ராஜா வாவுபிள்ளை
எனதுபார்வையில்
அவ்விடம்
ஆள் அரவமில்லா
அதிகப்பயனில்லாத
ஒருசில வாகனங்களே பயணிக்கும்
பாதையாய் இருந்தது
பக்கத்திலொரு சிறுகால்வாயும்
சுத்தமான மழைநீரை சுமந்து
பெருமேரியில் கலந்திட
சலசலத்து ஓடியது
கால்வாயின் கரையோரம்
புகைவண்டி நிலையம்
ஆங்கிலேயனால் வடிவமைக்கப்பட்டு
இந்தியக்கூலிகளால் கட்டப்பட்டது
யானைத் தந்தங்களையும்
காலங்காலமாக
ஓங்கிவளர்ந்து வைரம்பாய்ந்த
'இருண்டகண்டத்து'
மரங்களையும் வெட்டிமுறித்து
சூரியனை அடையாத
பிருத்தானியத்திற்கு கொள்ளைகொடுத்து
அங்கிருந்து மிஞ்சிய கழிசடைகளையும்
கொண்டுவந்து காலங்காலமாக இறக்கி
களைத்துப்போன அடிமாடுபோல
நின்றிருந்தது
அதையொட்டிய மறுகரையில்
சிறுகுன்று ஒன்றின் பக்கவாட்டில்
பட்டாளத்து பணியாட்கள்
கூட்டங்குடும்பமாய் குடிலிட்டு
எந்நிலையையும்
உயிரைக் கொடுத்தும்
தாய்நாட்டை தற்காக்க
எப்போதும் தயார்நிலையில்
வசித்து வந்தனர்
மேற்சொன்ன யாவும்
இன்று பெருமாற்றங்களை
விழுங்கிவிட்டு
எதுவுமே அறியாததுபோல்
வெவ்வேறு அடையாளங்களைக்
புதியவர்க்கு காட்டியபடி
நிற்கின்றன.
ஆனால் ....
குன்றின் உச்சியில்
அகிலத்தைப் படைத்து
பரிபாலிக்கும் இரக்கமுள்ள
இறைவனின் இல்லத்து
உயர்ந்த மினாரா
அன்றும் இன்றும் மாறாமல்
ஒளிர்ந்தே நிமிர்ந்து நிற்கிறது.
#
பண்டு, உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவின் நுழைவாயிலாக இருந்த கிபுலி மலை இப்போது வளர்ந்துவிட்ட கம்பாலாவின் நடுவில் மூழ்கிவிடாமல் நிமிர்ந்தே நிற்கிறது.
கிபுலி மலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் பார்த்தும், பழகியும், சுவாசித்தும், வியர்வை சிந்தியும் கழித்துக் கொண்டிருக்கும் காலத்தின் நினைவூட்டமாக எழுந்த எண்ணங்களின் கோர்வையை நட்புகளுடன் பகிர்வதில் ஆனந்தம் கொள்கிறேன்.
No comments:
Post a Comment