Monday, March 12, 2012

உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்

உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்: உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்

துபாஷ் காதிரின் முன்னோர்கள்
துபாஷ் அப்துல் காதிரின் முன்னோர் இளையான்குடியிலிருந்து நத்தம் அபிராமத்துக்குக் குடிபெயர்ந்து வந்தனர். இவர்களை இளையான்குடியில்” புகையிலைக் கட்டை வகையறா” என்று கூறப்படுகிறது.

உழைப்பால் உயர்ந்த உத்தமர்

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உயர்ந்து உன்னத ஸ்தானத்தை அடைந்த பல்வேறு வரலாற்றை நாம் படித்திருக்கிறோம்.

அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கையில் தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்த இராமநாதபுர மாவட்டம் அபிராமம் நத்தத்தில் பிறந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் என்பவரது வாழ்க்கை வரலாற்றை சில ஆவணங்களுடன் எழுதி இருக்கிறேன்.

இளமைப்பருவம்
கி.பி.1847 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் நத்தத்தில் இவர் பிற்ந்தார்.

இவரது தந்தை பெயர் கலுங்கு இராவுத்தர். இவருக்கு முத்து முஹம்மது என்ற தம்பியும் மீராக்காள் என்ற தங்கையும் இருந்தனர். காலங்கள் உருண்டோடியது. தம் பதினெட்டு வயதை எட்டிய பொழுது வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். குடும்பம் நொடித்தது.

இளமையில் பட்ட கஷ்டங்கள்இவர் சிறுவராயிருக்கும் போது அடிக்கடி தம் அன்னையிடம் முட்டை பொறித்துக் கேட்பாராம். வறிய நிலையில் இருந்த அன்னை தனயனின் ஆசையை நிறைவு செய்ய இயலாததால் கண் கலங்கி ஒரு நாள் வேப்பெண்ணெய்யில் முட்டையைப் பொறித்து வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாராம். அன்னை சொல்லாமல் சொன்ன உண்மையைப் புரிந்துகொண்ட இவர் அன்றிலிருந்து இறுதிவரை முட்டை உண்பதே இல்லை என்று கூறுவர்.

வறுமையின் பிடியிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் உதித்தது. அதுவே வரலாற்றில் முத்திரை பதித்தது. மீண்டும் உங்களைப் பார்க்கும்போது ஒரு கோடீஸ்வரனாகவே வந்து பார்ப்பேன் என தன் அன்னையிடம் சூளுரைத்தார்.

காரிருளைக் கிழித்துக் கொண்டு கதிரவன் உதிப்பது போல வறுமைப் பேயைத் துரத்துவதற்காக புதிய இடத்தை நோக்கி புறப்படலானார்.

பர்மா பயணம்

தென் கிழக்காசிய நாடான ஐராவதி நதிக்கரையில் அமைந்த கலைகள் மிகுந்த இயற்கை எழில் கொஞ்சும் பர்மாவுக்குப் பயணமானார். கம்பீரத் தோற்றம் அதுதான் இவரது வாழ்க்கையின் ஏற்றம். அதனால் அவருக்கு ஏற்பட்டது ஒரு மாற்றம்.

நார் பூவாக மாறியது வானத்தில் பிரகாசிக்கும் சந்திரனைப் போல இவரது வாழ்க்கையில் எதிர்பாராத ஒளி பிறந்தது. ஆம் பூவோடு சேரும் நாரும் மணம் பெறுவது போல இவருக்கு திருச்சியைச் சேர்ந்த எஹியா மெளலானா என்ற பெரியாரின் தொடர்பு கிட்டியது.

அந்தப் பெரியார் இவரை ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார். வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. இருந்தும் இவர் காத்திருந்தார்.

அந்தக் காத்திருத்தல் ஒரு சரித்திரத்தை மாற்றி எழுதப் போகிறது என்பது வறுமைக் காதரின் வாட்டமுள்ள நெஞ்சுக்குத் தெரியாது. இறுதியில் சுபுஹுத் தொழுகை முடித்து வந்த அந்தப் பெரியவர் உபதேசித்தார்.

‘உனக்கொரு எதிர்காலம் உண்டு அதனால் கொலை மற்றும் கொள்ளைக் கும்பலை விட்டு அகன்று விடு' என்றுரைத்தார். மனம் மாறினார், மணம் வீசினார். திருந்திய அவர் அங்கு ஒரு பர்மியப் பெண்ணை மணந்து கொண்டார்.

ஏறுமுகம் தந்தது துறைமுகம்அன்று முதல் அவர் வாழ்க்கை உச்சக் கட்டத்தை அடையத் துவங்கியது. மனைவியின் மூலமாகக் கிடைத்த மூலதனத்தையும் தம் மூளை எனும் மூலதனத்தையும் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறினார். பெரிய கப்பல்கள் மற்றும் மற்றும் லாஞ்ச் போன்ற சிறிய படகுகள் மூலமும் வியாபாரம் செய்தார். கப்பல்களில் வரும் ஐரோப்பியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது மொழியை திறம்படக் கற்றுக் கொண்டார்.

ரங்கூன் “Soliya muslim association” இவருக்கு“Honourable Magistrate”என்ற பட்டம் கொடுத்தது.
இவரைப் பாராட்டி “KHAN BAHATHOOR”என்ற பட்டம் வழங்கப்பட்டது
(ஆதாரம்: ”THE RANGOON TIMES” - 1919 - june -03)

இவரது திறமையை மெச்சிய ஆங்கிலேய அரசு தம் அரசவையில் இவரை ஒரு அங்கத்தினராக (Fellow of Royal Society) ஏற்றுக் கொண்டது.

காசிம் பிரதர்ஸ் & கம்பேனி.ஆங்கிலேயர் நட்பைப் பெற்று வணிகம் தொடங்கிய இவர் தனியாகத் தானும் தன்னுடைய சகோதரர் முத்து முகம்மதுவும் சேர்ந்து காசிம் பிரதர்ஸ் & கம்பேனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

இதுவே அவர் பிற்காலத்தில் வணிகம் செய்து பெரும் செல்வந்தர் ஆகவும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. யின் நட்பைப் பெறவும், பாரதியாருடன் அறிமுகம் ஆகவும் காரணமாக அமைந்தது.

இரங்கூன் காசிம் பிரதர்ஸ் & கம்பேனியில், இவர் தம் மூத்த மருமகன் N.M. சேக் அப்துல் காதிரையும், இளைய மருமகன் விஜயன் அப்துல் ரஹ்மான் அம்பலத்தையும் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டார்.

இரங்கூன் நகரில் கப்பல் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முகவராகவும் இருந்து வந்தார். அத்துறைமுகத்தில் நிற்கக்கூடிய கப்பல்களுக்கு உணவு மற்றும் நிலக்கரி போன்றவற்றை விநியோகம் செய்வது இவரது முக்கியப் பணியாக இருந்தது.

பிரிட்டிஷ் இந்தியா நேவிகேஷன் கம்பெனியின் ஏஜென்டான “புல்லக் பிரதர்ஸ்” இவரின் வணிக ஆற்றலை உணர்ந்து இவரைத் தம்முடைய பங்குதாரர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர்.

அபரித வாணிப வளர்ச்சிகி.பி. 1881ல் இவரது வாணிபம் பெரிதும் வளர்ந்தோங்கியது. இவர் இரண்டு சிறிய கப்பல்களுக்கும் 62 ராட்சஸப் படகுகளுக்கும் அதிபரானார்.

திருச்சி எஹியா மெளலானாவின் நட்பு ஒழுக்கத்தையும் நேர்மையையும் கற்றுத்தர அவற்றுடன் அவரது திறமையும்சேர்ந்து வியாபாரத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தோங்கினார்.

மனைவியர் நால்வர்இவர் பர்மியப் பெண்ணையும் சேர்த்து நான்கு பெண்களை மணம் முடித்துக் கொண்டார். அவர்களின் சொந்த ஊர்கள் முறையே 1, ரங்கூன், 2, நத்தம் 3, காரியாபட்டி 4, ஆந்திரா முதலியன ஆகும்.

இவருக்கு இந் நான்கு மனைவியர் மூலம் 9 ஆண் மக்களும் 9 பெண் மக்களும் பிறந்தனர். ஆலிம்களைப் பெரிதும் மதித்த இவர் தம் பெண் மக்களில் ஒருவரை ஆலிம் ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார்.

தம்முடைய பூர்வீகத்தலமான இளையான்குடி தொடர்பைப் புதுப்பிக்க விரும்பிய அவர்,

அவருக்கு மச்சான் முறையான நூருத்தீன் மதாறுப்புலவரின் மக்களான ஷேக் அப்துல் காதிருக்கு தம் மகள் ஆமினா பீவியையும், இராவுத்தர் நெய்னாருக்கு தம்முடைய இளவல் துபாஷ் முத்து முகம்மதுவின் மகள் பல்கீஸ் பீவியையும் மணம் முடித்துக் கொடுத்தார்.

நூருத்தீன் மதாறுப் புலவர் குடும்பத்துக்கும் தம் குடும்பத்துக்கும் ஏற்படுத்திய திருமண உறவுகளால் இளையான்குடிக்கும் நத்தம், அபிராமத்துக்கும் இடையே உறவுப் பாலம் ஏற்படுத்திக் கொடுத்தார் துபாஷ் அப்துல் காதிறு. இன்றளவும் ஆலமரம் போல் மண உறவுகளால் இரண்டு குடும்பங்களும் படர்ந்து வளர்ந்து வருகின்றன.

துபாஷ் காதிரின் புகழை அறிந்த மகா கவி பாரதியார் தம் நண்பர் வ.உ.சி. நிறுவனத்தில் துபாஷ் அப்துல் காதிர் பங்கு வாங்க வேண்டுமென வேண்டினார். அதற்கு அவர் “ எனக்குப் பங்கு வாங்க விருப்பமில்லை வேண்டுமென்றால் ஒரு தொகையைக் குறிப்பிடுங்கள், நான் அதைத் தந்து விடுகிறேன் என்றார் பெருந்தன்மையுடன்.


துபாஷ் காதிர் அவர்கள் பர்மாவில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியைக் கொண்டு தம் சொந்த ஊரில் ஒரு அழகிய பள்ளி வாசலைக் கட்டினார்.

பர்மாவில் உள்ள பள்ளி வாசல்களின் கட்டிடக் கலை அம்சங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இப்பள்ளி இன்றும் பொலிவோடு திகழ்ந்து வருகிறது. அழகான தோற்றமும், விண்ணை முட்டும் அளவிற்கு மினராக்களையும் இப்பள்ளி வாசல் பெற்று விளங்குகிறது.

சிற்றூரில் இப்படி ஒரு பள்ளி வாசலா! என்று காண்போர் நெஞ்சங்களை வியப்பூட்டி வருகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இப்பள்ளி கட்டப் பட்டாலும் இன்றுள்ள கட்டிடக் கலை அம்சங்களுக்குச் சவால் விடும் அளவிற்கு திகழ்ந்து வருகிறது.

துபாஷ் காதர் இப்பள்ளி வாசலைப் பராமரிப்பதற்காக1, keelaparuthiyur 2, serumangulam ஆகிய கிராமங்களை பள்ளிக்காக வக்பு செய்தார்.

இவர் பர்மாவிலிருந்து இந்தியா திரும்பும் போது அவரது சொந்த ஊருக்குச் செல்வதற்கு ஏதுவாக பார்த்திபனூர் அருகிலுள்ள சூடியூரில் பிரத்யோகமாக இரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. அவர் ஊருக்கு வருகிறார் என்றால் ஊரே விழாக்கோலம் கொண்டு விடும். வழி நெடுகிலும் அவரை மகிழ்வுடன் வரவேற்பர்.

அப்போதைய வெள்ளைக்கார ஆளுநர் ஒருவர் மதுரையில் ஒரு நூலகத்தை நிறுவுவதற்கு இராமநாதபுரம் ராஜா , சிவகங்கை மன்னர் போன்றோரிடம் நன்கொடை கேட்டார்.

அவரவர் தகுதிக்கேற்ப நன்கொடை அளித்தனர். ஆனால் துபாஷ் காதிரோ வெற்றுக் காசோலையை ( Blank cheque ) க் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதைக் கண்ணுற்ற அந்த வெள்ளை ஆளுநர் அனைவர் அளித்த நன்கொடைக்கு மேல் ரூ. 100 எழுதி அந்தச் செக்கை ஏற்றுக் கொண்டதோடு துபாஷ் காதிரின் பெருந்தன்மையையும் பாராட்டினார்.

THANKS TO: ABIRAMAM NATHAM.COM

INFO BY: Mohamed Zulfihar, Ministry Of Health,
Sultanate of Oman. GSM: 968-92272959

-----
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

1 comment:

VANJOOR said...

ASSALAMU ALAIKKUM W.R.B.,

MY DEAR NIDUR MOHAMED ALI JINNAH SAHIB,

I DO HEREBY CONVEY AND REGISTER MY HEARTFELT THANKS TO YOUR MAGNANIMITY FOR POSTING THIS ARTICLE.

MAY ALLAH S.W.T. BLESS YOU AND YOUR FAMILY WITH ALL THE BEST HERE AND HEREAFTER.

BEST REGARDS.
VANJOOR

LinkWithin

Related Posts with Thumbnails