்தது........
அதனைக் காண்போம்....


கோப்பெருஞ்சோழன்(அரசர்), பிசிராந்தையார்(புலவர்)இருவரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களாவர். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்புக் கொண்டிருந்தனர். கோப்பெருஞ்சோழன் தம் பிள்ளைகளோடு மாறுபட்டு தன் அரசுரிமையைத் துறந்து வடக்கிருந்து தம் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டார்.


( வடக்கிருத்தல் என்பது சங்க காலத்தில் இருந்த வழக்கமாகும். தம் மானத்துக்கு இழுக்கு ஏற்பட்ட போது வடக்கு நோக்கி உணவு, தண்ணீர் உண்ணாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலாகும்)

கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்தபோது, தன் அருகே நண்பர் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் ஒதுக்கவேண்டும் என கூறினார்.தான் நன்றாக வாழ்ந்த காலத்தில் வராவிட்டாலும், தனக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் தன் நண்பர் பிசிராந்தையார் வருவார் எனக் நம்பினார்.

முகம் கூட காணாத இவர்களின் நட்பை அறிந்த ஊரார் பிசிராந்தையாராவது வருவதாவது என மனதில் எண்ணிக் கொண்டனர். யாவரும் வியப்பெய்த கோப்பெருஞ்சோழனைக் காண வந்து சேர்ந்தார் பிசிராந்தையார்.

பிசிராந்தையாரைக் கண்ட ஊர்மக்கள் அவரது தோற்றம் கண்டு வியந்து போனார்கள். வயதான பின்பும் முடி நரைக்காமல் இருந்த அவரது தோற்றமே ஊரார் வியப்பெய்தக் காரணம். நரையின்றி இருப்பதன் ரகசியத்தை அவரிடம் வினவினர்.

அதற்குப் பிசிராந்தையார் மூலிகையையோ, பச்சிலையையோ மருந்தாகக் கூறவில்லை.

முதுமைப் பருவம் எய்தியும் நான் நரையில்லாமல் இருப்பது எப்படி என்று வினவுகிறீர்கள். அதற்கு என் சுற்றமும் சூழலும் தான் காரணம்.
என் மனைவி மாண்புடையவளாகத் திகழ்கிறாள்.
மக்களும் அறிவு நிரம்பியவர்கள்.
என் ஏவலாலர்கள் என் இயல்பினை உணர்ந்தவர்கள்.
நான் வாழும் நாட்டை ஆளும் அரசன் செம்மையான ஆட்சி செய்பவனாக உள்ளான்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக என்னைச் சுற்றியிருப்பவர்கள் சான்றோர்கள். அவர்கள் கல்வியில் பெரியவர்களாகவும், உயர்ந்த கொள்கையுடையவர்களாகவும் உள்ளனர்“.


இதுவே நான் நரையின்றி வாழக் காரணம் என்றார். அந்தக் கருத்தை உணர்த்தும் பாடல்,


“யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?. என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.“ 191.


(திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி)
நரையில ஆகுதல்!
பாடியவர்: பிசிராந்தையார்

பிசிராந்தையார் குறிப்பிடும் நரை நீக்கும் மருந்து அமைதியான வாழ்வு,
அமைதியான வாழ்க்கைக்கு அடிப்படையானது சுற்றம் .
நம் சுற்றமும் சூழலும் நமக்குப் பிடித்தது போல இருந்தால் இளமையோடு வாழலாம் என்பதே அவர் கூறும் மருந்தாகும். நம் சுற்றமும் சூழலும் நமக்குப் பிடித்தது போல எப்பொழுது அமையும்?
நாம் நல்லவராக இருந்தால் நம் சுற்றமும் நல்லபடியே அமையும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து

நன்றி :

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails