கடந்த ஊடக போதை தொடர் பதிவில், நவீன ஊடகங்கள் நம் அறிவு வளர்ச்சிக்கு
தடையாக இருப்பதை விமர்சனம் செய்திருந்தோம், மேலும் மார்க்க கல்வியாளர்களின்
எண்ணிக்கை குறந்துக்கொண்டே வருகிறது இதற்கு காரணம் நவீன ஊடகங்களின்
தாக்கம் என்பதை கோடிட்டும் காட்டினோம். அதன் தாக்கம் எவ்வாறு என்பதையும்
வசகர்களின் கருத்துகள் பறைசாற்றியது. அல்ஹம்துலில்லாஹ்..!
இந்த பதிவில் நம் சமுதாயத்தில் கணக்கிலடங்கா இயக்கங்கள் நம்மைச்
சூழ்ந்துக்கொண்டு, ஆளாளுக்கு ஒரு ஊடகம் என்று வைத்துக்கொண்டு சமுதாய சேவை
செய்திகள் தருகிறோம் என்று ஒரு சாராரும் மற்றொரு சாரார் அவதூறுகளை
அசிங்கங்களை மாறி மாறி சேற்றை வாரியிரைத்து முகத்தில் பூசிக்குக்
கொள்கிறார்கள். இதற்கு அளவே இல்லை. இவைகளுக்கு காட்டாக எதனையும் இங்கே
சொல்லித் தெரியவேண்டியதில்லை. அன்றாட இணையதளங்களில், மின்னஞ்சல்
குழுமங்களிலும், தனி மின்னஞ்சல்களிலும் நேரத்தை வீண் விரயம் செய்து
குழப்பங்களை அவர்களுக்கே உரிய பாணியில் பரப்பி வருகிறார்கள்.
ஒருவர் மார்க்க விடையத்தில் அறிந்தோ அறியாமலோ ஒரு தவறான தகவல் தருகிறார்
என்றால் அவரின் கருத்துக்கு நளினமான முறையில் அவரின் தவறை திருத்தும்
விதமாக மிகச் சரியான ஆதாரத்தகவலுடன் எடுத்துரைக்க முயற்சிக்க வேண்டும்.
இதைவிடுத்து அவரின் கருத்தை விமர்சிப்பதை புறந்தள்ளிவிட்டு அவரின்
தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரின் அந்தரங்க செய்திகளை பொதுவில் கட்டுரைகளாக
விவாதிப்பதன் மூலம் அந்த மனிதனை அவமானப்படுத்த மட்டுமே முடியுமே தவிர அந்த
மனிதரைத் திருத்த முடியுமா? மேலும் அடுத்தவனுடைய மானத்தில் விளையாடுவதால்
பாவத்தை மட்டுமே சம்பாதிக்க முடியும்.
