Wednesday, February 29, 2012

குத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
- அஷ்ஷெய்க் அபூ ஹுனைப்
குத்பா என்றால் என்ன?
குத்பா” என்ற அறபு வாசகமானது, உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இதனடிப்படையில் உபதேசம் செய்யும் ஒருவர் அறபு மொழியில் “கதீப்” என்று அழைக்கப்படுவார்.
உண்மையில் வரவேற்கத்தக்க ஓர் உபதேசமானது, சுருக்கமான வசனங்களையும், மனதைக் கவரும் சொற்களையும், கேட்போருக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும்.
மேலும், மார்க்க ரீதியில் இவ்வாசகமானது, “இன்மை, மறுமை இரண்டினதும் நலவைக் கருதிற்கொண்டு மார்க்க சட்டதிட்டங்கள், மற்றும் அதன் நோக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்குச் செய்யப்படும் உபதேசம், எத்திவைத்தல் ஆகிய செயற்பாடுகளைக் குறிக்கும்.” (லிஸானுல் அறப், அல்கானூனுல் முகீத், முஃஜமு முஸ்தலஹாதுல் புகஹா)
இவ்விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டே நபியவர்களினது குத்பாக்களும் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாகப் பின்வரக்கூடிய நபிமொழியை அவதானித்துப் பாருங்கள்.
“நபியவர்கள் தனது குத்பாவின் போது, நின்ற நிலையில் உரை நிகழ்த்தக்கூடியவர்களாகவும், இரு குத்பாக்களுக்கும் மத்தியில் உட்காரக் கூடியவர்களாகவும், அல்குர்ஆன் வசனங்களை ஓதக் கூடியவர்களாகவும், மக்களுக்கு ஞாபகமூட்டக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.” (முஸ்லிம்)
தொழுகையை நீட்டுவதும், குத்பாவைச் சுருக்குவதும் மார்க்க விளக்கத்திற்கு அடையாளமாகும்
குத்பாவைச் சுருக்குவதும், தொழுகையை நீட்டுவதும்; கதீபின் மார்க்க விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாகும் என்பது தொடர்பாகப் பல செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
- நபியவர்கள் கூறியதாக அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நிச்சயமாக ஒருவரின் தொழுகை நீளமாகவும், குத்பா சுருக்கமாகவும் அமைவது அவரது மார்க்க விளக்கத்திற்கு அடையாளமாகும். எனவே, தொழுகையை நீட்டுங்கள், குத்பாவைச் சுருக்குங்கள். நிச்சயமாக பேச்சில் ஒருவகையான சூனியத் தன்மை உள்ளது.” (முஸ்லிம்)
எனவே, எவர் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள பிரகாரம் சுருக்கமாக, கருத்தாழமிக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது குத்பாவை அமைத்துக் கொள்கிறாரோ, நிச்சயமாக அவர் மார்க்க விளக்கமுடையவர் என்பதற்கு போதிய ஆதாரமாக விளங்குவார்.
இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “ஏனெனில், அவர் நபியவர்களின் விரிவான கருத்தைக் கொடுக்கக்கூடிய சுருக்கமான வார்த்தைப் பிரயோகங்களை நோட்டமிட்டுள்ளதால், அவரால் விரிவான கருத்துக்களைத்தரக்கூடிய சொற்களை பயன்படுத்த முடிகின்றது. அதனாலேயே அவரை மார்க்க விளக்கமுடையவராக நபியவர்கள் அடையாளப்படுத்தியுள்ளார்கள்” என்கிறார்.
- ஜாபிர் இப்னு சமுரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நபியவர்கள் தனது ஜும்ஆப் பிரசங்கத்தை நீட்டமாட்டார்கள். அது சொற்ப சொற்களைக் கொண்டதாகவே இருந்தது.” (அபூதாவுத்)
- அல்ஹகம் இப்னு ஹஸ்ன் (ரழி) அவர்கள் நபியவர்களுடன் ஒரு ஜும்ஆவில் பங்கேற்றிருந்தார். அதன் போது நபியவர்கள் ஒரு வில்லை அல்லது தடியை ஊண்றிய நிலையில் எழுந்து அல்லாஹ்வைத் துதி செய்து, சொற்பமான, சிறந்த, அருள்பொருந்திய வார்த்தைகளை மொழிந்தார்கள் எனக்கூறுகின்றார். (அஹ்மத், அபூதாவூத்)
- ஜாபிர் இப்னு சமுரா (ரழி) அவர்கள் கூறினார்கள். “நபியவர்களுக்கு இரு குத்பாக்கள் இருந்தன. அவற்றுக்கிடையில் அவர்கள் உட்காருவார்கள். மேலும், அவற்றில் அல்குர்ஆனை ஓதுவார்கள். மக்களுக்கு ஞாபகமூட்டுவார்கள். அவர்களது தொழுகையும் குத்பாவும் நடுத்தரமானதாக இருந்தன.” (முஸ்லிம்)
இங்கு நபியவர்களினது தொழுகையும் குத்பாவும் நடுத்தரமானதாக இருந்தன என்று சொல்லப்பட்டது, இரண்டும் சம அளவையுடையதாக இருந்தன என்ற கருத்தைக் கொடுக்காது மாற்றமாக, முன்பு அம்மார் (ரழி) அவர்களின் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட பிரகாரமே அமைந்திருந்தன என்பதைக் கவனத்திற் கொள்க.
எனவே, நபியவர்களின் வழிமுறையை நன்கு நோட்டமிட்டுப் பாருங்கள். அவரது சொல்லும் செயலும் எவ்வாறு ஒருமித்துக் காணப்பட்டிருந்தன? உண்மையில் குத்பாவின் நோக்கம் மக்களுக்கு உபதேசம் செய்வதும், அவர்களின் இரட்சகனின் கட்டளையை ஞாபகப்படுத்துவதுமாகும். இந்நோக்கத்தை மிகக் குறுகிய வார்த்தைகளால் அடைந்து கொள்ளலாம். எம்முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் குத்பாக்களைப் பார்த்தாலும் இவ்வுண்மையைக் காணலாம். அவர்களின் குத்பாக்கள் கணக்கிட முடியுமான சில வார்த்தைகளாகவும், கேட்போர் அனைவரும் மனதில் பதிந்து வைத்திருக்கத்தக்க விரிவான கருத்தைத் தருகின்ற குறுகிய சொற்களுமாகவே இருந்தன.
குத்பாவைச் சுருக்குவதற்கு ஏவப்பட்டமைக்கான காரணங்கள்
பொதுவாக, குத்பாக்கள் மற்றும் உபதேசங்களைச் சுருக்குவதற்கு கட்டளை இடப்பட்டமைக்கான காரணங்களாவன:
  • - கேட்போர் மத்தில் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க.
  • - மனிதர்களின் உள்ளங்களில் குத்பாவுக்கு இருக்கின்ற மதிப்பைப் பாதுகாக்க.
  • - அறிவு மற்றும் நல்லவற்றை செவியேற்பதில் வெறுப்படைந்து, தடைசெய்யப்பட்ட விடயங்களில் ஆர்வம் கொள்ளும் நிலை ஏற்படுவதைத் தடுக்க.
  • - குறித்த விடயத்தை கேட்போர் மனதில் இலகுவாகப் பதிய வைக்க.
உண்மையில், குத்பாக்கள் நீளமாக அமைவதால் பொரும்பாலும் அவற்றை செவிமடுப்போருக்கு ஆரம்பமும் இறுதியும் புரியாத நிலை ஏற்படும். அத்தோடு மக்களும் அவற்றையிட்டு சோர்வடைந்து போவர். இந்நிலை ஏற்படுவது குறித்து இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறும் போது: “மக்கள்; குத்பாவையிட்டு சோர்வடையாமல் இருக்கும் அளவுக்கு அதைச் சுருக்குவது விரும்பத்தக்கதாகும். மேலும், அதன் சுருக்கமான தன்மை நடுநிலையானதாக இருக்க வேண்டும். அதனது நலவுகள் அனைத்தும் அழிந்து போகும் அளவுக்கு அதனில் எல்லைமீறிச் செல்லலாகாது” என்கிறார். (அஷ்ஷரஹுல் மும்திஉ, அல்மஜ்மூஉ)
அபூஉபைதா அவர்கள் கூறும் போது: “நிச்சயமாக நபியவர்கள் அதனை மார்க்க விளக்கத்தின் அடையாளமாக வைக்கக் காரணம், தொழுகையானது அடிப்படையாகவும் குத்பாவானது அதனில் இருந்தும் பிரிந்ததுமாக இருப்பதுமாகும். எனவே, மார்க்க சட்டக்கலை சார் நடைமுறைபடி அடிப்படையாகத் திகழும் ஓர் அம்சத்தின் தாக்கம் அதனில் இருந்தும் பிரிந்த அம்சத்தில் மேலதிகமாகக் காணப்பட வேண்டும்” என்கிறார். (மிர்காத்துல் மபாதீஹ்)
தேவையின் நிமித்தமாக குத்பாவை நீட்ட முடியுமா?
சில சமயங்களில் ஒரு கதீபுக்கு முக்கிய தேவை நிமித்தமாக குத்பாவை நீட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். தற்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அல்லது மக்களை வழிகெடுக்கும் சந்தேகங்கள் மக்கள் மன்றத்தில் காணப்படும் போது அவற்றைச் சுட்டிக்காட்டி தக்க வழிகாட்டல்களை ஒரு கதீப் முன்வைக்க நாடுகையில் இப்படியான இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படலாம். இந்நிலமைகளில் குத்பாவை நீட்டுவது நபியவர்கள் குத்பாவை சுருக்கச் சொன்ன போதனைகளுக்கு முரணாக அமையாது. ஏனெனில், இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவது மிகக் குறைவு. அச்சந்தர்ப்பங்களில் சொற்பொழிவொன்றை நீட்ட முடியும் என்பதைத் தெளிவுபடுத்தி ஒரு செய்தி முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
“(ஒரு முறை) நபியவர்கள் பஜ்ருத் தொழுகை தொழுதார்கள். பிறகு மின்பர் மீது ஏறி ளுஹர் வரை உரை நிகழ்த்தினார்கள். பிறகு இறங்கி தொழுதுவிட்டு மீண்டும் மின்பர் மீது ஏறி அஸர்வரை உரை நிகழ்த்தினார்கள். அஸர் தொழுகையைத் தொடர்ந்து மீண்டும் மின்பர் மீது ஏறி மஃரிப் வரை உரை நிகழ்த்தினார்கள். அவற்றில் என்ன நடந்தது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிக் குறிப்பிட்டார்கள்.”
இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “குத்பாக்களின் போது நபியவர்களின் வழிமுறையானது, அவர்கள் சில சமயங்களில் தனது குத்பாவைச் சுருக்கிக் கொள்வார்கள் மற்றும் சில சமயங்களில் மக்களின் தேவைக்குத் தக்கவிதத்தில் நீட்டிக் கொள்வார்கள்.” (ஸாதுல் மஆத்)
அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “சில சமயங்களில் குத்பாவை நீட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. அச்சந்தர்ப்பத்தில் தேவைக்கு ஏற்றவித்தில் ஒருவர் தனது குத்பாவை நீட்டினால், மார்க்க அறிவுள்ளவர் என்ற வட்டத்தைவிட்டும் அச்செயல் அவரை வெளியேற்றிவிடாது” என்கிறார். (அஷ்ஷரஹுல் மும்திஉ)
நாம் மேலே குறிப்பிட்ட தகவல்களில் இருந்து மார்க்கமானது தொழுகையை நீட்டுமாறு கட்டளை பிறப்பித்துள்ளது என்பதை விளங்கிக் கொண்டிருப்பீர்கள். ஆயினும், அவ்வாறு நீட்டுவது குத்பாவின் சுருக்கத்திற்குத் தக்கவிதத்தில் இருக்க வேண்டும். இவ்விடயத்தை ஜும்ஆத் தொழுகையில் ஓதுவதற்காகக் காட்டித்தரப்பட்ட அத்தியாயங்களின் அளவை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அதன்படி, சில சமயங்களில் அல்அஹ்லா அல்காஸியா அத்தியாயங்களையும் மற்றும் சில சமயங்களில் அல்ஜும்ஆ அல்காஸியா அத்தியாயங்களையும் மேலும் சில சமயங்களில் அல்ஜும்ஆ அல்முனாபிகூன் அத்தியாயங்களையும் ஓதிவருகின்றோம். இம்மையக்கருத்தையே நாம் முன்பு குறிப்பிட்ட நபியவர்களின் தொழுகையும் குத்பாவும் நடுத்தரமாக இருந்தன என்ற செய்தி உறுதிப்படுத்துகின்றது.
எம்முன்னோர்களின் குத்பாக்கள் எவ்வாறு இருந்தன?
இது விடயத்தில் எம்முன்னோர்கள் குத்பாவின் போது சுன்னாவாகக் காட்டித்தரப்பட்ட அம்சங்களை தமது கடைவாய்ப் பற்களால் பற்றிப்பிடித்துக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். சான்றாக:
- ஒரு சமயம் உஸ்மான் (ரழி) அவர்கள் குத்பா செய்தார்கள். அதனை மிகவும் சுருக்கமாக அமைத்தார்கள். அப்போது அவரை நோக்கி நீங்கள் உங்களது குத்பாவை சற்று நீட்டியிருந்தால் நன்றாய் இருக்குமே! எனக்கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “நபியவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன்: “ஒருவரின் குத்பா சுருக்கமாக அமைவது அவருடைய மார்க்க விளக்கத்தின் அடையாளமாகும். எனவே, உங்களது தொழுகையை நீட்டுங்கள், குத்பாவைச் சுருக்குங்கள்”" எனக் கூறியதாகப் பகர்ந்தார்கள். (முஸ்லிம்)
- அபூராஷித் (ரஹ்) கூறினார்கள்: “ஒருமுறை அம்மார் (ரழி) அவர்கள் எங்களுக்கு குத்பா நிகழ்த்தினார்கள். அதனை சுருக்கமாக அமைத்தார்கள். அதற்கு ஒரு மனிதர் அவரிடத்தில் வந்து நீங்கள் நிவாரணம் அளிக்கக்கூடிய சில வார்த்தைகளைக் கூறினீர்கள். தாங்கள் அதனை நீட்டியிருந்தால் நன்றாக இருக்குமே! எனக் கூறினார். அதற்கு அவர், “நிச்சயமாக நபியவர்கள், நாங்கள் குத்பாவை நீட்டுவதைவிட்டும் தடுத்தார்கள்” என பதிலளித்தார்.” (அஹ்மத், இப்னு அபீ ஷைபா, அல்பைஹகி)
- உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் தொழுகையை நீட்டுங்கள் குத்பாவைச் சுருக்குங்கள்.” (பதாஇஉஸ் ஸனாஇஉ)
மேலும், அவர் கூறுகையில்: “தொழுகை நீளமாக இருப்பதும், குத்பா சுருக்கமாக இருப்பதும் ஒருவரின் மார்க்க விளக்கத்தில் நின்றும் உள்ளதாகும்” என்கிறார். (அல்பைஹகி)
- அம்ரு இப்னு ஷர்ஹபீல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவரிடத்திலுள்ள மார்க்க விளக்கத்திற்கு எடுத்துக்காட்டு, அவர் குர்பாவைச் சுருக்குவதும், தொழுகையை நீட்டுவதுமாகும்.” (அத்தம்ஹீத்)
இவ்வழிமுறையையே மார்க்க சட்டவல்லுநர்களினதும், ஹதீஸ் துறை வல்லுநர்களினதும் கூற்றுக்களில் காண முடிகின்றது.
- இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “சோர்வடையாமல் இருப்பதற்காக குத்பாவைச் சுருக்குவது விரும்பத்தக்கதாகும்.”
- இமாம் காஸானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “குத்பாவின் அளவு அல்குர்ஆனில் உள்ள முபஸ்ஸல் எனும் வகையைச் சேர்ந்த அத்தியாயங்களின் அளவுக்கு நீளமானதாக இருக்க வேண்டும்.”
குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முபஸ்ஸல் வகையைச் சேர்ந்த அத்தியாயங்கள் என்பதின் மூலம் நாடப்படுவது, அல்காப் அத்தியாயத்திலிருந்து அந்நாஸ் அத்தியாயம் வரையில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்களாகும்.
- இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “குத்பாவை நீட்டுவதை விட அதனை சுருக்குவது மிகச்சிறந்ததாகும்.”
- மிர்காத் எனும் நூலில் கூறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏனெனில் தொழுகையானது பிரதானமாக நாடப்பட்டுள்ள அம்சமாகும். குத்பாவைப் பொருத்தளவில் அது தொழுகைக்கான முன்னேற்பாடாகும். எனவே, மிகமுக்கியமானதிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும்” எனப் பதிவாகியுள்ளது.
- பத்ஹுர் ரப்பானி எனும் நூலில் இடம்பெற்றுள்ளதாவது: குத்பாவை சுருக்குவது விரும்பத்தக்கது என்ற விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கவில்லை. நிச்சயமாக அவர்களுக்கு மத்தியில் காணப்பட்ட கருத்து வேறுபாடானது, ஏற்றுக் கொள்ளத்தக்க குத்பாவின் சுருக்கமான அளவு எது? என்ற விடயத்திலேயாகும்.
-
- இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “குத்பாவை நீட்டுவது கூடாது.” (அல்முஹல்லா)
- இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் நபியவர்களின் குத்பா குறித்துப் பேசும் போது: “நபியவர்கள் குத்பாவை சுருக்கக்கூடியவர்களாகவும், தொழுகையை நீட்டக்கூடிவர்களாகவும் இருந்தார்கள். மேலும், அதனில் அதிகமாக ஞாபகமூட்டக்கூடியவர்களாகவும், விரிவான கருததுக்களை உள்ளடக்கியிருக்கக்கூடிய சுருக்கமான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்” என்கிறார்.
- இமாம் அல்பைஹகி (ரஹ்) அவர்கள் தனது சுனன் எனும் நூலில் ஜும்ஆ எனும் தலைப்பின் கீழ் பேச்சை சுருக்குவதும், அதனை நீட்டுவதைத் தவிர்ப்பதும் விரும்பத்தக்கது என்பதைப் பற்றிய பாடம் என உபதலைப்பிட்டுள்ளார்.
- முஸ்லிம் எனும் கிரந்தத்தில் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் “தொழுகையையும், குத்பாவையும் சுருக்குவது தொடர்பான பாடம்” என உபதலைப்பிட்டுள்ளார். (முஸ்லிம்)
எனவே, இந்த சுன்னாவின் நிழலில் பிரயாணிக்குமாறு கதீப்மார்களுக்கு வஸிய்யத் செய்கின்றேன். நிச்சயமாக அனைத்து நலவுகளும் அன்னாரது வழிமுறையைக் கடைபிடிப்பதில் தான் தங்கியுள்ளன. அவர் தனது உம்மத்தினர் மீது அதிக அன்பு வைத்துள்ளவர். அதனாலேயே அதற்கேற்ற வழிகாட்டல்களை எமக்குத் தந்துள்ளார். அவற்றில் பொடுபோக்காக இருப்பதோ, அவை விடயத்தில் எல்லைமீறிச் செல்வதோ எமக்கு உகந்ததல்ல. மாற்றமாக, சுன்னாஹ் எமக்குக் காட்டித்தந்த அளவுடன் நின்று கொள்வது என்றைக்கும் பொருத்தமாக இருக்கும்.
இன்று நாம் வாழும் காலம் இஸ்லாமிய மார்க்கம் உருப்பெற்ற காலத்தைவிட்டும் வெகுதொலைவில் உள்ளது. மார்க்கக்கல்வியானது பல கோணங்களிலும் வியாபித்துள்ளது. ஒவ்வொருவரும் தத்தமது அபிப்பிராயத்திற்கு முதலிடமளித்து அவற்றை மக்கள் மன்றத்தில் அரங்கேற்றும் காலமிது! மேலும், அவற்றிக்கு மின்பர் மேடைகளைப் பேராயுதமாகப் பயன்படுத்தியும் வருகின்றனர். இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நீங்கள் தொழுகையை நீட்டுவதும், குத்பாவைச் சுருக்குவதுமான ஒரு காலத்தில் இருக்கின்றீர்கள். இக்காலத்தில் உலமாக்கள் அதிகமாகவும், ஹதீப்கள் குறைவாகவும் இருக்கின்றார்கள். மேலும் மக்கள் மத்தியில் ஒரு காலம் வரும் அக்காலத்தில் தொழுகை சுருக்கமாகவும் குத்பா நீளமாகவும் இருக்கும். அக்காலத்தில் ஹதீப்கள் அதிகமாகவும், உலமாக்கள் குறைவாகவும் இருப்பார்கள்.” (அத்தபராணி, இச்செய்தியை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது அல்அதபுல் முப்ரத் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இமாம் அல்ஹய்ஸமி அவர்கள் இச்செய்தியின் தரம்குறித்துப் பேசுகையில், “இதன் அறிவிப்பாளர் தொடர் மிகச் சரியானதாக உள்ளது” என்கிறார். அஷ்ஷெய்க் அல்பானி (ரஹ்) அவர்களும் இச்செய்தியானது ஹஸன் எனும் தரத்தை பெறுவதாகக் கூறுகின்றார்.)
மற்றோர் அறிவிப்பில்: “அதிலே குத்பாவை நீட்டுவார்கள், தொழுகையைச் சுருக்குவார்கள். தங்களது கடமைகளுக்கு முன்னதாக மனோ இச்சைகளுக்கு முதலிடம் அளிப்பார்கள்” என்றார். (ஹாகிம்)
இச்செய்தி குறித்து அஷ்ஷெய்க் ஹமூத் அத்துவைஜிரி (ரஹ்) அவர்கள் கூறும் போது: “இச்செய்திக்கு மர்பூஉ – நபியவர்கள் வரை சென்றடையக்கூடிய அறிவிப்பு – உடைய சட்டத்தை வழங்க வேண்டும். ஏனெனில், இவ்விடயம் முழுமையாக மறைவான விடயங்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. இப்படியான ஒன்றை அவர் சொந்த அபிப்பிராயத்தை மையமாக வைத்து கூறியிருக்க முடியாது. நிச்சமயாக அது ஒரு நிலையான முடிவையிட்டே கூறியிருக்க முடியும்” என்கிறார்.
அன்பார்ந்த வாசகர்களே! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்! மேற்குறித்த தகவல்களை நீங்கள் நன்கு கருத்தூண்டி வாசித்துப்பாருங்கள். நபியவர்கள் எமக்குக் காட்டித்தந்த சுன்னாவுக்கு பக்கபலமாக இருந்து கொள்ளுங்கள். எப்போதும் எமக்கு வெற்றி அன்னாரது நடைமுறையில் நிலைத்திருக்கும் போது தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.
Source http://www.islamkalvi.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails