Saturday, February 11, 2012

ஊடக போதை

கடந்த ஊடக போதை தொடர் பதிவில், நவீன ஊடகங்கள் நம் அறிவு வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை விமர்சனம் செய்திருந்தோம், மேலும் மார்க்க கல்வியாளர்களின் எண்ணிக்கை குறந்துக்கொண்டே வருகிறது இதற்கு காரணம் நவீன ஊடகங்களின் தாக்கம் என்பதை கோடிட்டும் காட்டினோம். அதன் தாக்கம் எவ்வாறு என்பதையும் வசகர்களின் கருத்துகள் பறைசாற்றியது. அல்ஹம்துலில்லாஹ்..!
இந்த பதிவில் நம் சமுதாயத்தில் கணக்கிலடங்கா இயக்கங்கள் நம்மைச் சூழ்ந்துக்கொண்டு, ஆளாளுக்கு ஒரு ஊடகம் என்று வைத்துக்கொண்டு சமுதாய சேவை செய்திகள் தருகிறோம் என்று ஒரு சாராரும் மற்றொரு சாரார் அவதூறுகளை அசிங்கங்களை மாறி மாறி சேற்றை வாரியிரைத்து முகத்தில் பூசிக்குக் கொள்கிறார்கள். இதற்கு அளவே இல்லை. இவைகளுக்கு காட்டாக எதனையும் இங்கே சொல்லித் தெரியவேண்டியதில்லை. அன்றாட இணையதளங்களில், மின்னஞ்சல் குழுமங்களிலும், தனி மின்னஞ்சல்களிலும் நேரத்தை வீண் விரயம் செய்து குழப்பங்களை அவர்களுக்கே உரிய பாணியில் பரப்பி வருகிறார்கள். 
ஒருவர் மார்க்க விடையத்தில் அறிந்தோ அறியாமலோ ஒரு தவறான தகவல் தருகிறார் என்றால் அவரின் கருத்துக்கு நளினமான முறையில் அவரின் தவறை திருத்தும் விதமாக மிகச் சரியான ஆதாரத்தகவலுடன் எடுத்துரைக்க முயற்சிக்க வேண்டும். இதைவிடுத்து அவரின் கருத்தை விமர்சிப்பதை புறந்தள்ளிவிட்டு அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவரின் அந்தரங்க செய்திகளை பொதுவில் கட்டுரைகளாக விவாதிப்பதன் மூலம் அந்த மனிதனை அவமானப்படுத்த மட்டுமே முடியுமே தவிர அந்த மனிதரைத் திருத்த முடியுமா?  மேலும் அடுத்தவனுடைய மானத்தில் விளையாடுவதால் பாவத்தை மட்டுமே சம்பாதிக்க முடியும். 
இது போன்ற இயக்கத்தவர்களின் ஊடக போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை தரும் விதமாக பின் வரும் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் உங்கள் பார்வைக்கும் தருகிறோம். தயை கூர்ந்து நிதானமாக படியுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல தெளிவுடன் கூடிய சிந்தனையை தந்து நல்லருள் புரிவானாக.
அல்குர்ஆன் : 49:10. "நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."
அல்குர்ஆன் :3:103. “இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்”.
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புஹாரி (11). 
மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (121). 

ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (481). 
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். 

எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். 

எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். 

எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் 
என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (2442). 
உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (2444). 
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (4011).

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக் கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (4045). 
பரபரப்பூட்டும் அவதூறு, கிசுகிசுக்களை வலைத்தளங்களிலும், மின்னஞ்சல்களிலும் பரப்புவது ஒரு நவீன (அதீத)நாகரீகமாகிவிட்டது. குறிப்பாக முஸ்லீம் மார்க்க பிரச்சாரர்களை குறிவைத்தே இது போன்று நடைப்பெறுகிறது. வேதனையிலும் வேதனை என்னவென்றால் மார்க்க அறிஞர்(?)களே சக மார்க்க அறிஞர்களைப் பற்றி தனிமனித தாக்குதல்களுடன் கூடிய அவதூறுகள் பரப்புவது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை உண்மைபடுத்தும் விதமாக காழ்ப்புணர்விலும் சொந்த பகையாலும் எழுதப்படும் இது போன்ற அவதூறுகளை ஊக்கப்படுத்தி மீள்பதிவு செய்யும் கேடுகெட்டவர்களை நினைத்தால் வேதனைப்படாமல் நடுநிலையை விரும்பும் ஒரு உண்மை முஸ்லீமால் இருக்க முடியாது.
ஒருவரின் மானம் எப்படிப் பட்டது?
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். உடனே அவர்கள் 'இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்க மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். உடனே அவர்கள் '(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?' என்றதும் மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!" என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் '(இது) புனிதமிக்க மாதமாகும்!' எனக் கூறிவிட்டு, 'உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!" எனக் கூறினார்கள்.  மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள், தாம் ஹஜ் செய்தபோது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கிடையே நின்று கொண்டு, 'இது மாபெரும் ஹஜ்ஜின் தினமாகும்!' எனக் கூறினார்கள். மேலும், 'இறைவா! நீயே சாட்சி!" என்றும் கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே, மக்களும் 'இது நபி(ஸல்) அவர்கள் (நம்மிடம்) விடை பெற்று (உலகைவிட்டு)ச் செல்கிற ஹஜ்ஜாகும்!" எனப் பேசிக் கொண்டார்கள்." (புகாரி: 1742. )
ஒரு முஸ்லீமுடைய மானம் மரியாதையை எந்த வகையில் புனிதமானது என்று நபிகளார் உவமையுடம் மிக அழகாக கூறியுள்ளார்கள்.
மேலும் மேல் சொன்ன குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஒரு முஸ்லீம் சகோதரன் அடுத்த முஸ்லீம் சகோதரனுடன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் எல்லோரும் உணரவேண்டும். இந்த நவீன இயக்க ஊடக போதையிலிருந்து அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றி. உண்மை முஸ்லீமாக வாழ்ந்து உணமை முஸ்லீமாக மரணிக்க செய்வானாக.
அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நன்னெறி தொடரும்... இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் குழு
Source : http://adirainirubar.blogspot.com/2012/02/6_11.html

1 comment:

NIZAMUDEEN said...

சகோதரத்துவம் பேணுதல் பற்றிய இறை வசனங்களையும் நபி மொழிகளையும் நினைவூட்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails