ஒரு அழகான கல்யாணம்
எப்படி இருக்க வேண்டும் என்பதை
மனித சமூகத்திற்கு வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.
அதில் ...
அழகு
காதல்
பொருளாதாரம்
மார்க்கம்
தியாகம்
எல்லாமே அழகியலுடன் கலந்திருந்தது.
கதீஜா பிராட்டியார்...
அரபுலகின் வணிக சக்கரவர்த்தி !
வயது நாற்பத்தைந்து.
கணவரை இழந்த விதவை.
முஹம்மத் ..
இளைஞர் .
அரபு தேசத்தின் புகழ்மிக்க ஹாஷிம் குடும்பத்தில் பிறந்தவர்.
வயது இருபத்தைந்து.
ஏழை முஹம்மது
செல்வச் சீமாட்டி கதீஜாவின் வணிகக் குழுவில்
ஒருவர்.
அவர்களின் நேர்மையும்
உழைப்பும்
கண்ணியமும்
வணிகத் திறமையும்
அழகோ அழகென்று
அவர்களோடு பயணம் சென்ற மைஸரா என்ற பணியாளர் சொல்லக் கேட்டு
கதீஜா நாயகியார் வியந்தார்.
முஹம்மதை மனதுக்குள் நினைந்து மகிழ்ந்தார்.
காதல் கொண்டார்.
இரு குடும்பத்தார் இசைவோடு
முஹம்மதை மணம் கொண்டார்.
வாழ்க்கை ...
காதல் வாழ்க்கை
அவர்களுக்கு அமுதமாக இனித்தது.
ஆறு பிள்ளைகளை பெற்றெடுத்தார்கள்.
முஹம்மதின் நாற்பதாவது வயதில்
அவர்களுக்கு இறைத்தூதர் எனும்
நபிப் பட்டம் கிடைத்தது.
கூடவே குறைஷிகளின் கொடும் தாக்குதலும்
பரிசாகக் கிடைத்தது.
ஆனாலும் முஹம்மதை
முஹம்மது நபியென்றும்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிற வேறு யாருமில்லையென்றும் ஏற்றுக் கொண்ட
முதல் முஸ்லிம் கதீஜா பிராட்டியார்.
செல்வச் சீமாட்டி கதீஜா நாயகியாரின் செல்வமெல்லாம் ஏழைகளுக்கு ஈந்து ஈந்து தேய்ந்த்து.
மகாராணிபோல் வாழ்ந்தவர் குறைஷிகளால் ஊர் விலக்கம் செய்யப்பட்டு
கணவரோடு சிபி அபிதாலிப் பள்ளத்தாக்கில்
பட்டினி கிடந்தார்.
கணவருக்காக இன்னல்களைத் தாங்கிக் கொண்டு புண்ணியராம் நபிகளாரை
கண்மணியைப்போல காத்தார்.
நாயகியாருக்கு வயது 65.
நபிகளாருக்கு வயது 45
கணவரை விட இருபது வயது மூத்தவராக இருந்தாலும் மணாளரின் மனதில் முற்றாக நிறைந்து வாழ்ந்தவர் கதீஜா பெருமாட்டி.
அன்பும்
காதலும்
நெஞ்சமெல்லாம் நிறைந்து வழிய
வாழ்க்கைத் துணைக்காக
வசதிகளை தூக்கி எறியவும் தயங்காமல்
எதிரிகளின் தாக்குதலுக்கும் அஞ்சாமல்
ஒற்றை சுவாசமாக வாழ்ந்தவர்கள்
முஹம்மது ரஸூலுல்லாஹ்வும்
கதீஜா நாயகியாரும்.
65 வது வயதில் பிராட்டியார் மண்ணகம் துறந்து விண்ணகம் சென்றார்கள்.
அவர்கள் வாழும் காலம்வரை
அவர்கள் மட்டுமே
நபிகளாரின் வாழ்க்கைத் துணையாக இருந்தார்கள்.
இறைவன் தன் திருமறையில் சொன்னானே ...
/ கணவன் மனைவிக்கு ஆடையாகவும்
மனைவி கணவனுக்கு ஆடையாகவும்
இருக்க வேண்டும் / என்று.
அப்படி வாழ்ந்தார்கள்....
பெருமானும் பெருமாட்டியும்.
பாலைவனம் ...
அப்படி ஒரு அற்புதமான
கணவன் மனைவியை கண்டதேயில்லை.
#அபுஹாஷிமா
No comments:
Post a Comment