நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
பயனளிக்கக் கூடிய அறிவு
தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை'' (ஆதாரம் : முஸ்லிம்)
தாய் தந்தைக்கு இறைவனிடம் துவா செய்வோம் . : ஒரு மனிதன் இறந்தபின் அவனைஅவரை தொடரும் மூன்று
விஷயங்களில் அவருக்காக துஆ கேட்கும் ஸாலிஹான பிள்ளைகள். தனக்காக பிரார்த்தனை செய்யும்
நல்லொழுக்கமுள்ள பிள்ளைகள் அவர் செய்யும் துஆவின் பலாபலன்கள் அவரைச்
சென்றடையும், அதாவது துஆவின் மூலம் நன்மைகள் கிடைக்கும், தீமைகள் அழிக்கப்படும்
வாழ்வின் மாறாத நிகழ்வுகள்
=====================================================================
தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2
தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2சிங்கை மருத்துவரிடம் இந்தியாவிற்கு என்தந்தையை அழைத்துச் செல்கிறேன் என்று அனுமதி கேட்டதும் அவர்களும் அனுமதி அளித்தனர்.
ஐம்பதாண்டு காலம் வாழ்ந்த சிங்கப்பூர் அந்த நாட்டின் குடிமகன் என் தந்தையை அந்த நாட்டைவிட்டு அழைத்துச் செல்லும்போது என்தந்தையின் மனம் பட்ட கஷ்டங்களை என்னால் காணமுடிந்தது.
உறவினர்கள் அனைவரும் விமான நிலையத்தில் திரண்டு நின்று தள்ளு வண்டியில் அமர்ந்திருந்த என்தந்தைக்கு வழியனுப்பு விழாவைப் போல வாழ்த்துச் சொல்லி அனுப்பிய அந்த கணம் இனி நான் சிங்கப்பூர் வரவே மாட்டேனோ(?) என்ற கேள்விப் பார்வையோடு அனைவரையும் பார்த்து கண்ணீரோடு விடைபெற்ற அந்த தருணங்கள் வரையில் இவர் மறுஉலக வாழ்க்கைக்கு செல்ல விடைபெறுகிறார் என்ற இரகசியம் எங்கள் யாருக்குமே தெரியாது.
சென்னை விமான நிலையத்தில் எங்கள் குடும்பம் தந்தையின் வருகைக்காக காத்திருக்க தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு வந்ததைப் பார்த்த என்தாயார் மற்றும் சகோதர சகோதரிகள் கதறி அழுதனர்.
சர்கரை வியாதிக்கு நல்ல முறையில் சிகிச்சை செய்யக்கூடியவர் நாகப்பட்டினம் அன்சாரி டாக்டர் என்பதை கேள்விப்பட்டிருந்ததால் சென்னையிலிருந்து நாகைக்கு விரைந்தோம்… டாக்டர் பார்த்துவிட்டு புண்ணை குணமாக்கி விடலாம் என்று ஆறுதலான வார்த்தைகளை உதிர்த்தார். இரண்டு தினங்களில் தைரியத்துடன் நான் பணிக்கு துபாய் திரும்பிவிட்டேன்.
சரியாக மூன்று மாதத்தில் பெருவிரலிலும் கால் பாதத்திலும் ஏற்பட்ட புண்ணை குணமாக்கி என் தந்தையை நடமாடவிட்ட பெருமை டாக்டர் அன்சாரியை சாரும். இரண்டாண்டுகள் இறைவணக்கத்திலேயே அதிகமாக பொழுதை கழித்தார் அவ்வபோது சர்க்கரை வியாதியின் தாக்குதலும் இருந்துக் கொண்டு இருந்தது.
2004 லில் விடுமுறையில் தாயகம் வந்தபோது சில தினங்களில் என் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். மாதம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்வதற்கு செல்லும் தஞ்சாவூர் ரோகினி மருத்துவமனைக்கு என்தந்தையை அழைத்துச்செல்ல தயாரானோம். அந்த தருணத்தில் என் தந்தையின் உடன்பிறந்த சகோதரி வந்திருந்தார் என் தந்தைக்கு சட்டை அணிவித்து பொத்தான் மாட்டிவிட்டு அண்ணே நல்லபடி திரும்ப வருவேண்ணே என்ற வார்த்தையை கூறியபோது அந்த வார்த்தை என்மனத்தில் ஏதோ ஒரு நெருடலை கொடுத்தது.
ரோகினி மருத்துவமனையில் எங்கள் உறவினர் ஒருவரை சேர்த்து இருந்தார்கள். அவர்களும் என் தந்தையைக் கண்டு நலம் விசாரித்துவிட்டு சிங்கப்பூரின் பழைய கதைகளை பேசி கலகலப்பாக இருந்தார்.
மூன்று தினங்களாக வாடிய முகத்துடன் இருந்த என் தந்தை அவரின் பழைய நிகழ்வுகள் நினைவுகள் அவர் மனதை உற்சாகப்படுத்தியது.
இரவு அங்கு தங்கியிருக்கும் சூழல் ஏற்படவே என்னை வீட்டு போகும்படி என் தந்தைக் கூற, வேண்டாம் நான் இங்கு இருக்கிறேன் தம்பி வீட்டுக்கு போகட்டும் என்று கூறி தம்பியை அனுப்பி விட்டேன்.
பின்னிரவில் மூச்சுத்தினரல் ஏற்பட்டது உறங்கிக் கொண்டிருந்த என்னை என்தாயார் எழுப்ப நான் அவசரமாக மருத்துவரை கூப்பிட்டேன் வந்து பார்த்துவிட்டு ஆக்ஸிஜன் கவரை உபயோகிக்க கொடுத்துவிட்டு சென்றார்.
சற்று நேரத்தில் மூச்சுத்திணறல் சரியானது கட்டிலில் அமர்ந்திருந்த என் தந்தை கீழே அமரவேண்டும் எனக்கேட்க கீழே அமர்த்தினேன். மீண்டும் கட்டிலில் அமர வேண்டும் எனச் சொல்ல தந்தையைத் தூக்கி கட்டிலில் அமர வைப்பதற்கு சிரமப்பட்டேன்.
காலை ஆறு மணிக்கு என் தந்தையை பரிசோதிக்க டாக்டர் அறைக்குள் வரவே நான் பக்கத்து அறையில் உள்ள உறவினருக்காக மருத்துவமனையின் கீழ்தளத்தில் உள்ள உணவகத்தில் பால் வாங்க சென்று சில வினாடிகளில் என் மனைவி பதற்றத்துடன் என்னை அழைக்க ஓடிப்போய் என் தந்தையை கண்டபோது கட்டிலில் உறக்க நிலையில் கிடக்க டாக்டர் என் தந்தையின் நெஞ்சை அழுத்தி அழுத்தி பம்ப் செய்துக் கொண்டிருந்தார்.
என்ன நடக்கிறது என்று என்னால் யூகிப்பதற்குள் என்தாயாரும் என் மனைவியும் அழுதுக் கொண்டிருக்க டாக்டரை நகரச் சொல்லி என் தந்தையின் நெஞ்சத்தை என் கைகளால் இறைவனின் பெயரைச் சொல்லி அழுத்தினேன். என் தந்தையின் கண்கள் மூடியேயிருந்தன புரிந்துவிட்டது பால் வாங்க சென்ற சில வினாடிகளில் அவசர அவசரமாக முன்கர் நக்கீர் வந்துபோய்விட்டார்..
“தாருல் பனாவைவிட்டு தாருல்பகாவை என் தந்தை அடைந்துவிட்டார்கள்.
வாழ்க்கையின் பெரும்பகுதி குடும்பத்திற்காகவே வாழ்ந்தவர்களில் என் தந்தையும் ஒருவர். தன் சுகத்தைவிட குழந்தைகளின் நலனையே தனது வாழ்க்கையாக்கி வாழ்ந்தவர்.
என் தந்தையின் தியாகங்களை முழுமையாக இங்கு விவரிக்கவில்லை என்றாலும் நான் உங்களோடு பகிர்ந்துக் கொண்டதில் விளங்கி இருப்பீர்கள் இவ்வளவு தூரம் என் சொந்தக் கதையை வாசித்த உங்களுக்கு என்றும் நன்றியுடன்…
Source : http://kismath.blogspot.in
=======================================================================
No comments:
Post a Comment